|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 October, 2012

எங்கோ போகிறோம்?


மீபத்தில் சென்னை அரசு பள்ளியில் நடந்த சம்பவம் என் மனதை வதைப்படுத்திக் கொண்டிருக்கிறது.எனக்குத் தெரிந்த ஆசிரியை ஒருவர் ஒன்பதாம் வகுப்புக்குப் பாடம் எடுக்கிறார். அவரது வகுப்பில் படிக்கும் மாணவியின் தாய் அவரிடம்  வந்து " மேடம்.. நேத்து எம்பொண்ணு ரோட்ல வாந்தி எடுத்து மயக்கம் போட்டு விழுந்திருக்கா. கூட போன பொண்ணக் கூப்பிட்டு விசாரிங்க. அவதான் ஏதாச்சும்  வாங்கி குடுத்துருக்கணும்." என்று அந்தத் தாய் கூற, ஆசிரியை உடனே சம்பந்தப்பட்ட மாணவியை அழைத்து விசாரித்ததில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக வந்து விழுந்திருக்கிறது. இரண்டு மாணவிகளும் மது அருந்தியிருக்கின்றனர்!இது பல நாட்களாக நடந்து வந்திருக்கிறது.எட்டாவது படிக்கும் மாணவர்களிடம் பணத்தைக் கொடுத்து அரசு மதுபானக்கடையில் மது வாங்கி, அருந்தி இருக்கின்றனர். மதுபானத்தில் அந்த சிறுவர்களுக்கும் பங்கு வேறு! இருவரையும் தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் சென்று விசாரித்ததில் இந்த திடுக்கிடும் தகவல் தெரிய வரவே, அந்த வகுப்பில் உள்ள அனைத்து மாணவிகளின் பைகளை சோதனை செய்துள்ளனர்.அவர்களின் பைகளில் என்ன இருந்தது தெரியுமா?

பான்பராக், சிம் கார்டு, கைப்பேசி, ஹான்ஸ் போன்றவை. தினமும் ஒரு மாணவி வீட்டிற்குத் தெரியாமல் கைப்பேசியை எடுத்துவர, சிம் கார்டுகளை மாற்றித் தங்கள் ஆண் நண்பர்களிடம் பேசுகின்றனராம்.நீங்க இவர்களை கண்டிக்க மாட்டீர்களா டீச்சர் என்று நான் கேட்டதற்கு, "இதெல்லாம் எனக்கு முன்னாடியே தெரியும். நானே இந்தப் புள்ளைங்களை ராத்திரி கடைத்தெருவுல யூனிபாம்லயே பாத்திருக்கேன். பெத்தவங்களுக்கே அவங்க பசங்க மேல அக்கறை இல்ல. நமக்கு ஏன் வம்பு? ஏதாச்சும் கேட்டா கைய கிழிச்சிகிட்டு பழிய எங்க மேல போடுதுங்க. அதனால தான் அந்த பொண்ணோட அம்மா புகார் பண்ணதும் நான் தலைமை ஆசிரியர்கிட்ட போய்விட்டுட்டேன். அவுங்க ஏதாச்சும் பண்ணிக்கிறாங்க.." என்று சொன்னார் அந்த ஆசிரியை.அந்த மாணவிகள் தினமும் இரவு ஏழு,எட்டு மணிக்குத்தான் வீட்டிற்குச் செல்கின்றனர்.ஏன் இவ்வளவு லேட் என்று பெற்றோர்களும் கேட்பதில்லை;  எதாவது கண்டித்தாலோ, அடித்தாலோ பழியை நம் மீது போட்டு விடுகின்றனர் என்றுக் கூறி ஆசிரியர்களும் ஏதும் கேட்பதில்லை.

ஒரு சில மாணவிகள்தான் இப்படி என்று நாம் அலட்சியமாக விட்டால், இந்த எண்ணிக்கை கண்டிப்பாக அதிகரிக்கத்தானே செய்யும்? '18 வயதுக்குட்பட்ட மாணவர்களே மது அருந்துதல் தவறு' என்று நாம் கூறிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இவர்கள் பதினைந்தே வயது நிரம்பிய மாணவிகள்.. என்ன செய்யப் போகிறோம்? இதற்குக் காரணம் அவர்கள் வளர்ந்த சூழ்நிலையாகக் கூட இருக்கலாம்.அந்த வீட்டின் பெற்றோர் இருவரும் கூலி வேலை செய்பவர்களாக இருக்கலாம். இருவரும் தங்களது பிள்ளை எப்போது வருகிறது என்று தெரியாமல் அவளை ஆசிரியர்களிடம் ஒப்படைத்து விட்டு அவளது படிப்பிற்காக தினமும் கடுமையாக உழைப்பார்கள். அரசுதான், யார் எக்கேடு கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று தெருவுக்குத் தெரு மதுபானக்கடையை திறந்து வைத்திருக்கிறதென்றால், இப்படி ஆசிரியர்களும் அலட்சியமாக இருந்துவிட்டால் நாளைய தமிழ்நாட்டின் கதிதான் என்ன? 

பிள்ளைகளின் ஒழுக்கம் குறித்து கவனக்குறைவான பெற்றோர்களாக இருந்தாலும், ஆசிரியர்களின் அன்பால் எத்தனையோ மாணவர்கள் திருந்தி அவர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார்களே.. ஆசிரியர்கள் இப்படி தங்களின் பொறுப்பைத் தட்டிக் கழிப்பது சரியா? மாணவிகளே குடிக்கக் கூடிய இந்த சூழலை உருவாக்கியது யார் குற்றம்? இதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் என்கிறோம்.. அவர்கள் கையில் என்ன இருக்க வேண்டும் ? புத்தகமா புட்டியா? 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...