முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பெருமைக்குரியவரான ஆங்கிலேய பொறியாளர் கர்னல் பென்னிகுயிக்குக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்பதற்கு இன்று முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டி வைத்தார்.தேனி - குமுளி நெடுஞ்சாலையில், லோயர் கேம்ப்பில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய வளாகத்தில் இந்த மணிமண்டபம் அமைகிறது. இங்கு பென்னிகுயிக்கின் முழு உருவச் சிலையும் நிறுவப்படுகிறது.இதற்கான அடிக்கல்லை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் நாட்டி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.
பென்னிகுயிக்கை தேனி மாவட்ட மக்கள் தங்களைக் காத்த தெய்வமாக வணங்கி வருகின்றனர். மேலும் ஐந்து மாவட்ட மக்களின் வறட்சியைப் போக்கியதால் பென்னிகுயிக்குக்கு தென் மாவட்டங்களில் குறிப்பாக தேனி மாவட்டத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பென்னி என்று பெயரிடுவது வழக்கமாக உள்ளது.பென்னிகுயிக்கின் மணிமண்டபம் 2500 சதுர அடிப் பரப்பளவில் அமையவுள்ளது. இதற்காக ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா ரூ. 1 கோடி நிதியை ஒதுக்கியுள்ளார். மணிமண்டபம் திறப்பு விழாவுக்கு பென்னிகுயிக்கின் பேரன் அழைக்கப்படுவார் என்றும் முதல்வர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.பென்னிகுயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கிட்டத்தட்ட 2.23 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன என்பது நினைவிருக்கலாம்.
No comments:
Post a Comment