தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின்போது தமது வீரர்கள் செய்த போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப் போவதாக இலங்கை ராணுவம் முதல் முறையாக அறிவித்திருக்கிறது. இதற்காக 5 நபர் கொண்ட விசாரணை நீதிமன்றத்தை அமைத்து ராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்ய உத்தரவிட்டிருக்கிறார்.போர்க்குற்றங்கள் தொடர்பாகவு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கடுமையான தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடிய சூழலில், ஏற்கனவே அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் கண்துடைப்பு நடவடிக்கையாக, இன்னும் ஒரு நாடகமாக இலங்கை ராணுவம் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
போர்க்குற்றங்கள் தொடர்பாக எத்தனையோ வீடியோக்கள் சர்வதேச நாடுகளில் வெளியாகியுள்ளன. இங்கிலாந்தின் சேனல்4- தொலைக்காட்சி, நெஞ்சை உறைய வைக்கும் கொடூர காட்சிகளையும் வெளியிட்டிருந்தது. ஆனால் அதுகுறித்து விசாரிக்க முடியாது என்று பிடிவாதமாகவும், தெனாவெட்டாகவும் கூறி வந்தது இலங்கை. இலங்கையை இந்தியாவும் கூட சற்றும் கண்டிக்கவில்லை, நிர்ப்பந்திக்கவில்லை, கேள்வி கூட கேட்கவில்லை. தற்போது அமெரிக்காவே சற்று கோபமடைந்து, தனக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக கூறி விட்டதால் பயந்து போய் இந்தப் புதிய நாடகத்தை அரங்கேற்றுகிறது இலங்கை. இதை வைத்து இன்னும் கொஞ்ச காலம் உலகத்தை ஏமாற்றலாம் என்பது அதன் எண்ணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
போர்க்குற்றங்களை யாரேனும் செய்ததற்கான 'முகாந்திரம்' இருந்தால் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்று ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கு எதிரான ஐ.நா. சபையின் தீர்மானத்தை அமெரிக்காவும், இந்தியாவும் ஆதரிக்க உள்ளன. போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. வல்லுநர் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றமும் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment