வழக்குப்பதிவு செய்யாமல் இழுத்தடிக்கும் போலீசார் குறித்து, எஸ்.எம்.எஸ்.,சில், எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்யும் முறை, தமிழகத்தில் முதன்முறையாக ஜன.,15ல் மதுரையில் அறிமுகமாகிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவது உட்பட 20 விதிமீறல்களை தடுக்க, "வெய்கிள் டிராகிங் சிஸ்டம்' வசதி, கடந்த நவ., 8ல், தென் மாவட்டங்களில் முதன்முறையாக மதுரை மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான சாப்ட்வேரில், தமிழகம் முழுவதுமுள்ள 1.50 கோடி வாகனங்களின் பதிவெண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவெண்ணை குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்.எம். எஸ்., மூலம் போலீஸ் அனுப்பினால் போதும். மூன்று வினாடிகளில் வாகனத்தின் முழு விபரத்தையும் எஸ்.எம்.எஸ்.,சில் அறிய முடியும். "இவ்வசதியால் இதுவரை 19 திருட்டு வாகனங்கள் கண்டறியப்பட்டுள்ளது,'' என்கிறார், இந்த சாப்ட்வேரை உருவாக்கிய, மதுரை எஸ்.எஸ். காலனி "ஆக்மி சாப்ட்வேர் டெக்னாலஜி' இயக்குனர் எஸ்.கே. மாரியப்பன்.நமது நிருபரிடம் அவர் கூறியதாவது : குடிபோதையில் வாகனம் ஓட்டி மாட்டும்போது, அதுகுறித்த விபரமும் பதியப்படும். மீண்டும் அதே நபர் சிக்கும்போது,போலீசார் எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், எத்தனை முறை விதிமீறல் செய்துள்ளார் என்ற விபரம் உடனுக்குடன் தெரிவிக்கும் வசதி உள்ளது. பதிவெண்ணை திருடர்கள் மாற்றினாலும், இன்ஜின் நம்பர், சேசிஸ் நம்பரை கொண்டு வண்டியின் முழுவிபரத்தையும் அறிய முடியும். இரு ஆண்டுகளுக்கு முன், எஸ்.எம்.எஸ்.,சில்(97881 11000) புகார் செய்யும் முறை, மதுரையில் அறிமுகமானது. சில காரணங்களால் அது நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது, மீண்டும்
இத்திட்டத்தை செயல்படுத்த ஆஸ்ரா கர்க் எஸ்.பி., கூறியுள்ளார். புகார் குறித்து பொதுமக்கள்எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், அதை ஏற்றுக் கொண்டதற்கான மனு எண் புகார்தாரருக்கு உடனடியாகஅனுப்பப்படும். அந்த புகார் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு தெரிவிக்கப்படும். அவர் சம்பவ இடத்திற்கு சென்று, விசாரித்து நடவடிக்கை எடுப்பார். அதுகுறித்து எஸ்.எம்.எஸ்., மூலம் எஸ்.பி., அலுவலகத்திற்கு தகவல் அனுப்புவார். போலீசார் வழக்குப்பதிவு செய்யாதது குறித்தும் எஸ்.பி., அலுவலகத்திற்கு பொதுமக்கள் எஸ்.எம்.எஸ்., அனுப்பலாம். ஜன.,15ல் இவ்வசதியை அறிமுகப்படுத்த, போலீசார் திட்டமிட்டுள்ளனர், என்றார்.
No comments:
Post a Comment