தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மகத்தான பங்களிப்பை வழங்கிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மீது ஆத்திரமும், கோபமும் அடைந்திருந்த ஜெயவர்த்தனே, சார்க் மாநாட்டிற்கு பெங்களூர் வந்தபோது (15.11.1986) செய்தியாளர் சந்தித்தனர். அப்போது இலங்கைப் பிரச்சினைக்கு எப்போது தீர்வு வரும் என்று ஜெயவர்த்தனேவிடம் செய்தி யாளர்கள் கேட்டனர்.
... அதற்கு பதிலளித்த ஜெயவர்த்தனே, “இலங்கையில் ஏற்பட்டு இருக்கின்ற இத்தனை பிரச்சினை களுக்கும் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தான் காரணம். அவருடைய இரட்டை வேடம்தான் பிரச்சினை சிக்கல் ஆகி வருவதற்குக் காரணம்” என்று எம்.ஜி.ஆர். மீது விழுந்து பிராண்டினான்.
ஜெயவர்த்தனே இவ்வாறு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். மீது குற்றம் சுமத்தி பதிலளித்தபோது, பிரதமர் ராஜீவ் காந்தியும் அவர் பக்கத்தில் இருந்தார்.
இந்தச் செய்தி ஸ்டேட்ஸ்மென், இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளேடுகளில் வெளிவந்தது.
இதற்கு மறுநாள் (16 .11 .1986 ) பாராளுமன்றம் கூடுகிறது. பிரதமர் ராஜீவ் காந்தி இருக்கையில் உள்ளார். வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் அவை யில் இருக்கிறார். பகல் 12 மணிக்கு கேள்வி நேரம் முடிந்ததும் தலைவர் வைகோ எழுந்து, முக்கியமான கேள்விக்கு பதில் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்.
“தமிழ்நாடு இந்தியாவில் இருக்கிறதா? அல்லது இந்தியாவிலிருந்து விலகி தனி
நாடாகப் போய்விட்டதா?” என்று வைகோ அவர்கள் கேள்வி எழுப்பியதும், வழக்கம் போல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சல் போட்டனர்.
அதையெல்லாம் பொருட்படுத்தாத வைகோ, “ வெளி நாட்டிலிருந்து வருகின்ற ஜனாதிபதி போட்ட விருந்தைத் தின்றுவிட்டு மரியாதையாகப் போக வேண்டும். எங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்திருக்கிறார் ஜெயவர்த்தனே? பக்கத்திலே அதைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார் ராஜீவ்காந்தி. நட்வர் சிங்கும் பக்கத்திலே இருந்துள்ளார். இதுவரை சுதந்திர இந்தியாவில் வெளிநாட்டுத் தலைவர்கள் யாராவது இங்கு வந்து இங்குள்ள அரசியல் தலைவர்களை விமர்சித்தது உண்டா? மரபு மீறப்பட்டு இருக்கிறதே! இதுதான் வெளிவிவகார அமைச்சரவை யினுடைய அணுகு முறையா? அதை ஏன் நீங்கள் கண்டிக்கவில்லை?
” தலைவர் வைகோவின் வினாவுக்கு பதிலளிக்க முடியாத காங்கிரஸ்காரர்கள், எம்.ஜி.ஆர். மீது வைகோவுக்கு என்ன திடீர் காதல்? என்றனர்.உடனே பதிலடி தந்தார் வைகோ.
“திடீர் காதல் அல்ல. எம்.ஜி.ஆரோடு எங்களுக்கு அரசியல் வேறுபாடு உண்டு. எங்கள் மாநிலத்தின் முதலமைச்சரை இலங்கையில் கொலைவெறி அரசாங்கம் நடத்தக்கூடிய ஜெயவர்த்தனே விமர்சிப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது.”
தி.மு.கழகத்தின் எம்.பி.யாக இருந்த போதும்கூட, ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு எல்லா வகையிலும் துணை நின்றார் எம்.ஜி.ஆர். என்பதற்காக, மனசாட்சிப்படி நாடாளுமன்றத்தில் புரட்சித் தலைவர் அவமதிக்கப்பட்டபோது, அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்.
நாடாளுமன்றம் முடிந்து டெல்லியில் தமது இல்லம் திரும்புகிறார் வைகோ. சென்னையிலிருந்து ஒரு தொலைபேசி வருகிறது. வைகோ எடுக்கிறார். மறுமுனையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., தழுதழுத்த குரலில் வைகோவிற்கு நன்றி தெரிவிக்கிறார். எனக்காக, நான் அவமதிக்கப் பட்டதைத் தாங்க முடியாமல், நாடாளுமன்றத்தில் கொதித்து எழுந்து விட்டீர்களே? எப்படி நன்றி கூறுவேன்? என்று வாஞ்சை பொங்க நன்றி தெரிவித்த புரட்சித் தலைவரிடம்,
“நான் எனது கடமையைத்தானே அண்ணே செய்திருக்கிறேன். நீங்கள் எங்களுக்கும் சேர்த்துத்தானே முதல்வர். ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு எவ்வளவு பக்கபலமாக இருந்தீர்கள்” என்று தலைவர் வைகோ பதில் தந்தார்.
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்றார் - அண்ணா
அதை கடைபிடித்தவர் வைகோ .
No comments:
Post a Comment