|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 January, 2012

மாட்டுப்பொங்கல்...


பசுவுக்கான நேரம்: சூரியன் உதிக்கும் முன்பே பசுக்களை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வர். கூட்டமாகச் செல்லும் பசுக்களின் குளம்படி பட்டு புழுதி பறக்கும். இத்தூசி பட்ட காற்று, பாவம் போக்கும் தன்மை கொண்டதாகும். இதற்கு "கோதூளி' என்று பெயர். அதிகாலைப் பொழுதை ஜோதிட சாஸ்திரம், "கோதூளி லக்னம்' என்று பசுவின் பெயரால் குறிப்பிடுகிறது. இவ்வேளையில் செய்யும் பூஜை,மந்திர ஜெபம்,புதுமனை புகுதல், மந்திர உபதேசம், ஹோமம், யோகப்பயிற்சி, பாடம் பயில்தல் போன்ற சுபவிஷயங்கள் பன்மடங்கு பலன் தரும். மனம் மிகத் தூய்மையுடன் இருப்பதால், இந்தநேரத்தை, "பிரம்ம முகூர்த்தம்' என்றும் குறிப்பிடுவர். கோதூளி லக்னத்தில் கோயில்களில் விஸ்வரூபதரிசனம் நடத்தி சுவாமிக்கு முன் கோபூஜை நடத்துவர்.

ஒரு பிடி புல்லை போடுங்க! தர்மதேவதையின் வடிவமாகத் திகழும் பசுவைப் பாதுகாத்தால் உலகில் தர்மம் நிலைத்திருக்கும். தவம், தூய்மை, கருணை, சத்தியம் என்னும் நான்கும் நான்கு கால்களாக தர்மத்தை தாங்குகின்றன. கலியுகத்தில் கலியின் கொடுமை தீர கோபாலகிருஷ்ணரை வழிபட்டு பசுக்களைப் பாதுகாக்கவேண்டும். மகாபாரதத்தில், பீஷ்மர் தர்மத்தை உபதேசிக்கும்போது, கோசம்ரக்ஷணம் என்னும் பசுபாதுகாப்பு பற்றி விளக்குகிறார். பசுவைத் தானம் அளித்தால் பெரும் பாவம் கூட நீங்கும். ""எந்த நாட்டில் பசுக்கள் தங்களுக்கு இம்சை நேருமோ என்ற பயமில்லாமல் நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறதோ அந்த நாட்டில் பாவம் என்பதே இருக்காது. அந்நாடே ஒளியுடையதாய் பிரகாசிக்கும்,'' என்றுசியவன மகரிஷி கூறியுள்ளார். இதற்காக, பெரிய கோயில்களில் கோமடம் நிறுவி பசுக்களைப் பாதுகாத்தனர். ஒவ்வொருவரும் செய்யவேண்டிய தினக்கடமைகளில் ஒன்றாக, "கோகிராஸம்' என்பதைக் குறிப்பிடுகிறது. ஒருகைபிடி புல்லையாவது பசுவுக்கு கொடுப்பதே கோகிராஸம் எனப்படும்.

மாலை நேரப்பொங்கல்: பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் மாலைநேரம். அதற்கும் காரணம் உண்டு. கண்ணன் காலையில் பசுக்களை ஓட்டிக் கொண்டு பிருந்தாவனத்திற்கு மேய்ச்சலுக்குச் சென்று விட்டு, மாலையில் குழலூதியபடியே ஆயர்பாடிக்கு திரும்பி வருவான். அதனால் மாட்டுப்பொங்கலை மாலையில் வைக்கும் வழக்கம் உண்டானது. பசுக்களை நீராட்டி, கொம்புகளில் வர்ணம் தீட்டி அழகுபடுத்துவர். பசுவின் கழுத்தில் மணியும், வேட்டியும் கட்டுவர். மாட்டுக் கொட்டிலின் முன் பொங்கலிட்டு, காளை, பசுவிற்குப் படையலிடுவர். பொங்கல் பொங்கும் போது, ""பட்டிபெருக பால் பானை பொங்க'' என்று சொல்லி குலவையிடுவர். அதன்பின்னர், பசுமாட்டை கோயிலுக்கும், காளைமாட்டை மஞ்சுவிரட்டுக்கும் அழைத்துச் செல்வர்.

வெள்ளை மனசு: நல்ல மனிதனைக் குறிப்பிடும்போது, "அவனுக்கு பாலைப் போல வெள்ளை மனசு' என்று குறிப்பிடுவர். குழந்தையின் சூதுவாது ஏதும் அறியாத தன்மையை, "பால் மணம் மாறாத பச்சிளங்குழந்தை' என்பர். பாலைக் காய்ச்சக் காய்ச்ச தன் சுவையைக் கூட்டுவது போல, நல்லவனுக்கு துன்பம் நேர்ந்தாலும் தன் உயர்ந்த குணத்தை ஒருபோதும் விடுவதில்லை என்று அவ்வையார் நல்லவரை பசும்பாலோடு ஒப்பிடுகிறார். நிலாவினைக் குறிப்பிடும்போது, "பால்நிலா' என்றே சொல்வர். கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம் என்றாலே அது "பாலபிஷேகம்' மட்டும் தான். இவ்வாறு உயர்ந்த குணத்தின் பிரதிபலிப்பாக பசுவின் பால் விளங்குகிறது.

