|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 December, 2012

-இன்று சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்-

உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஆபத்தாக இருக்கக்கூடிய பிரச்னைகளில் முதலிடத்தை பிடித்திருப்பது ஊழல். இது நாட்டின் பொருளாதார, சமூக, அரசியல் முன்னேற்றத்தையே பாதிக்கக் கூடியது. ஊழல் ஒரு கடுமையான குற்றம். ஊழல் பரவாமல் தடுக்கக்கூடிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக டிச., 9ம் தேதி, சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி, தனியார் தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், நிதி நிறுவனங்களில் ஊழல் பரவி விட்டது. அரசின் திட்டங்களில், கோடிக்கணக்கில் உயர்ந்து விட்டது. 
 
பொது சொத்தை, தனியாரின் கைகளுக்கு போக விடுவது; அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது; விதிகளை மீறுவது; கடமையை செய்ய ஆதாயம் எதிர்பார்ப்பது ஆகியவை தான் ஊழல். இது பல வழிகளில் நடக்கிறது. லஞ்சம் வாங்குவதை அதிகாரிகள், தொழிலாக செய்கின்றனர். மக்களும் அதற்கு பழகி விட்டனர். லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்று சட்டம் இருந்தாலும், இதனால் தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவு.கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை, லைசென்ஸ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பெற லஞ்சம் ஒரு தடைக்கல்லாக மாறிவிட்டது. அரசு, ஒரு திட்டத்தை உருவாக்கினால் அதை செயல்படுத்துவது, அதிகாரிகளின் கைகளில் உள்ளது. அதிகாரிகளே தவறு செய்யும் போது, மக்களின் வரிப்பணம், ஊழல் என்ற பெயரில் தனிநபரின் பாக்கெட்டுக்கு செல்கிறது. 
 
ஒவ்வொரு அரசு அலுவலங்களிலும், லஞ்ச ஒழிப்பு துறையினரின் முகவரி, தொலைபேசி எண்களை தெளிவாக குறிப்பிட வேண்டும். பொது இடங்களிலும் இதனை விளம்பரப்படுத்தலாம். அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், மக்கள் தைரியமாக புகார் செய்ய வேண்டும். லஞ்சம் வாங்கி கைது செய்யப்படும் அதிகாரிகளுக்கு, கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். அதன் விவரத்தையும் பொது இடங்களில் விளம்பரப்படுத்த வேண்டும். ஊழல் செய்தவர்களின் சொத்துகளை அரசுடமையாக்க வேண்டும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...