ஆதரவற்றோர் இல்லம் கட்டுவதாகக் கூறி, சென்னையில் தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலய இடத்திற்கு சிறப்பு அனுமதி பெற்றுள்ளனர். விதிப்படி ஆதரவற்றோர் இல்லம் அமைக்காததால், சிறப்பு அனுமதியை ரத்து செய்து, திறந்த வெளி இடத்தை மாநகராட்சியிடமே ஒப்படைக்கும் வகையில், அரசு ஆணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று, சென்னை மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார். இதனால், அறிவாலயஇடத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி கூட்டம், மேயர் சைதை துரைசாமி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டம் துவங்கியதும் கேள்வி நேரம் நடந்தது. கவுன்சிலர் ஆறுமுகம் (எ) சின்னையன், ""அறிவாலயத்தில் திறந்த வெளி நிலங்களுக்கு சி.எம்.டி.ஏ., மூலம் தான பத்திரம் வழங்கி, பத்திரப்பதிவு செய்திருக்கின்றனரா, பொதுமக்கள் அங்குள்ள பூங்காவை பயன்படுத்த அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா?'' என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து சைதை துரைசாமி கடந்த 1980ல் எம்.ஜி.ஆர்., ஆட்சி கலைக்கப்பட்டு, கவர்னர் ஆட்சியின் போது, தி.மு.க., அறக்கட்டளை ஒரு கோரிக்கை வைத்தது. அறிவாலய இடத்தில் பல மாடி கட்டடம் கட்ட, அரசாணை வெளியிடப்பட்டது. இதில், 10 சதவீத திறந்தவெளி நிலத்தை, அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஆறு ஆண்டுகளுக்குப் பின், தி.மு.க., அறக்கட்டளை சார்பில், சில சலுகைகள் கேட்டு அரசாணையில் திருத்தம் வேண்டி மேல்முறையீடு செய்தனர். அது நிலுவையிலேயே இருந்தது. எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், கவர்னர் ஆட்சியின் போது, "அனாதை இல்லம்' கட்டுவதாகக் கூறி, அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றனர். கடந்த 2004ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியின் போது, அறக்கட்டளைக்கு அனுமதி அளித்ததை ஏன் ரத்து செய்யக்கூடாது என நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அடுத்து தி.மு.க., ஆட்சிவந்ததும், 2007ம் ஆண்டில்,தி.மு.க., அறக்கட்டளை எழுதிய விளக்க கடிதத்தை ஏற்று, மேல் நடவடிக்கை தேவையில்லை என கோப்பு முடிக்கப்பட்டுள்ளது. ஆதரவற்றோர் இல்லம் கட்ட சிறப்பு அனுமதி பெற்று, இதுவரை அதை செயல்படுத்தாமல் இருப்பதால், தி.மு.க., அறக்கட்டளை திறந்தவெளி நிலத்தை பதிவு செய்யாமல் பெற்ற சிறப்பு ஆணையை ரத்து செய்யவும், நிலத்தை மாநகராட்சிக்கு வழங்க அரசு ஆணை பிறப்பிக்கக் கோரி, அரசுக்கு பரிந்துரைத்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சைதை துரைசாமி தெரிவித்தார். இதற்கு தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அவர்களை பேச விடாமல் சத்தம் போட்டனர். இதனால், கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
அந்த இடத்தில் பூங்கா உள்ளது; பொது நூலகம் உள்ளது. மன்றத்தில் தவறான தகவல்களை மேயர் தருகிறார்' எனக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் போஸ் மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் போஸ் கூறும்போது, ""தி.மு.க.,வினர் மக்கள் பிரச்னைகள் குறித்து பேச அனுமதிக்கப்படுவதில்லை. வீடியோகிராபர்களை உள்ளே அனுப்ப மறுக்கின்றனர். மன்றம் மன்றமாக நடக்கவில்லை. மேயர் சர்வ அதிகாரம் படைத்தவர் போல் செயல்படுகிறார். எனவே,வேறு வழியின்றி தான் வெளிநடப்பு செய்தோம்,'' என்றார். கவுன்சிலர் மீது தாக்குதல்: தி.மு.க., கவுன்சிலர் வாசு, "விரிவாக்கப் பகுதிகளில் ஏற்கனவே கட்டிய கட்டடங்களின் மேல், கட்டடம் கட்டப்படுகிறது. இதில் விதிமீறல் இருந்தால் என்ன செய்வது' என, கேள்வி எழுப்பினார். பதிலளித்த மேயர், "எவ்வித கட்டடமாக இருந்தாலும், விதிமுறைப்படி தான் கட்ட வேண்டும். புதிதாக கட்டுமானப் பணி துவங்கும்போதே, விதிமுறை மீறல் உள்ளதா என கண்காணிக்கப்படுகிறது' என்றார். வாசு மேலும் கேள்விகள் கேட்க முயன்றபோது, "ஒரு துணை கேள்வி தான்; அதற்கு மேல் அனுமதிக்க முடியாது,'' என்று மேயர் அனுமதி மறுத்தார். அப்போது வாசு, மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மன்றத்தில் தி.மு.க., கவுன்சிலர்களுக்கு பேச்சுரிமை மறுக்கப்படுவதாகக் கூறி, தி.மு.க., கவுன்சிலர்கள் மீண்டும் வெளிநடப்பு செய்தனர். வெளியேறிய வாசுவை, பெண் கவுன்சிலர்கள், கையில் இருந்த தீர்மான நோட்டு மற்றும் கைகளைக் கொண்டு தாக்கினர். ஆத்திரமடைந்த கவுன்சிலர் சத்தம் போட்டுக் கொண்டே மேயர் இருக்கை நோக்கிச் சென்றார். அவரது சத்தம் கேட்டு, தி.மு.க., கவுன்சிலர்களும் வந்தனர். மேயர் இருக்கை அருகே சென்று தி.மு.க.,வினர் வாக்குவாதம் செய்துவிட்டு மீண்டும் வெளியேறினர்
No comments:
Post a Comment