இளையராஜா பிப்ரவரி 23ம் தேதி அமெரிக்காவில் முதல் முறையாக நேரடி இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐட்ரீம்ஸ் நிறுவனம் இந்த நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. நியூஜெர்சி, ப்ரூடென்ஷியல் மையத்தில் இந்த இசை நிகழ்ச்சி கோலாகலமாக நடக்கவுள்ளது. ரிஹானா போன்ற பெரிய பெரிய ஆட்களின் இசை நிகழ்ச்சி நடக்கும் அரங்கம் இது. இங்குதான் இசை ராஜாங்கம் நடத்த உள்ளார் இளையராஜாவின் நிகழ்ச்சி குறித்து ஐட்ரீம்ஸ் நிறுவன இணை நிறுவனர் ராஜ்குமார் கூறுகையில், இளையராஜாவின் இசை யாருடனும் ஒப்பிட முடியாதது. மகத்தான இசை மேதை அவர். அவருக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவருடைய நிகழ்ச்சியை அதிலும் அமெரிக்காவில் அவரது முதல் நேரடி நிகழ்ச்சியை நடத்துவதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.
அவரும் இதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார் என்றார். மேலும் அவர் கூறுகையில், அவர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல நூறு பாடல்களைப் படைத்துள்ளார். அதிலிருந்து எதைத் தேர்வு செய்வது என்றே தெரியவில்லை. காரணம் அத்தனையுமே முத்துக்கள். இதில் எதை விடுவது... நேரத்தையும் பார்க்க வேண்டியுள்ளது. இதனால் நான்கு மணி நேரம் நடைபெறப் போகும் அந்த ஷோவில், இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்களைத் தேர்வு செய்து அதை இடம்பெறச் செய்யவுள்ளோம் என்றார் அவர். இளையராஜாவின் இந்த இசை நிகழ்ச்சிக்கு 100 டாலர் முதல் 500 டாலர் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஹரிஹரன், சித்ரா, மனோ உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாடவுள்ளனர். இந்த நிகழ்ச்சியைக் காண 18000 ரசிகர்கள் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment