|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 March, 2012

பெண்ணுக்கு பிடித்த அப்பாவா நீங்கள்?

பருவம் என்பது பலவித குழப்பங்களைக் கொண்டது. இந்த காலகட்டத்தை உடைய பெண் குழந்தைகள் தங்களின் உடல் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்களினால் பலவித சிக்கல்களை சந்திக்கின்றனர். பதின்பருவ பிள்ளைகளின் கோபத்திற்கும், எரிச்சலுக்கும் அர்த்தம் புரியாமல் பெற்றோர்கள் தவித்துதான் போகின்றனர். டீன் ஏஜ் பருவ காலக்கட்டத்தில் பெண் குழந்தைகள் வேகமாக வளர்கின்றனர் இவ்வளர்ச்சி உடல், அறிவு மற்றும் உணர்வு ரீதியானது. இந்த வயதில் பெண் பெரியவள் ஆகிவிடுகிறாள். இந்த சூழ்நிலையில் தந்தை – பெண் உறவு என்பது சற்று சிரமமான சிக்கலை ஏற்படுத்தும். தந்தையர்கள் தங்களின் பெண்களை குழந்தையாகவே பாவித்துக்கொண்டு ஆளுமையைத் திணிப்பது பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

மகளை புரிந்து கொள்ளுங்கள் எந்தப் பெண் குழந்தையும் சிறிய வயதில் அப்பா செல்லமாக இருப்பார்கள். இந்த பாசவலையில் பழகிப்போன அப்பா, திடீரென டீன் ஏஜ்ஜில் மகள் தன்னைவிட்டு விலகத் தொடங்குவதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாதுதான். தாய் - மகள் முறை என்பது அப்பா - மகள் உறவு முறையிலிருந்து மிகவும் மாறுபட்டது. தாயுடன் ஒட்டுதலாக இருக்கும் மகள் தன்னிடம் விலகி இருக்கிறாளே என்ற ஆதங்கம் எந்த ஒரு தகப்பனுக்கும் ஏற்படத்தான் செய்யும். இந்த சூழ்நிலையில் "என் விருப்பப்படிதான் நடப்பேன்! எனக்கு என்ன பிடிக்குமோ அதை தான் செய்வேன்! எனக்கு எதை படிக்க வேண்டும் என்று தோணுகிறதோ அதைத்தான் படிப்பேன்' என்று அவள் அடம்பிடிக்கும் போது, குடும்பத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முனையும் அப்பாவுக்கும் மகளுக்கும் இடையில் நடக்கின்ற நிகழ்வுகளின் விளைவுகள் நிச்சயம் குடும்பத்தையும் கலங்கடித்துவிடத்தான் செய்யும். எனவே, ஒரு டீன்ஏஜ் மகளுக்கு அப்பாவாக இருக்கும் ஒருத்தர் தன்னுடைய அதிகாரத்தை தளர்த்திக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு அப்பா என்ற ஸ்தானத்திலிருந்து கீழ் இறங்கி தோழனாக நடந்து கொள்ள வேண்டும்.

அறிவுரைகள் வேண்டாம் டீன் ஏஜ்ஜில் இருக்கும் மகள் அம்மாவைத் தவிர ஏறக்குறைய எல்லா உறவுமுறையினரிடமிருந்தும் தனித்து இருக்கவே விரும்புவாள்.அதை அப்பா என்பவர் புரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து அறிவுரைகள், சொல்வதும், அதை செய்; இதை செய்யாதே என அதிகாரம் செய்யும் போதும் அது அவர்களின் மனதை, தன்னம்பிக்கையை, அவர்களுக்குண்டான ஆளுமையை தகர்க்கின்றன. எனவே பதின் பருவ காலக்கட்டத்தில் உங்கள் மகளுக்காக சில விஷயங்களை விட்டுத்தான் கொடுக்க வேண்டியிருக்கும். தந்தையர் தங்களின் அணுகு முறையை மாற்றித்தான் கொள்ள வேண்டும்.

சந்தேகம் வேண்டாமே பதின் பருவத்தில் பெண்கள் தன்னுடைய அந்தரங்க விஷயங்களை கட்டிக் காப்பவளாகவும், அதை வெளியில் சொல்ல விரும்பாதவர்களாகவும் இருப்பார்கள். உடல் வளர்ச்சி மாற்றம், மனதில் எழும் மனவெழுச்சிகளுக்கு அர்த்தம் புரியாமல் இத்தகைய நிலையில் இதை வெளிப்படுத்தாமல் இருக்க, தனிமையை தேடுவாள். அப்பாவிடம் விலகி இருப்பதையே விரும்புவாள். அதே சமயம் விலகி இருக்கவும் ஆசைப்படும் அவள் அப்பாவின் பாசத்திற்காகவும் ஏங்கிக்கொண்டிருப்பாள்.

மகளின் குழப்பங்களையும், சந்தேகங்களையும், மனபோராட்டங்களையும் புரிந்துகொள்ள வேண்டும். உடலிலும் மனதிலும் எழும் மாற்றங்கள் குறித்து அவளுக்கு நல்ல தோழமையோடு இருந்து அறிவுறுத்தல் வேண்டும். அதை விடுத்து அவள் எங்கே போகிறாள்? யாரோடு பேசுகிறாள் என்றெல்லாம் துப்பறிய தொடங்கினால் பெற்றோர் மீது கோபப்பட ஆரம்பித்துவிடுவாள்.

பக்குவமாக கையாளுங்கள் நல்லது, கெட்டதுகளை அன்புடன் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களின் நடவடிக்கையில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, அதே சமயம் அவர்களின் நடவடிக்கைகளில் மேற்பார்வையிட்டு, எந்த விஷயத்தையும் எதிர்க்கொள்ள வேண்டிய மன பக்குவத்தை அவர்களுக்குத் தேவைப்படும் போது தந்து, வழிகாட்டுதலோடு இருந்தால், மகள் அப்பா உறவுமுறை குழப்பத்தை ஏற்படுத்தாது. அச்சத்தை உருவாக்காது.

குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்குமான தலைமுறை இடைவெளியை மேலும் நீட்டிவிடும் வேளையை இன்றை அவசர உலகமும், மேற்கத்திய பழக்கங்களும், அதிவேக தகவல் தொழில் நுட்பங்களும் கச்சிதமாக செய்து வருகின்றன. இந்த சூழலில் டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் சில சமயங்களில் பிடிக்காதவர்களாகிவிடுகின்றனர். எனவே, அப்பாக்கள் குடும்பத்தில் தங்களின் ஆளுமையை வெளிப்படுத்தும் செயலை மிக புத்திசாலித்தனமாக கையாள வேண்டும். பதின் பருவத்தில் முக்கிய மான மாற்றம் மொட்டு விடும் பாலியல் உணர்வு. இந்த இனம் புரியாத உணர்வை அவர்கள் முழுவதும் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுவார்கள். இதை கூர்ந்து கவனிக்கும் அப்பாக்கள் சட்டென்று அறிவுரைகளை அள்ளிவிடத்தான் நினைப்பார்கள். ஆனால், அப்படி செய்துவிடாதீர்கள்.

இந்த சூழ்நிலையில் அப்பா என்பவர் மகளுக்கு ரொம்ப அனுசரனையாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அனைத்திற்கும் ஒரு பொது வரையறைகளை வைத்துக் கொண்டு, பதின் பருவ மகளிடம் அன்பாக நடந்து கொண்டால் எந்த அப்பாவுக்கும் பெண்ணைப் பிடிக்கும். எல்லாப் பெண்களுக்கும் அப்பாவையும் பிடிக்கும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...