|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 October, 2012

ஒரே குட்டை, அதே மட்டை!


ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் தலைவர் கேஜரிவால் முதலில் காங்கிரஸ் கட்சியினரின் ஊழலை அம்பலப்படுத்தியபோது பாரதீய ஜனதாவுக்குக் கொண்டாட்டமாக இருந்தது. காங்கிரஸ் கட்சியினரும் கேஜரிவாலை "பாஜகவின் நீட்சி" என்று கிண்டலடித்தார்கள்.இப்போது பாஜக தலைவர் நிதின் கட்கரி மீது ஊழல் புகார் சொல்லும்போது காங்கிரஸýக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. கேஜரிவால் பொய் சொல்கிறார் என்கிறார்கள் பாஜகவினர். அஞ்சலி தமானியா தனது சொந்த நிலப்பிரச்னை காரணமாகக் கட்கரியைத் தாக்குகிறார் என்கிறார்கள்.மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் அறக்கட்டளை முறைகேடு பற்றிய குற்றச்சாட்டை எதிர்த்து அமைச்சருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி நின்றது. அதே வேலையைத்தான் இப்போது பாஜக-வும் செய்கிறது. கட்கரிக்கு ஆதரவாக நிற்கிறது. கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பாவுக்கும் பாஜக பக்கபலமாகத்தான் நிற்கிறது.
வேளாண் பணிக்காக மகாராஷ்டிர அரசு கையகப்படுத்திய நிலத்தை, பயன்படுத்தாத நிலையில் விவசாயிகளிடம் திரும்பக் கொடுக்காமல், கட்கரிக்கு விற்கப்பட்டது என்கின்ற குற்றச்சாட்டுக்கு, அது ஒரு அறக்கட்டளை என்கிறார் கட்கரி.இதைப்போலத்தானே, அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் கூறுகிறார். அறக்கட்டளையின் ஒரே ஒரு நிகழ்ச்சிப் படத்தைக் காட்டி, தான் மாற்றுத் திறனாளிக்கு நன்மை செய்துவிட்டதாக "நிரூபித்தார்'. அத்துடன் நிறுத்தி இருந்தால் பரவாயில்லை. "என் தொகுதியில் வந்து எனக்கு எதிராகப் பேசிவிட்டு உன்னால் பத்திரமாகத் திரும்பிப் போக முடியுமா?' என்று சவால் விடுத்தாரே, அது அவர் வகிக்கும் சட்டத்துறை பதவிக்கே களங்கம் என்று விவரம் தெரிந்த, படித்த சல்மான் குர்ஷித்துக்கு ஏன் புரியவில்லை? இந்தப் பகிரங்கமான மிரட்டலுக்காக அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றால் அவர் சட்ட அமைச்சராக இருக்கிறார். அவரைக் கட்சித் தலைமை ஏற்றுக்கொள்கிறது. பிரதமர் அமைதி காக்கிறார். மக்களாட்சியின் மகத்துவங்களில் இதுவும் ஒன்று என்று நாம் சமாதானப்படுவதா, என்ன?
குர்ஷித்துக்கு ஆதரவாகப் பேசிய அமைச்சர் வேணி பிரசாத் வர்மா, "ஒரு மத்திய அமைச்சர் வெறும் 71 லட்ச ரூபாய்க்கா ஊழல் செய்வார்?' என்கிறார். என்ன அசட்டுத்தனமான வாதம் இது? அமைச்சர்கள் என்றால் பல்லாயிரம் கோடிகளில்தான் ஊழல் செய்ய வேண்டும் என்று இவர்கள் தங்களுக்குத் தாங்களே முடிவு செய்து விட்டார்களா என்ன? மக்களாட்சியின் மகத்துவங்களில் இதுவும் ஒன்று என்று நாம் சமாதானப்படுவதா, என்ன? ராபர்ட் வதேரா - டிஎல்எப் இடையிலான முறைகேட்டை விசாரிக்கத் தொடங்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி உடனடியாக வேறு துறைக்கு மாற்றப்படுகிறார். தான் 20 வருடங்களில் 43 இடமாறுதல்கள் பெற்றதை அவர் குறிப்பிட்டால், ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கிறார் என்பதற்காக அவர் மீது அரசு கோபம் கொண்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. ஆட்சியாளர்களுக்கு ஆமாம் சாமி போட மறுத்தால் அந்த அதிகாரி மாற்றப்படும் அவலம். மக்களாட்சியின் மகத்துவங்களில் இதுவும் ஒன்று என்று நாம் சமாதானப்படுவதா, என்ன?
