தென்காசியில் தனியார் செல்போன் நிறுவனங்கள் ஒரே எண்ணை 2 பேருக்கு கொடுத்துள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தென்காசியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். அவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தனியார் செல்போன் நிறுவனத்தில் ஒரு சிம் கார்டு வாங்கியுள்ளார். பின்னர் செல் நம்பரை மாற்றாமலேயே நிறுவனங்களை மாற்றிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வந்த பிறகு அவர் அதே நம்பருடன் மற்றொரு தனியார் செல் நிறுவனத்திற்கு மாறியுள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் பாலசுப்பிரமணியனின் எண்ணுக்கு கம்பத்தைச் சேர்ந்த பகவதிராஜ் என்ற பெயரைக் கேட்டு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது. அவர்களிடம் பாலசுப்பிரமணியன் தான் தென்காசியை சேர்ந்தவர் என்ற விபரத்தை கூறியுள்ளார். இதையடுத்து தொடர்பு கொண்ட நபர்கள் பகவதிராஜை நேரில் சந்தித்து விபரத்தை தெரிவித்துள்ளனர்.
சிறிது நேரத்தில் பகவதி ராஜூம் தென்காசியில் உள்ள பாலசுப்பிரமணியனை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது திரையில் தனது செல் நம்பரில் இருந்தே தனக்கு அழைப்பு வருவதை பார்த்து பாலசுப்பிரமணியன் அதிரிச்சி அடைந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை தான் கம்பத்தைச் சேர்ந்த பகவதிராஜுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இருவருக்கும் ஒரே எண் இருக்கும் விஷயம் தெரிந்து இருவரும் அதிர்ந்தனர். பகவதிராஜுக்கு அவுட் கோயிங் கால்கள் செல்லும்போது அதே வேளையில் இன்கமிங் கால்கள் அனைத்தும் பாலசுப்பிரமணியனின் செல்போனுக்கு வருகிறது. போனில் தொடர்பு கொண்ட பலருடன் வாக்குவாதம் ஏற்பட்டு கடும் மனஉளைச்சலுக்கு ஆளான பாலசுப்பிரமணியன் நுகர்வோர் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளார்.
No comments:
Post a Comment