தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் கூடுதலாக வசூலித்த பள்ளி கட்டணத்தை திரும்ப பெரும் அதிகாரம் மற்றும் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கல்வி கட்டண நிர்ணய கமிட்டிக்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் கமிட்டி வைக்கப்பட்டது. இந்த கமிட்டியானது தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு மாணவர்களிடம் இருந்து எவ்வளவு கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டுமென்பது குறித்து நிர்ணயம் செய்தது.
இந்த நிலையில் சென்னை அண்ணா நகரில் உள்ள லியோ மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் இருந்து கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தது. இந்த புகார் குறித்து விசாரிக்குமாறு மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநரகத்திற்கு கல்வி கட்டண கமிட்டி உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநரக ஆய்வாளர் மேற்கண்ட பள்ளியில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். அதில் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட மாணவர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலித்து உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அப்பள்ளியில் உள்ள 731 மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட 29 லட்சத்து 36 ஆயிரத்து 530 ரூபாய் கூடுதல் கட்டணத்தை மாணவர்களிடம் திருப்பி கொடுக்குமாறு பள்ளி நிர்வாகத்திற்கு கட்டண கமிட்டி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து லியோ மெட்ரிக்குலேசன் பள்ளி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கல்வி கட்டணக் கமிட்டிக்கு கட்டணம் நிர்ணியிக்க மட்டுமே அதிகாரம் உள்ளது. பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கமிட்டிக்கு அதிகாரம் இல்லை என்று தனது மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.பானுமதி மற்றும் கே.கே.சசீதரன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரித்து, பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் மட்டுமின்றி, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், கல்வி கட்டண கமிட்டிக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளித்த நீதிபதிகள் பள்ளி நிர்வாகத்தின் மனுவை தள்ளிபடி செய்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment