கொலை வழக்கில் சென்னை நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியான இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ரெட் நோட்டீஸ் கொடுக்க வலியுறுத்தி வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, கொலை வழக்கில் சென்னை நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.
இந்த வழக்கில் இந்திய வெளியுறவுத் துறை அளித்துள்ள பதில் மனுவில் அமைச்சராக உள்ள டக்ளஸ் தேவானந்தா அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வருகை தரும்போது கைது செய்ய முடியாது என்றும், இது இருநாடுகளுக்கு இடையேயான தூதரக உறவை பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒருவர் குற்றத்தில் ஈடுபட்டிருந்தால் அவர் இந்திய குடிமகனாகவோ அல்லது வெளிநாட்டவராகவோ இருந்தாலும் தலைமறைவாக இருக்கும் அவரை சம்பந்தப்பட்ட போலீசார் சி.பி.ஐ.யை அணுகி சர்வதேச போலீஸ் துணையுடன் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக ரெட் நோட்டீஸ் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வழக்கில் டக்ளஸ் 17 ஆண்டு தலைமறைவு குற்றவாளியாக இலங்கையில் இருந்து வருகிறார். அவருக்கு எதிராக ரெட் நோட்டீஸ் கொடுக்க சி.பி.ஐ. துணையுடன் இன்டர்போல் போலீசாரை தமிழக போலீசார் அணுகி இருக்க வேண்டியது கடமையாகும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. எனவே டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக ரெட் நோட்டீஸ் கொடுக்க நடவடிக்கை எடுக்கும்படியும் தமிழக உள்துறை செயலாளர் போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் அதி்ல் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
No comments:
Post a Comment