அட்சய திருதியை (24.04.2012) நாளில் எல்லோரும் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், நுகர்வோர் அமைப்பினரின் பிரச்சாரம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் ஆண்டு முழுவதும் வீட்டில் செல்வம் பெருகும் என மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி, தரமற்ற தங்க நகைகளை பலரும் விற்பனை செய்வதாக அவர்கள் பிரச்சாரம் செய்தனர். புதுச்சேரியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மைக்குகள் மூலமும், துண்டு பிரசுரங்கள் மூலமும் அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
பிரச்சாரத்தில் ஈடுபட்ட நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த லெனின் கூறியதாவது, பொதுமக்கள் அனைவரும் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் பொருள் சேரும், செல்வம் சேரும் என்று சொல்லி அனைவரும் விழுந்தடித்துக்கொண்டு அன்றைய தினம் தங்கம் வாங்குகிறார்கள். அப்படி தங்கம் வாங்கும்போது அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். வஞ்சிக்கப்படுகிறார்கள். சுரண்டப்படுகிறார்கள் என்பதை எமது அமைப்பின் சார்பாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment