பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் கருத்து சுதந்திரத்தை கட்டிக்காப்பது பற்றி அரசுக்கு உணர்த்தும் விதமாக மே 3ம் தேதி உலக பத்திரிகை சுதந்திர தினம் கடைபிடிக்கப்படுகிறது. சமூக மாற்றத்திற்கு பத்திரிகை சுதந்திரம் அவசியம் என்பது இம்முறை மையக்கருத்தாக உள்ளது.சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் சட்ட விதி 19ன் கீழ், பத்திரிகை சுதந்திரத்தை வலியுறுத்தி உலக பத்திரிகை சுதந்திர தினத்தை ஐ.நா., சபை ஏற்படுத்தியது.
மிகுந்த ஆபத்து காலத்தில், உலகில் எங்காவது பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்பட்டால், அதற்கு எதிராக போராடும் தனி நபர், பத்திரிகை, தொண்டு நிறுவனங்களுக்கு "யுனெஸ்கோ' சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்படுகிறது. 1997ல் நிறுவப்பட்ட இவ்விருதுக்கு உரியவரை தேர்வு செய்ய 14 நடுவர்கள் உள்ளனர். விருதுக்கு போட்டியிடுவோரின் பட்டியலை, ஒவ்வொரு நாட்டில் இருந்தும், பத்திரிகை சுதந்திரத்திற்காக பாடுபடும் தொண்டு நிறுவனங்கள், அந்தந்த நாட்டு அரசுகள், பட்டியலை அனுப்பும். அதில் இருந்து, விருதுக்கு உரியவர் தேர்வு செய்யப்படுவார்.
இவ்விருது, "குல்லர்மோ கானோ இசாசா' என்ற கொலம்பிய நாட்டு பத்திரிகையாளரின் பெயரால் வழங்கப்படுகிறது. "எல் எஸ்பெக்டேட்டர்' என்ற பத்திரிகையில் பணிபுரிந்த இவர், போதை பொருள் மாபியா கும்பலுக்கு எதிராக தொடர்ந்து எழுதியதால், பத்திரிகை அலுவலகத்தின் முன்பாகவே, 1986ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது சேவையை பாராட்டியே, விருதுக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும், உலகம் முழுவதும் இருந்து பத்திரிகையாளர்களை அழைத்து, பத்திரிகை சுதந்திரத்தை எதிர்நோக்கி உள்ள பிரச்னைகள், அவற்றை தீர்க்கும் வழிமுறைகள் போன்றவற்றை "யுனெஸ்கோ' ஆராய்கிறது. "நல்ல ஆட்சி, பயங்கரவாதத்திற்கு எதிரான செய்தி சேகரிப்பு, போருக்கு பிந்தைய வாழ்க்கை போன்றவற்றை தலைப்பாகக் கொண்டு, "யுவெஸ்கோ' விவாதம் நடத்துகிறது. பத்திரிகை சுதந்திரம் என்பதன் அளவுகோல், நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது
No comments:
Post a Comment