சர்வதேச குருவிகள் தினமாக மார்ச் 20ஐ பறவை, விலங்கின ஆர்வலர்கள் 2010 முதல் கொண்டாடி வருகின்றனர். "கீறீச்சிட்டு' பறக்கும் குருவிகளை இன்று நகரங்களில் பார்க்க முடியவில்லை. குருவிகளின் உயிரை பறிக்கும் கோடாலிகள் எவை தெரியுமா? "மொபைல் போன் டவர்'களில் இருந்து வரும் ரேடியோ அலைகள் தான் என்கிறார், மதுரையில் பறவையினங்களை ஆய்வு செய்து வரும் டாக்டர் பத்ரி நாராயணன்.
இனி அவரே...: மனித வாழ்க்கை மாறியதும், குருவி இனத்தை பாதித்தது. முன்பு வீடுகள் ஓட்டு கட்டடங்களாக இருந்தன. ஓட்டுக்கும், சுவருக்கும் இடையே காற்றோட்டத்திற்காக இடைவெளிகள் விடப்பட்டன. அங்கு குருவிகள் கூடு கட்டி வாழ்ந்தன. இப்போதைய கட்டடங்கள் குருவிகள் வாழ வழியில்லாமல் செய்து விட்டன.முன்பு சாக்கு மூட்டைகளில் தானியங்கள் சேமிக்கப்படும். மூட்டைகளை இரும்பு கொக்கி மூலம் தூக்கும் போது ஏற்படும் துளைகள் வழியே தானியங்கள் சிதறும். அவற்றை குருவி, காகம் போன்ற பறவையினங்கள் உண்டு வாழ்ந்தன. இப்போது அரிசி உட்பட தானியங்களை "பேக்' செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் வாங்கிச் செல்கின்றனர். விவசாயத்திற்கு பூச்சி மருந்து அடிக்க ஆரம்பித்ததன் விளைவு, மண்ணில் உள்ள பூச்சியினங்களை மறையச் செய்து விட்டது. இதனால், குருவி தன் குஞ்சுக்கு இரையாக கொடுக்க பூச்சிகள் இல்லாமல் போனது.
இந்த உலகமே தனக்காக தான் படைக்கப்பட்டுள்ளது என்ற சுயநலம் மனிதர்களுக்கு ஏற்பட்டு, வாழ்க்கை முறையையும் வசதிக்கேற்ப மாற்றிக் கொண்டனர். இதனால், பல உயிரினங்கள் அழிந்தன. ஒரு உயிர் அழிந்தால் மற்றொரு உயிரினம் கூடும். பறவையினங்கள் எலிகளை பிடித்து உண்ணும்.பறவையினங்கள் குறைந்தால் எலிகள் அதிகரிக்கும். "பிளேக்' போன்ற நோய்கள் ஏற்படும். உலகில் சமநிலை இல்லாமல் வாழ்வது ஆபத்தானது. மனிதர்கள் முதலில் அதை உணர வேண்டும் என்றார் டாக்டர் பத்ரி நாராயணன்.குறுகி வரும் குருவியினத்தை காக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குருவிகளுக்காக இனி குரல் கொடுப்போமா?
கணக்கெடுப்பு பணி:சிட்டுக் குருவிகள் தினத்தையொட்டி, சென்னையில் முதன்முறையாக இ-மெயில் மூலம் சிட்டுக் குருவிகளை கணக்கெடுக்கும் பணியை, சென்னை இயற்கை ஆர்வலர்கள் சங்கம் துவக்குகிறது.சென்னை நகரில் சிட்டுக் குருவிகளை பார்ப்பவர்கள் mnssparrow@yahoo.in என்ற இ-மெயிலில் தகவல் தெரிவிக்கலாம். சிட்டுக் குருவிகளின் தோற்றத்தை சிறப்பாக புகைப்படம் எடுத்து அனுப்புவோருக்கு, ஊக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment