\தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் நூற்றாண்டு மாளிகை புதிய கட்டடத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின்னர் சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு சினிமா நூற்றாண்டு மாளிகை கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. இதனை தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். மேலும் இந்த சபைக்கு புதிதாக கட்டப்பட இருக்கும் இன்னொரு கட்டடத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஜெயலலிதா, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நானும் இச்சபையில் நடந்த விழாக்களில் பங்கேற்று இருக்கிறேன். அதிலும் குறிப்பாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் பொன் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றது மறக்க முடியாதது. இச்சபை திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கும், இத்துறையைச் சேர்ந்த அனைத்து பிரிவினரின் நலனுக்கும் பாடுபட்டு வரும் ஒரு சிறந்த அமைப்பு. இந்த தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பல நூற்றாண்டுகளை கடந்து திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இப்போது புதிதாக கட்டப்படவுள்ள கட்டடத்தின் திறப்பு விழாவை நேரில் வந்து திறந்து வைக்கிறேன் என்று கூறினார். முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் சி.கல்யாண் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் எஸ்.ஏ.சந்திரசேகர், இப்ராஹிம் ராவுத்தர், தாணு, முரளிதரன், டி.சிவா, அன்பாலாயா பிரபாகரன், சித்ரா லெட்சுமணன், ஞானவேல் ராஜா, ஆர்.கே.செல்வமணி, கே.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment