|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 April, 2012

தனித் தமிழ் ஈழம் அமைய வாக்கெடுப்பு நடத்த வேண்டும், கருணாநிதி!


இலங்கை மண்ணில் தமிழர்கள் சிந்திய ரத்தமும், கொடுத்த உயிர்ப் பலிகளும், நிச்சயம் வீண் போகாது. தனித் தமிழ் ஈழம் நிச்சயம் ஒருநாள் மலர்ந்தே தீரும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.“இலங்கையில் இந்தியப் படை நுழைந்து ஈழத் தமிழகத்தை உருவாக்கித் தருமானால், இங்கே காங்கிரஸ் கட்சியே ஆளட்டும், பத்தாண்டு காலத்திற்கு ஆட்சிக்கு வர திமுக முயற்சி எடுக்காது” என்று 1983ம் ஆண்டில் தான் பேசியதையும் கருணாநிதி நினைவுகூர்ந்துள்ளார்.

இது குறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைப் பிரச்சனை தொடர்பாக செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து வினாக்கள் தொடுத்தபோது; “இதுவரை உங்களுடைய நிறைவேறாத ஆசை என்ன என்ற கேள்விக்கு “தனி ஈழம்” என்று பதிலளித்திருந்தீர்கள்; அந்தத் “தனி ஈழம்” தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளதே?” என்ற கேள்வி ஒன்றுக்கு “தனி ஈழம்” வழங்குவதற்கு தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கை வரவேற்கத்தக்கதே;

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டின் பேரில் இதைப்போல பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஒருசில நாடுகள் தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன; அதன் அடிப்படையில் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தி, அந்த வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் “தனி ஈழம்” கிடைப்பதற்கு ஐக்கிய நாடுகள் மன்றம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்; அதற்கு நமது இந்திய அரசு தேவையான அழுத்தம் தர வேண்டும்” என்று நான் பதிலளித்து, அனைத்து ஏடுகளிலும் அது வெளிவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பல தொலைபேசிகள் - வைரமுத்து போன்றோர்- அதைப்பற்றி என்னிடம் பேசியதைத் தொடர்ந்து சற்று விரிவாக இதுபற்றி இந்த கடிதத்தை எழுதுகிறேன். இந்தக் கேள்விக்கும் பதிலுக்கும் அடிப்படையாக அமைந்தது கடந்த 12-4-2012 தேதிய “விடுதலை” நாளிதழில் முதல் பக்கத்தில் வந்த ஒரு செய்திதான்! அந்தச் செய்திக்கு தலைப்பே “தமிழ் ஈழத்துக்கான வாக்கெடுப்பு”.

அதில், “தமிழ் ஈழம் வேண்டுமா வேண்டாமா என்பது குறித்த முடிவை தமிழர் விருப்பத்துக்கே விட்டு விடுவது என்ற நிலையை ஐ.நா. சபை விரைவில் எடுக்கும் என்று தெரிகிறது. இதுகுறித்த வாக்கெடுப்பு ஒன்றை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடத்துவது குறித்த ஆலோசனைகளை சில நாடுகள் ஐ.நாவில் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. இதன் மூலம் வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற ஈழப் போராட்டத்தின் அடிப்படை சாசனத்தை சர்வதேசம் அங்கீகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், மாண்டி நீக்ரோ ஆகியவற்றை தனி நாடாக பிரகடனப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்பட்ட வாக்கெடுப்புகளே காரணமாக அமைந்தன. அதேபோல இலங்கையிலும் வாக்கெடுப்பு நடத்துவது குறித்து சிலர் ஆலோசிக்கத் துவங்கியுள்ளனர். அவ்வாறு வாக்கெடுப்பு நடந்தால் அதில் பங்கேற்று வாக்களிக்க வெளிநாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.” இந்தச் செய்தியினைத் தொடர்ந்துதான் நான் என்னுடைய பதிலை எழுதியிருந்தேன்.

கிழக்கு தைமூர் 16ம் நூற்றாண்டில் போர்ச்சுகல் நாட்டின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. 1975ம் ஆண்டு கிழக்கு தைமூர் தனிச் சுதந்திரத்தைப் பிரகடனம் செய்து கொண்டது. ஆனால் அதே ஆண்டு இந்தோனேசியாவால் படையெடுக்கப்பட்டு, அந்த நாட்டின் 27வது மாகாணமாக இணைத்துக் கொள்ளப்பட்டது. 1999ம் ஆண்டிலேதான் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டின் பேரில் கிழக்கு தைமூருக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்பட்டது. 2002ம் ஆண்டு மே 20ம் நாளன்று 21ம் நூற்றாண்டின் சுய நிர்ணய உரிமை பெற்ற முதல் நாடாக சரித்திரத்திலே இது இடம் பெற்றது. கிழக்கு தைமூர் நாட்டைப் போலவேதான், யூகோஸ்லோவியா நாட்டிலிருந்து மாண்டி நீக்ரோ எனும் தனி நாடு, 3-6-2006 அன்றும்; செர்பியாவிலிருந்து கொசோவோ எனும் தனி நாடு 17-2-2008 அன்றும்; எகிப்து நாட்டிலிருந்து தெற்கு சூடான் எனும் தனி நாடு 2011ம் ஆண்டிலும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டின் பேரில் பொது வாக்கெடுப்பு நடைபெற்று உருவாக்கப்பட்டன.அதேபோன்ற ஒரு நடைமுறையைத்தான் தனித் தமிழ் ஈழத்தைப் பொறுத்தவரை பின்பற்ற வேண்டுமென்று நாம் கோருகிறோம். அதற்குத் தான் இந்திய அரசின் ஒத்துழைப்பை நாடுகிறோம்.

இந்த வாக்கெடுப்பு பற்றி, நான் இப்போதல்ல, 14-10-1987 அன்று சென்னையில் சைதாப்பேட்டையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசும்போதே, “ஒப்பந்தத்தில் ஒரு முக்கியமான ஷரத்து- வட கிழக்கு பகுதிகள் இரண்டு மாகாணங்கள்- அவை இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து ஈழத் தமிழ் மாநிலமாக தமிழர் தாயகமாக ஒரு மாநில அரசு அங்கே உருவாகக்கூடிய அளவிற்கு அதிக அதிகாரங்களைக் கொண்ட சுயாட்சி உரிமையோடுகூடிய ஒரு மாநில அரசு உருவாகக்கூடிய அளவிற்காவது இடைக் காலத்தில்-- குறிக்கோள் தமிழ் ஈழம் என்றிருந்தாலும்கூட, ஒரு ஏற்பாடு ஒப்பந்தத்தில் வேண்டும் என்று போராளிகள் கேட்டார்கள்.நாமும் அதைத்தான் வலியுறுத்தினோம். ஆனால் வடக்கு, கிழக்கு மாநிலங்கள் இப்பொழுது ஒன்றாக ஒரு நிர்வாகத்திலே வரும் என்றாலுங்கூட, சில மாதங்களுக்குப் பிறகு “ரெபரெண்டம் (வாக்கெடுப்பு)” வைக்கப்படும். பொதுமக்களுடைய வாக்கெடுப்பு நடைபெறும்.அதிலே கிழக்கு மாகாண மக்கள் வடக்கு மாகாணத் தோடு இணைந்திருக்க சம்மதித்தால் இரண்டும் ஒன்றாக தொடர்ந்திருக்கும்.இல்லையேல் வடக்கு மாகாணம் தனி, தமிழர்களை அதிகமாகக் கொண்டிருக்கின்ற கிழக்கு மாகாணம் தனி. இரண்டும் ஒரு மாகாணமாக இருக்க முடியாது என்று ஒப்பந்தத்தில் ஒரு ஷரத்து காணப்பட்டது.

கேட்டபோது சொன்னார்கள். பொது வாக்கெடுப்பு நடைபெற்றால் கூட, அது நியாயமாக நடைபெறும்; இந்திய அரசு, இலங்கை அரசு என்ற இரண்டு அரசுகளும் தலையிடாமலேயே அந்தப் பொது வாக்கெடுப்பு நடைபெறும் என்றெல்லாம் சொன்னார்கள்” என்று விளக்கிப் பேசினேன்.ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தான அடுத்த வாரமே, இலங்கையிலே, கொழும்பிலே ஜெயவர்த்தனா, ராஜீவ் காந்திக்கு பக்கத்திலே அமர்ந்து ஒப்பந்தத்திலே கையெழுத்து போட்ட ஜெயவர்த்தனா- கிழக்கு மாகாண மக்கள் விரும்பினால் இணைந்திருக்கலாம்; இல்லாவிட்டால் தனித்திருக்கலாம் என்ற கருத்தமைந்த ஷரத்தை எழுதிக் கையெழுத்துப் போட்ட அதே ஜெயவர்த்தனா- “அப்படி ஒரு பொதுத் தேர்தல் வரும்போது, வாக்கெடுப்பு நடத்தும் போது, நான் கிழக்கு மாகாணத்திற்குச் செல்வேன், கிழக்கு மாகாணம், வடக்கு மாகாணத்தோடு இணைகின்ற அந்தக் கருத்திற்கு எதிராகப் பேசுவேன்” என்று சொன்னார்.எனவே ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு, அப்போதே அதற்கு மாறாக இலங்கை அதிபர் பேசினார். 27-8-1983 அன்று சென்னையில் நடைபெற்ற தி.மு. கழகப் பொதுக் குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலேயே,

This Council does not think that it would be possible for the Tamils in Sri Lanka to live in peace with the Sinhalese under the same flag and preserve their culture, individuality, language and way of life in the wake of the recent perpetration of genocide. Therefore, this Council feels that a separate Tamil Eelam, shall be the only remedy and permanent solution to the problem and extends its whole-hearted support for all such efforts that shall be aimed at creating a new Tamil Eelam”

நடைபெற்ற இனநாசக் கோரக் கொலைகளுக்கும் சொத்து சேதத்திற்கும் பிறகு இனியும் தமிழர்களும், சிங்களவர்களும் ஒரே அரசமைப்பின் கீழ் தங்கள் உயிரையும் உடைமையையும் தனிக் கலாச்சாரத்தையும், மொழியையும் வாழ்க்கை முறையையும் காப்பாற்றிக்கொண்டு வாழ முடியும் என்று இந்தப் பொதுக் குழுவால் கருத முடியவில்லை. எனவே விடுதலை பெற்ற தனித் தமிழ் ஈழம் தான் இதற்கு நிரந்தரப் பரிகாரம் என்று இந்தப் பொதுக்குழு கருதுகிறது. அதற்கான முயற்சிக்கு தி.மு.கழகம் ஈழத் தமிழர்களுக்கு தன் மனப்பூர்வமான ஆதரவை நல்கும் என்றும் இந்தப் பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது) இந்தத் தீர்மானத்தை விளக்கி 28-8-1983 அன்று சென்னை கடற்கரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் உரையாற்றும்போது, “இலங்கையில் இந்தியப் படை நுழைந்து ஈழத் தமிழகத்தை உருவாக்கித் தருமானால், இங்கே காங்கிரஸ் கட்சியே ஆளட்டும், பத்தாண்டு காலத்திற்கு ஆட்சிக்கு வர திமுக முயற்சி எடுக்காது” என்று நான் பேசினேன்.1976ம் ஆண்டு ஈழத்தில் வட்டுக்கோட்டை என்ற இடத்தில் நடைபெற்ற மாநாட்டில்- ஈழத் தந்தை செல்வா “தமிழர் ஐக்கிய முன்னணி” என்பதை “தமிழர் விடுதலை ஐக்கிய முன்னணி” எனத் திருத்தி அறிவித்ததோடு- ஈழத் தமிழகம் - சுதந்திரம் பெற வேண்டுமென்ற பிரகடனத்தை வெளியிட்டார். ஆனால் அதற்கு அடுத்த ஆண்டே அந்தப் பெருமகன் மறைந்து விட்டார்.தனித் தமிழ் ஈழம் என்பது வரலாற்று ரீதியாக தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமையாகும். ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன் இலங்கையும், தமிழ் நாடும் ஒரே நிலப்பகுதியாக இருந்தன என்ற உண்மையினை பல ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இலங்கை, கடலால் பிரிக்கப்படுவதற்கு முன்பு வாழ்ந்த மக்களின் வழித்தோன்றல்களே ஈழத் தமிழர்கள் ஆவர்.

ஆதி இரும்புக் காலம் என்று கூறப்படுகின்ற; மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் தமிழ் மக்கள் சிற்றரசு அமைத்து வாழ்ந்ததற்கான ஆதாரம் புதைபொருள் அகழ்வாராய்வின்போது கிடைத்துள்ளது. இக்கால கட்டத்தில் கந்தரோடை, தமிழ்ச் சிற்றரசின் தலைநகராக இருந்துள்ளது என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். இந்தப் பின்னணியிலேதான் இலங்கை வரலாற்றில் கண்டியை 1815 வரை ஆண்ட தமிழ் மன்னர் கண்ணுச்சாமி என்கிற விக்ரமராஜ சிங்கன் வெள்ளையருடன் நடந்த போரில் தோல்வியுற்று கைது செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் வேலூரில் சிறைவைக்கப்பட்டிருந்தார். 16 ஆண்டுகள் சிறையில் இருந்த அந்த மன்னர் வேலூரில் சிறையிலேயே மாண்டு போனார். அந்த மன்னரின் பெயரையும் இலங்கைத் தமிழர்களின் பழம்பெரும் வரலாற்றையும் மறந்துவிடாமல் நினைவூட்ட கழக அரசு காலத்தில் 1.7.1990 அன்று வேலூரில் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் “முத்து மண்டபம்” அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

“தென்றிசையைப் பார்க்கின்றேன்; என் சொல்வேன் என்றன்
சிந்தையெல்லாம் தோள்களெலாம் பூரிக்கு தடடா!
அன்றந்த லங்கையினை ஆண்டமறத் தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்”


என்ற பாவேந்தர் பாரதிதாசனின் எழுச்சிக் கவிதை வரிகளை எண்ணிப் பார்க்கும் போதெல்லாம்; சரித்திரத்தின் தொடர்ச்சியாக, தனித் தமிழ் ஈழம் மலர்ந்திட வேண்டும் என்ற தாகம் என்னுள் ஏற்படுவதை நான் ஏக்கத்தோடு உணருகிறேன்.“தனித் தமிழ் ஈழம்” எனும் விடுதலை கீதம் தரணியெங்கும் வாழும் தமிழர்களின் செவிகளிலே இடையறாது ஒலித்துக் கொண்டிருக்கிறது. இலங்கை மண்ணில் தமிழர்கள் சிந்திய இரத்தமும், கொடுத்த உயிர்ப் பலிகளும், நிச்சயம் வீண் போகாது. இன்றில்லாவிட்டால் நாளை - நாளை இல்லா விட்டால் நாளை மறுநாள் - தனித் தமிழ் ஈழம் நிச்சயம் உருவாகும்! ஈழத் தமிழினத்தின் இணையற்ற அடையாளம் குன்றின் மேலிட்ட விளக்காக குவலயத்திலே ஒளி வீசும்! இவ்வாறு கருணாநிதி தனது கடிதத்தில். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...