முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட, இந்தியாவின் முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள், வரும் 20ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால், "ரிசாட் -1' என்ற ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோளை விரைவில் விண்ணில் ஏவுவதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.
இது, இந்தியாவின் முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் என்ற பெருமையுடையது. இந்த செயற்கைக்கோள், இரவு, பகல், மேகங்கள் சூழ்ந்த வானிலை என, எந்த ஒரு சூழ்நிலையிலும், விண்ணிலிருந்து, பூமியைத் தெளிவாகப் புகைப்படங்கள் எடுக்கும் திறனுடையது.ஏற்கனவே, இந்த செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது. ஏப்ரல் 20ம் தேதியில், ஏற்கனவே சில செயற்கைக்கோள்களை, வெற்றிகரமாக விண்ணில் ஏவியிருப்பதால், அதே தேதியில் இந்த செயற்கைக்கோளையும் விண்ணில் ஏவுவதற்கு, இஸ்ரோ திட்டமிட்டுள்ளது."ரிசாட்-2' என்ற செயற்கைக்கோள் இஸ்ரேலிடமிருந்து 11 கோடி டாலருக்கு வாங்கப்பட்டு, அது 2009ம் ஆண்டு ஏப்ரல் 20ல் விண்ணில் செலுத்தப்பட்டது. அதேபோல், "ரிசோர்சாட்-2' என்ற செயற்கைக்கோளும், கடந்த ஆண்டு ஏப்ரல் 20ல் விண்ணில் ஏவப்பட்டது. இரண்டு செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதால், ஏப்ரல் 20ம் தேதி, இஸ்ரோவிற்கு ராசியான நாளாகக் கருதப்படுகிறது.
எனவே, வரும் 20ம் தேதி, "ரிசாட்-1' செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படலாம். மொத்தம் 1,850 கிலோ எடை கொண்ட, இந்த செயற்கைக்கோள், "பி.எஸ்.எல்.வி-சி-19' ராக்கெட் மூலம் செலுத்தப்பட உள்ளது."ரிசாட்-1' செயற்கைக்கோள், விவசாயம், நீர்வள மேலாண்மை உட்பட பல விதமான பணிகளைக் கண்காணிக்க உதவிகரமாக இருக்கும். "ரிசாட்-2' போல, இது ராணுவம் தொடர்பான விஷயங்களுக்குப் பயன்படுத்தப்படாது.
No comments:
Post a Comment