|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 January, 2012

ஜனவரி 12 விவேகானந்தரின் 150வது பிறந்ததினம்...

விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12-ம் தேதியைத் தேசிய இளைஞர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடுகின்றனர். விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது. சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது.1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் இறைவனுடன் கலந்தார்.  

விவேகானந்தரின் பொன்மொழிகள்:  நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!"

உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்

உங்கள் தவறுகளைப் பெரும்பேறாக நினையுங்கள். அவை நம்மை அறியாமலே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள் என்றால் மிகையில்லை. அழுகை பலவீனத்தின் அறிகுறி. அடிமைத்தனத்தின் அறிகுறி.

தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் பயனேதும் இல்லை. போராட்டம் இல்லாத வாழ்க்கை சுவையாக இருக்காது.

தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத் தவிர யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.

கோபப்படும் மனிதனால் அதிக அளவோ அல்லது செய்யும் பணியைச் சிறப்பாகவோ செய்ய முடியாமல் போய் விடும். ஆனால், அமைதியானவனோ சிறப்பாகப் பணியாற்றுவான்.

மன்னிக்கக் கூடியதும், சமநோக்குடையதும், நிலை தடுமாறாததுமான மனதை எவன் பெற்றிருக்கிறானோ அவனே ஆழ்ந்த அமைதியில் திளைத்திருப்பான்.

கருணை என்பது சொர்க்கத்தைப் போன்றது. நாம் அனைவரும் கருணையுள்ளவர்களாக மாறி சொர்க்கத்தில் மகிழ்ந்திருப்போம்.

சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்தபோதும் சுயநலம் இல்லாதவனாக இருந்தால் அவனிடம் கடவுள் இருக்கிறார். ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள்.

மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்றபின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள். உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள். காலம் எல்லாம் அழுது கொண்டிருந்தது போதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது. சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்.

தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் எல்லாவழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பவனே உண்மையான வழிபாடு செய்பவன் ஆவான்.

கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு கடவுள் ஒருவர் உலகில் இல்லை.உயிர்களுக்கு சேவை செய்வதன் மூலம் நாம் கடவுளுக்கே சேவை செய்தவராகிறோம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...