ஆயுசு வரை பால் தரும் கோமாதா: பசு பற்றி காஞ்சி பெரியவர் "அம்மா' என்று குரல்கொடுப்பது பசு. ஆனால், அந்தப் பசு நமக்கெல்லாம் அம்மாவாக இருக்கிறது. நாம் குழந்தையாயிருந்த போது நம்மைப் பெற்றெடுத்த தாயார் நமக்குப் பாலூட்டி உயிரூட்டினாள். அதுபோல, நமக்கு வயதான பின்னரும் பசு தரும் பாலும், அதிலிருந்து கிடைக்கும் தயிர், மோர், நெய் ஆகியவையும் நம் ஆகாரத்தில் தொடர்ந்து இடம் பெறுகின்றன. நம்முடைய ஆயுசின் ஆரம்பத்தில் ஒரு குறுகிய காலகட்டத்தில் மாத்திரம் நம்மைப் பெற்றெடுத்த தாய்பால் தருகிறாள் என்றால் பசுவோ நம்முடைய ஆயுள்காலம் பூராவும் பால் தருகிறது. அதனால் தான் உறவுகளிலேயே உத்தமமான தாய்க்கு ஈடாக, பசுவை, "கோமாதா' என்று சொல்கிறோம். பெற்றெடுத்துப் பாலூட்டும் மாதாவை ஜனகமாதா என்போம். அதே மாதிரி கோமாதாவும் இருக்கிறாள். பூமிக்குள் இருந்து காய்கறி, பழம், உலோகங்கள் தரும் தாயை "பூ மாதா' என்கிறோம். மிருகமாகத் தெரிகிற பசு, ஜடமாகத் தெரிகிற பூமி ஆகிய எல்லாவற்றிலும் உயிருள்ளதும், அன்பே உருவமான துமான தாயன்பை, மாத்ருத்வம் என்னும் தாய் தத்துவத்தைக் கண்டு, நம்முடைய முன்னோர் கோமாதா என்றும், பூமாதா என்றும் சொன்னார்கள்.

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா! ஸ்ரீகிருஷ்ண ஸ்தோத்திரம் பாகவதத்தில் இடம் பெற்றுள்ளது. இதன் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது. மாட்டுப்பொங்கலான இன்று பாலகிருஷ்ணரை தியானித்து இதனைப் பாராயணம் செய்தால் நற்பலன் உண்டாகும்

* மேலான கடவுளே! அனைத்து உயிர்களின் உள்ளும் புறமும் வீற்றிருப்பவனே! மாயையில் இருந்து விடுவிப்பவனே! யாரும் அறியமுடியாத அதிசயமானவனே! அழிவற்றவனே! ஞானம் நிறைந்தவனே! பக்தியோகம் அறியாத நான் உம்மை வணங்குகிறேன்.

* வசுதேவரின் பிள்ளையே! தேவகியின் வயிற்றில் உதித்தவனே! நந்தகோபரின் குமாரனே! பசுக்களைப் பரிபாலனம் செய்தவனே! கிருஷ்ணனே! உம்மை பலமுறை வணங்குகிறேன்.

* நாபிக்கமலம் கொண்டவனே! தாமரை மாலை அணிந்தவனே! தாமரை மலரைப் போன்ற கண்களைக் கொண்டவனே! பத்மரேகை அமைந்த திருப்பாதங்களைக் கொண்டவனே! உம்மை சரணடைகின்றேன்.

* சிறையில் வாடிய தேவகியைக் காத்தவனே! அரக்குமாளிகையில் நெருப்பிட்டபோது பாண்டவர்களைக் காத்தவனே! திரவுபதியின் மானத்தைக் காத்த தயாபரா! ஜகத்குருவான கிருஷ்ணா! பிறவிச்சுழலில் இருந்து காத்தருள்வாயாக.

* பற்றற்ற ஞானியர் நெஞ்சில் குடிகொண்டவனே! முகுந்தனே! வசுதேவனே! கிருஷ்ணா! அடக்கம் கொண்ட நல்லவர்களால் மட்டும் அடையத் தக்கவனே! ஏழைகளையும், நல்லவர்களையும் சொத்தாக நினைப்பவனே! மோட்சத்தை அருள்பவனே! உம் திருவடியில் அடைக்கலம் புகுந்துவிட்டேன். காத்தருள்வாயாக.

பசு ஸ்லோகம் சொல்லுங்க! ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சமாகவோ அல்லது பலம் இழந்தோ இருந்தால் பசுசாபம் இருக்கும் என்று ஜோதிடசாஸ்திரம் கூறுகிறது. இதனால், தம்பதியருக்குள் ஒற்றுமை இல்லாமல் பிரிந்திருக்க நேரிடும். இதற்குப் பரிகாரமாக வெள்ளிக்கிழமையில் பசுவை வழிபடுவது சிறந்த பரிகாரம். காலையில் நீராடி பச்சைப்புல், அகத்திக்கீரை முதலியவற்றை எடுத்துக் கொண்டு பசுவை மூன்றுமுறை வலம் வந்தபடி இந்த பசு ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். கொடிய பாவம் கூட இவ்வழிபாட்டின் மூலம் நீங்கும் என்று முனிவர்கள் கூறியுள்ளனர். இவ்வழிபாட்டை வெள்ளியன்று சுக்கிர ஓரையில் செய்வது மிகவும் சிறப்பாகும்.

ஸ்லோகம்:
ஸெளர பேய்ய: ஸர்வ ஹிதா:
பவித்ரா: புண்யராஸய:!
ப்ரதிக்ருண்ணம்த்விமம் க்ராஸம்
காவஸ்த்ரைலோக்ய மாதர:!!

பொருள்: காமதேனு வம்சத்தை சேர்ந்தவளே! எல்லோருக்கும் நன்மை அருள்பவளே! தூய்மையானவளே! புண்ணிய வடிவானவளே! மூவுலகத்திற்கும் தாயாகத் திகழ்பவளே! இந்தப் புல்லைப் பெற்றுக் கொள்வாயாக. இந்த ஸ்லோகத்தைச் சொல்லியபடி பசுவை மூன்று முறை வலம் வந்து வணங்கவேண்டும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...