|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 December, 2012

சச்சின், தோனியை வெளியேற்ற தைரியமில்லை!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது இந்திய அணி. இத்தொடரில் சரியாக விளையாடாத காரணத்தால், யுவராஜ், ஜாகிர் கான் மற்றும் ஹர்பஜன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதே போன்று தொடர்ந்து சரியாக விளையாடாத சச்சின் மற்றும் கேப்டன் தோனி ஆகியோரை நீக்குவதற்கு பி.சி.சி.ஐ., க்கு தைரியமில்லை. இது பாரபட்சமான தேர்வை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஆமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற்றது. இப்போட்டியின் முடிவில் பேட்டியளித்த கேப்டன் தோனி, ஆமதாபாத் ஆடுகளம் தனக்கு திருப்தியளிக்க வில்லை என்றும், ஆட்டத்தின் முதல்நாளில் இருந்தே சுழலுக்கு ஏற்றவாறு மைதானம் தயார் செய்யப்படவில்லை என குறைபட்டுக்கொண்டார். இதையடுத்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி மைதானத்தின் ஆடுகளம் தோனியின் விருப்பப்படி மாற்றியமைக்கப்பட்டது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. புஜாரா, அஸ்வினை தவிர இந்திய அணியில் யாரும் சொல்லிக்கொள்ளும் படி விளையாட வில்லை. இப்போட்டியில் இந்திய அணியின் சச்சின் வெறும் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார் . தோனி எடுத்தது 35 ரன்கள். தவிர முன்னணி வீரரான விராட் கோஹ்லி எடுத்தது 27 ரன்கள்.
 
சச்சினுக்கு வாய்ப்புஅடுத்து கோல்கட்டாவில் நடந்த போட்டியின் போது, ஆடுகளத்தை மாற்றியமைக்க தோனி வற்புறுத்தியதும், அதற்கு மறுப்பு தெரிவித்து ஆடுகள பராமரிப்பாளர் பிரபீர் முகர்ஜி நீண்ட விடுமுறையில் சென்று விட்டார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது. கடந்த சில போட்டிகளைக் காட்டிலும், முதல் இன்னிங்சில் சிறப்பாக (76 ரன்கள்) எடுத்த சச்சின், இரண்டாவது இன்னிங்சில் வெறும் 5 ரன்களுக்கு வெளியேறினார்.இந்நிலையில் சச்சினுக்கு, நாக்பூர் டெஸ்டிலும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இவர் கடைசியாக விளையாடிய மூன்று டெஸ்டில் மொத்தம் 110 ரன்கள் (சராசரி 22.00) மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் இவரை விட கூடுதலாக ரன் எடுத்துள்ள யுவராஜ் சிங் (125 ரன், சராசரி 25.00) நீக்கப்பட்டுள்ளார்.
 
பாண்டிங் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் மோசமான "பார்ம்' காரணமாக தாமாகவே முன்வந்து ஓய்வை அறிவித்தனர். ஆனால் தனது "பார்ம்' குறித்து நன்கு அறிந்த சச்சினுக்கு ஓய்வு பெறும் எண்ணம் தோன்றாதது ஆச்சர்யம் அளிக்கிறது. சமீபத்தில் சச்சினை சந்தித்த தேர்வுக்குழுவினரிம், ""தன்னை அணியில் இருந்து நீக்குவது குறித்து தேர்வுக்குழுவே முடிவு செய்து கொள்ளலாம். இவ்விஷயத்தில் தலையிட மாட்டேன்,'' என, வெளிப்படையாக தெரிவித்தார். இருந்தபோதிலும் சச்சினுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படுவதால், தேர்வுக்குழுவினர் மீது விமர்சனம் எழுந்துள்ளது.இந்திய கேப்டன் தோனியின் சமீபத்திய செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை. கடைசியாக இவர் விளையாடிய மூன்று டெஸ்டில் 92 ரன்கள் (சராசரி 18.40) மட்டுமே எடுத்துள்ளார். தவிர இவரது கேப்டன் வியூகமும் கைகொடுக்கவில்லை. இதனால் மும்பை டெஸ்ட் போட்டியை தொடர்ந்து கோல்கட்டா டெஸ்டில் மோசமான தோல்வியை சந்திக்க வேண்டியதாயிற்று.
 
கடந்த ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து (4-0), ஆஸ்திரேலியா (4-0) அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. அப்போது கேப்டன் பொறுப்பில் இருந்து தோனியை நீக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். இதனை கண்டு கொள்ளாத தேர்வுக்குழு, தொடர்ந்து தோனியை கேப்டனாக நியமித்தது. தற்போது இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்திய அணி தொடரை இழக்கும் அபாயத்தில் உள்ளது. இனிமேலாவது தேர்வுக்குழுவினர் "செயல்படு அல்லது வெளியேறு' என்ற "பார்முலா' வை பின்பற்றும் பட்சத்தில், மோசமான தோல்வியிலிருந்து தப்பலாம்.இத்தொடரில் சிறப்பாக விளையாடாத காரணத்தால், ஜாகிர் கான், யுவராஜ் மற்றும் ஹர்பஜன் சிங் அணியிலிருந்து நீக்கப்பட்டனர். ஆனால் தொடர்ந்து சொதப்பி வரும் சச்சின், தோனி ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதைச் செய்வதற்குக் கூட பி.சி.சி.ஐ.,க்கு தைரியமில்லை. இந்திய அணி இது போன்ற எத்தனை கேவலமான தோல்விகளைப் பெற்றாலும் நாட்டைப்பற்றி கவலைப் படாமல் அணியில் நீடிக்கும் இவர்கள் போன்றவர்களை அணியிலிருந்து விலக்கி அணிக்கு புத்துயிர் கொடுக்க திராணியில்லாமல் பி.சி.சி.ஐ., செயல்படுகிது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...