ராபர்ட் வதேராயின் முறைகேடுகள் குறித்துக் காங்கிரஸ் தலைமை மெüனம் காக்கிறது. சட்டப்படி எந்தத் தப்பும் நிகழவில்லை என்று அவருக்கு சில அமைச்சர்களே வக்காலத்து வாங்குகிறார்கள். தனது மாமனார் பண்டித நேருவுக்கு எதிராக முந்த்ரா ஊழலை எழுப்பிய ஃபெரோஸ் காந்தி "அந்தக் காலத்து மருமகன்'. காங்கிரஸ் ஆட்சியைப் பயன்படுத்தி, பெரும் செல்வம் சேர்க்கும் ராபர்ட் வதேரா "இந்தக் காலத்து மருமகன்'. இதையும் மக்களாட்சியின் மகத்துவங்களில் ஒன்று என்று நாம் சமாதானப்படுவதா, என்ன?ஊழல்களை 1993-லிருந்து விசாரணை நடத்த வேண்டும் என்கிறார்கள். அலைக்கற்றை ஊழலை தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலிருந்து விசாரிக்கத் தொடங்க வேண்டும் என்கிறார்கள். ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்பதுபோல, சர்வகட்சிக் கொள்கையாக "ஊழலும் முறைகேடுகளும்' மாறிவிட்ட நிலைமைதான் காணப்படுகிறது. சல்மான் குர்ஷித்களும், நிதின் கட்கரிகளும் தேசிய அளவிலான அடையாளங்கள். மாநிலக் கட்சிகளிலும் சரி, ஒன்றுகூட விதிவிலக்காக இருப்பதாகத் தெரியவில்லை.
எல்லா அரசியல் கட்சிகளும், சிறிதும் பெரிதுமாக, அவரவர் சக்திக்கு ஏற்ப மத்தியில் ஆளும் கட்சிகளிடம் பலன் அடைந்தவர்கள்தாம். இதில் யாருமே விதிவிலக்கல்ல. கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, தனிப்பட்ட முறையில் பலன் அடைந்தவர்களும் நிறையப் பேர்.இவர்கள் அனைவருமே ஒரு விஷயத்தில் பேசி வைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள். ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தால், மறுக்கிறார்கள்: "ஆதாரமற்ற பொய்க்குற்றச்சாட்டு" என்கிறார்கள். ஆதாரத்தைச் சொன்னால், நிரூபிக்க முடியுமா? என்கிறார்கள். இவர்கள் பேச்சை நம்பி, நிரூபிக்கத் தயார் என்று சொன்னால், நீதிமன்றத்தில் வழக்கைத் தொடுக்கலாமே என்கிறார்கள். நீதிமன்றத்துக்கு போனால், 2ஜி வழக்குபோல, வெட்டி வேலையாக இழுத்தடிக்கப்படுகிறதே தவிர, முடிவதாகத் தெரியவில்லை. இதையும் மக்களாட்சியின் மகத்துவங்களில் ஒன்று என்று நாம் சமாதானப்படுவதா, என்ன?
ஏன் மகாத்மா காந்தி ஒரு தொழிலதிபராக இல்லை? ஏன் அவர் தனது குழந்தைகளை அரசியலுக்குக் கொண்டுவரவில்லை? ஏன் தனது மருமகன்களையாகிலும் தொழிலதிபர்களாக மாற்றவில்லை? நாடு விடுதலை பெற்றதும் ஏன் அவர் எந்தப் பதவியையும் ஏற்கவில்லை? பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்களின் அடிப்படைத் தகுதிகள் உண்மை, நேர்மை, எளிமை என்று ஏன் வாழ்ந்து காட்டினர் என்றெல்லாம் புரியாதவர்கள் புரிந்து கொள்க--இந்தியா விடுதலைபெற்ற நள்ளிரவில், காந்தி ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தார் என்று எழுதியுள்ளனர் "ஃப்ரிடம் அட் மிட்நைட்' நூலாசிரியர்கள்.அந்த நள்ளிரவில் விழித்துக்கொண்டிருந்தவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமே! அன்று முதல் இன்றுவரை அப்படியே இருக்கிறார்கள். மாறவே இல்லை!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...