மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களுக்கும், துரியோதனன் முதலிய நூற்றுவருக்கும் இடையே பெரும்போர் நடந்தபோது இருதரப்புப் படைகளுக்கும் உணவு வழங்கி உதவியவன் சேரமான் உதியஞ் சேரலாதன் என்ற சேரமாமன்னன். அவன் இவ்வாறு உணவு வழங்கியதால், பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்றே சரித்திரத்தில் அவனது திருப்பெயர் விளங்குகிறது. புறநானூறு என்ற சங்ககால நூலின் இரண்டாவது பாடலில் அந்த மாமன்னனைப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் பாடினார். பாண்டவ-கவுரவ யுத்தத்தின் போது சேரமாமன்னன் உதியஞ் சேரலாதன் இருபடைகளுக்கும் சோறு வழங்கிய செய்தியை புலவர் வியந்து குறிப்பிடுகிறார். புறநானூற்றுப் புலவர் தெரிவிக்கும் இந்தச் செய்தியை சிலப்பதிகாரம் உறுதி செய்கிறது. மதுரை மாநகரம் கண்ணகியின் கோபத்தால் அக்கினிக்கு இரையான பிறகும் கண்ணகியின் கோபம் தீரவில்லை. அவள் வருத்தத்துடன் அமர்ந்திருந்தபோது, பாண்டிய மன்னனின் குலதெய்வமான மதுராபதி என்ற குலதெய்வம் கண்ணகியின் பின்பக்கமாக வந்து நின்றது. நீ யார்? என்று கண்ணகி கேட்டாள். அவளுக்குத் தன்னைப் பற்றி தெரிவித்த மதுராபதி தெய்வம் மேலும் சில செய்திகளைக் கூறியது. பாண்டியன், கோவலன் இருவரும் தவறு செய்யாதவர்கள். ஆனால், இருவருக்கும் முன் செய்த தீவினையின் விளைவாக ஏற்பட்ட பழி ஒன்று உண்டு என்று மதுராபதி தெய்வம் கூறியது. பிறகு உயர்குடிப் பிறந்த மன்னர்கள் தவறான காரியத்தைச் செய்யமாட்டார்கள் என்பதைச் சில உதாரணங்களுடன் அந்த தெய்வம் விவரித்தது. தன் கையைத் தானே வெட்டிக்கொண்டு நீதி தவறாத நேர்மையாளன் என்று புகழ்பெற்ற பொற்கைப் பாண்டியன், ஒரு புறாவுக்காக தான் துலாக்கோல் ஏறிய சோழ மன்னன் சிபி, கன்றை இழந்த பசுவுக்கு நேர்ந்த துன்பத்தைப் போக்கி நீதி செய்த மற்றொரு சோழமன்னனாகிய மனு, பாரதப்பெரும் போரில் இரு தரப்புப் படைகளுக்கும் சோறு அளித்த சேரமன்னன் உதியஞ் சேரலாதன் என்று ஒரு பட்டியலையே மதுராபதி தெய்வம் எடுத்து உரைக்கின்றது.
சிலப்பதிகாரம், மதுரைக்காண்டம், கட்டுரைக் காதை பகுதியில் பெருஞ்சோறு பயந்த திருந்து வேல் தடக்கை என்ற அடிகளில் சேரமன்னன் சோறு வழங்கிய செய்தி சொல்லப்படுகிறது. இதே செய்தியை, வஞ்சிக்காண்டம், வாழ்த்துக் காதை பகுதியில் இளங்கோ அடிகள் மீண்டும் குறிப்பிடுகிறார். தோழிப் பெண்கள் மன்னர்களைப் போற்றி புகழ்ந்து ஆடுகிறார்கள்; பாடுகிறார்கள். இதிலும் மகாபாரத யுத்தத்தில் இரு தரப்பு படைகளுக்கும் சேரமாமன்னன் பெருஞ்சோறு அளித்த செய்தி பதிவு செய்யப்படுகிறது. இந்தியாவின் வடக்கே ஒரு பகுதியில் ஒரு பெரும்போர் நடக்கிறது. அதற்கு தெற்கே தமிழ்நாட்டிலிருந்து சோறு வழங்கப்படுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தி, இந்தியப் பண்பாட்டின் பழமையை மிகச்சரியாக எடுத்துக்காட்டுகிறது.
No comments:
Post a Comment