சித்திரை திருவிழா கடந்த மாதம் 17ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தாலி கட்டும் நிகழ்ச்சி கடந்த 01.05.2012 அன்று இரவு நடைபெற்றது. விழாவில் ஏராளமான அரவாணிகள் கலந்து கொண்டு அரவாணை தங்களது கணவனாக எண்ணி பூசாரியின் கையால் தாலிக் கட்டிக்கொண்டனர். இதற்காக அரவாணிகள் புதுமணப்பெண் போல் ஆடை அணிகலன்களால் அலங்கரித்து இருந்தனர். தலை நிறைய பூச்சூடி, நெற்றியில் பொட்டு இட்டு, கை நிறைய வளையல் அணிந்திருந்தனர். அவர்கள் இரவு முழுவதும் பாட்டுப்பாடி கும்மாளமிட்டனர். குவியல் குவியலாக கற்பூரமேற்றி அதனை சுற்றி அரவாணிகள் கும்மியடித்து மகிழ்ந்தனர். இதனை ஏராளமானோர் கண்டு களித்தனர். விடிய விடிய அவர்கள் சளைக்காமல் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
அதிகாலை அரவாண் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தின் போது அரவாணிகள் பூப்பந்துகளாலும், பூ மாலைகளால் தேரின் மீது வீசினார்கள். மேலும் குவியல் குவியலாக கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். வேண்டுதலுக்காக 108, 1008 தேங்காய் என உடைத்தனர். இதுதவிர விவசாயிகளும், தங்கள் நிலங்களில் விளைந்த காய்கறிகள், தானிய வகைகளை தேரின் மீது வீசி நேர்த்தி கடனை செலுத்தினார்கள். தேர் அழிகளம் எனப்படும் பூநத்தம் தெய்வநாயக செட்டியார் தோப்பை அடைந்ததும் அரவாணிகள் சோகம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அரவாண் களப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து அரவாணிகள் தலையில் சூடியிருந்த பூக்களை பிய்த்து எரிந்தனர். மேலும் கைகளில் அணிந்திருந்த வளையல்களை உடைத்து எரிந்தனர். இதைத் தொடர்ந்து பூசாரியின் கையால் தாலியை அறுத்துக்கொண்டு ஒப்பாரி வைத்து அழுதனர். இந்த காட்சி உண்மையிலேயே கணவரை இழந்த பெண்கள் எப்படி கதறி அழுவார்களோ அதனையே மிஞ்சும் வகையில் இருந்தது. பின்னர் அரவாணிகள் அங்குள்ள கிணறுகளில் குளித்து முடித்து விதவைக்கோலம் போல் வெள்ளாடை அணிந்து சோகமயத்துடன் அவர்கள் தங்களுடைய ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
No comments:
Post a Comment