1891ம் ஆண்டு பெண்ணுக்கு, குறைந்தபட்ச திருமண வயது, 12 என ஆங்கிலேய அரசு சட்டம் இயற்றியது. மரபுக்கு எதிரானது என மக்கள் எதிர்த்தனர். 1929ம் ஆண்டு, பெண்ணுக்கு ,15 வயது, ஆணுக்கு, 18 வயது என்ற நிலை வந்தது. ஆனால், அந்த சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. 1948ல், இந்தியாவில் பெண் சுயமாகவும், சுதந்திரமாகவும் சிந்தித்து தன் வாழ்க்கை துணையை தேர்வு செய்ய உரிமை உள்ளது என்ற சட்டம் வந்தது. 1955ல் இந்து திருமணச் சட்டம் மற்றும் மனவிலக்கு(விவகாரத்து) சட்டம் கொண்டு வரப்பட்டது. திருமணம் பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டது. பலதார மணம் சட்டத்துக்கு புறம்பானது என அறிவிக்கப்பட்டது. 1978ல் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில், திருத்தம் செய்து பெண்ணுக்கு திருமண வயது, 18, ஆணுக்கு, 21 என்ற நடைமுறை வந்தது. இச்சட்டங்கள் இருந்தபோதும், 50 சதவீதத்துக்கு மேல், 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் நடப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில், பெண் பிறப்பு தடுக்கப்படுவதால், ஆண், பெண் எண்ணிக்கை வேறுபாடு அதிகம் உள்ளது. திருமண வயதுடைய ஆண்களுக்கு, பெண்கள் கிடைக்காத சூழலும் உள்ளது. இளம் வயது திருமணத்தை தவிர்க்க, பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. குழந்தை திருமணங்களை தடுக்க, பெண் குழந்தைகளை மேல்படிப்புக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். இளம் வயது திருமண பாதிப்புகள் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண்ணுக்கு சொத்தில் சமபங்கு அளித்தல், ஆணுக்கு நிகராக பெண்களுக்கும் மதிப்பு, மரியாதை வழங்குதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில், ஆசிரியர்கள், மாணவியரிடத்தில் இத்தகவல்களை தெரிவிக்க வேண்டும். குழந்தை திருமணம் நடப்பது தெரியவந்தால், தங்கள் பகுதியில் உள்ள வி.ஏ.ஓ., பஞ்சாயத்து தலைவர், போலீஸ், சமூக நல அலுவலர், மாஜிஸ்திரேட்,
குழந்தைகள் நல உறுப்பினர்கள் உள்ளிட்டோரிடம், புகார் தெரிவிக்கலாம். இளைஞர்கள் சமூக சேவையாக கருதி, கிராமப்புறங்களில், கல்வியறிவற்ற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். யார், யாருக்கு காப்பு...: குழந்தை திருமணத்தை நடத்திய இரு தரப்பு பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் மாப்பிள்ளை, திருமணத்தை நடத்தும் புரோகிதர், பூசாரி, நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்கள், நண்பர்கள், அக்கம், பக்கத்தினர், முன்னின்று நடத்தும் சமுதாய தலைவர்கள், நிச்சயித்த நபர்கள், அமைப்புகள், புரோக்கர்கள், சமையலர் மற்றும் பணியாளர்கள் ஆகிய அனைவரும், குழந்தை திருமண தடைச்சட்டம், 2006ன்படி குற்றம் புரிந்தவர்களாக கருதப்படுவர். தவறு புரிந்தவர்களுக்கு, இரண்டு ஆண்டு ஜாமினில் வெளியில் வர முடியாத கடுங்காவல் தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப ஒன்றோ அல்லது இரண்டுமோ சேர்த்து விதிக்கப்படும். மேலும், குழந்தை திருமணம் ரத்து செய்யப்பட்டு, சட்டப்படி அத்திருமணம் செல்லாது என அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment