இலங்கையில் போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட இடங்களை இந்திய எம்.பிக்கள் குழு பார்வையிட வேண்டும் என்று உலகத் தமிழர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக இந்திய எம்.பிக்கள் குழுவுக்கு தலைமை வகிக்கும் சுஸ்மா சுவராஜ் மற்றும் எம்.பிக்களுக்கு உலகத் தமிழர் இயக்கத்தின் தலைவர் செல்வன் பச்சமுத்து அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:இலங்கையில் நடைபெற்ற போரில் 2 லட்சத்து 16 ஆயிரம் தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். பல்லாயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். உள்நாட்டுப் போரினால் தமிழர்கள் வசிக்கும் வடகிழக்கு பகுதி முற்றாக அழிந்துபோயுள்ளது.
போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என இந்தியா பல்வேறு வகையில் உதவிகளை செய்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகாலமாக இந்தியாவும் இலங்கையும் இந்த உதவிகள் தொடர்பாக பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. 50 ஆயிரம் வீடு கட்டும் திட்டத்துக்கு உதவி, 52 டிராக்டர்கள், 50 ஆயிரம் மிதிவண்டிகள் இவை மட்டுமல்லாது மறுவாழ்வுக்கு 192 மில்லியன் ரூபாய் நிதி உதவி என இந்தியா வழங்கியிருக்கிறது. திருகோணமலை திருக்க்கேதீசுவரம் கோயிலை சீரமைக்க 326 மில்லியன் ரூபாய் நிதி உதவி, பள்ளிகளை சீரமைக்க 187 மில்லியன் ரூபாய் நிதி உதவி, கட்டமைப்பு பணிகளுக்கு 425 அமெரிக்க டாலர் கடனுதவி, ரயில்வே திட்டங்களுக்கு 37.5 மில்லியன் டாலர் கடனுதவி என பல்வேறு திட்டங்களை இந்தியா அளித்துள்ளது.
இவைமட்டுமின்றி இலங்கை மற்றும் இந்திய அரசுகள் வெளியிடும் அறிக்கைகளில் வடகிழக்கு வாழ் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டும் வருகிறது. இந்தியா இத்தனை செய்தாலும்கூட சீனாவிடமிருந்தே அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான உதவிகளையும் இலங்கை பெற்று வருவது என்பது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானது என்பதை சுட்டிக்காட்டுகிறோம். இந்த நிலையில் இந்திய எம்.பிக்கள் குழு இலங்கைக்கு செல்கிறது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் முழுமையாக ராணுவமயமாக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், சம்பூர், வாகரை என போரினால் தமிழர்கள் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் இந்திய எம்.பிக்கள் குழு செல்லுமேயானால் நிச்சயம் நாம் வரவேற்போம்.மேலும் மன்னார், மட்டக்களப்பு பாதிரியார்களையும் யாழ்ப்பாண பல்கலைக் கழக ஆசிரியர் மற்றும் மாணவர்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களையும் இந்திய எம்.பிக்கள் குழு கண்டிப்பாக சந்திக்க வேண்டும். இதை தவிர்த்து இலங்கை அதிகார்கள் அழைத்துச் செல்லும் "சுற்றுலா"வாக தங்கள் பயணம் இருக்கக் கூடாது.இந்திய அரசுக்கு எம்.பிக்கள் குழு சொல்ல வேண்டிய சில விஷயங்களையும் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.
1. இலங்கையை இந்திய அரசு ஆதரிப்பது என்பது தமிழர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல... இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கும் கூட எதிரானதே...
2. கடனுதவி, புனரமைப்பு விஷயங்களை மட்டுமே பார்க்காமல் போர்க் குற்றங்களுக்கும் இலங்கையைப் பொறுப்பாக்க வேண்டும். ஐ.நா. குழுவின் அறிக்கையின்படியான போர்க் குற்றங்கள் பற்றி விசாரிக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்.
3. வடக்கு கிழக்கு பகுதிகளிலிருந்து முற்றாக ராணுவம் வெளியேற்றப்பட வேண்டும். 1987-ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும்.
4. கொழும்பு மற்றும் தூத்துக்குடி இடையே கப்பல் போக்குவரத்து இயக்குவதைவிட ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து இயக்கப்படுவதே சரியானது. குறைவான கட்டணமும்கூட.
5. வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தங்களது பாரம்பரிய தாயகத்தில் தங்களது உரிமையை நிலைநாட்டிக் கொள்ள, வங்கதேச மக்களைப் போல தமிழ் மக்கள் கண்ணியத்துடன் சம உரிமையுடன் வாழ வழியேற்படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment