|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 February, 2013

சாதுக்களும் ஆதரிக்கும் "பிரதமர்" மோடி!


குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும் என்ற குரல் பாஜகவில் மட்டுமே வலுத்து வந்த நிலையில் இந்துத்துவா பேசும் இயக்கங்களுக்குள்ளும் நீட்சி அடைந்திருக்கிறது. இதன் உச்சமாகத்தான் சாதுக்களும் மோடிக்கு ஆதரவு என்ற செய்தி வெளியாகி உள்ளது. நரேந்திர மோடியை நல்ல நிர்வாகி என்று முன்னிறுத்துகின்றன பாரதிய ஜனதாவும் அதன் தோழமை சக்திகளும். பாஜக, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கங்கள் மோடியை தாங்கள் சார்ந்திருக்கும் ‘இந்துத்துவா தத்துவார்த்த அரசியல் காரணமாக ஆதரிப்பதில் முன்னிறுத்துவதில் வியப்பில்லை. ஆனால் சாதுக்கள் ஏன் மோடியை ஆதரிக்க வேண்டும்? சாதுக்களுக்கும் மோடிக்கும் உள்ள தொடர்பு என்பது அவர் ஒரு இந்துத்துவா முகம் என்பது மட்டும்தானா? இல்லை என்கிறது குஜராத்தின் ஜூனாகத் மற்றும் இன்ன பிற மலை பிரதேசங்கள்!! ஆம் நீங்கள் வரலாற்றுப் புத்தகங்களில் படித்த அதே ஜூனாகத் தான்! 
 
 நாடு விடுதலை அடைந்த போது இருந்த 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களில் இந்த ஜூனாகத்தும் ஒன்று! பெரும்பான்மையான மக்கள் இந்துக்களாக, ஆனால் ஆட்சிப் பொறுப்போ இஸ்லாமியர் வசம் இருந்து வந்தது. அதனால் அவர் பாகிஸ்தானுடன் இணையப் போவதாக கூறினார். இந்த மாவட்டத்தின் கடல்வழியே பாகிஸ்தானுடன் தொடர்பு கொள்வோம் என்றெல்லாம் கூறினார். ஆனால் இந்து மக்களோ கிளர்ந்தனர். இதனால் ஜூனாகத் மன்னர் பாகிஸ்தானுக்கு தப்பி ஓட பின்னர் மக்கள் கருத்தறிய வாக்கெடுப்பு நடத்தி இந்தியாவோடு இணைந்த அந்த ஜூனாகத் பிரதேசம் தன்னுள் சில விஷயங்களை அதிகம் வெளிப்படுத்தாமலேயே இருந்து வந்துள்ளது. இதில் மிகவும் முக்கியமானது ஜூனாகத்துக்கும் சாதுக்களுக்குமான உறவுகள் என்பதுதான்! உங்களுக்கு சாதுக்கள், நிர்வாணசாமிகளாக நாகா சாதுக்கள் என்றால் நினைவுக்கு வருவது எது? காசி, ஹரித்துவார், ரிஷிகேஷ், அலாகாபாத் போன்ற புண்ணிய தலங்கள்தான். ஆனால் இந்த வரிசையில் ஜூனாகத்துக்கும் ஏன் குஜராத் மாநிலத்துக்கே நிகரான இடம் இருக்கிறது என்பதுதான் 'நிர்வாண' உண்மை. 
 
ஆனால் இது அதிகம் பேசப்படாத ஒரு விஷயமும் கூட! தற்போது நடைபெற்று வரும் அலகாபாத் கும்பமேளாவை நடத்துகிற நிர்வாகிகள் குஜராத் மாநில ‘அகாடாக்களும்" முக்கிய பங்கு இருக்கிறது என்பது அந்த மாநிலத்தின் 'இந்துத்துவா' ஆழத்தை சொல்லும்!! அகாடாக்கள் என்பது ஆதிசங்கரரால் நிறுவப்பட்டவை. மொத்தம் 13 அகாடாக்கள் உள்ளன. ஒவ்வொரு அகாடாவும் பல படிநிலைகளாகப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. அகாடாக்கள்தான் சாதுக்களை உருவாக்குகின்றன. இந்த சாதுக்கள்தான் ஒவ்வொரு கும்பமேளாவிலும் லட்சக்கணக்கில் வந்து குவிகின்றனர். கும்பமேளாவில்தான் அகாடாக்களின் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த அகாடாக்கள் ஜூனாகத்திலும் இருக்கின்றன. ஏன் குஜராத்தின் வேறு சில மாவட்டங்களிலும் இருக்கின்றன. நாகா சாதுக்களும் சாதுக்களும் சாமானியர்கள் அல்ல.. கடுங்குளிரில் இமயமலை அடிவாரங்களிலேயே கொட்டும் உறைபனியிலேயே வெறும் சாம்பலைப் பூசிக் கொண்டு நிர்வாணிகளாக உலா வருகின்ற அளவுக்கு பயிற்றுவிக்கப்பட்ட வலிமை பெற்றவர்கள். 
 
இந்த அகாடாக்களின் சாதுக்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது அகாடாக்களை ஒடுக்கவோ எந்த ஒரு சட்டமும் இல்லை! எந்த ஒரு ராணுவமும் இல்லை! போலீஸும் இல்லை! இவர்கள் வழிபாட்டுக்குரியவர்கள்! இறைவனுக்கு சமமானவர்கள் என்கிறது ஹிந்து மதம்! அதுவும் நிர்வாண சாதுக்களிடம் ஆசி பெறுவதற்கு அலைமோதுகிற பக்த கோடிகளை கும்பமேளா கூட்டங்களில் காணலாம்! இன்னும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயமும் இருக்கிறது. நிர்வாண சாதுக்கள், சாதுக்களின் சங்கமம் கும்பமேளா காலங்கள் மட்டுமல்ல.. அவர்கள் ஆண்டுதோறும் கூடுகிற இன்னொரு இடமும் இருக்கிறது! அதுதான் குஜராத்தின் ஜூனாகத்! ஜூனாகாத்தில் அகாடாக்கள் வரிசை கட்டி நிற்கிற கிர்நார் மலை அடிவாரத்தில் உள்ள சிவன் கோயிலில் சிறு கிணறு போல் ஒரு இடம் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி நாளில் சிறப்பு பூஜைகள் நடத்தி 'நிர்வாண' கோலத்தில் இந்த கிணற்றில் புனித நீராடுவதும் சாதுக்களின் கடமைகளில் ஒன்றாக வகுக்கப்பட்டிருக்கிறது உண்மைதான். 
 
சாதுக்களின் புனித தேசங்கள் ரிஷிகேஷ், ஹரித்துவார், காசிகளோடு மட்டும் நிற்கவில்லை.. குஜராத்தும் அதன் ஜூனாகத் உள்ளிட்ட பிரதேசங்களும்தான் அவர்களுக்கு புனித தேசங்கள்! புண்ணிய பூமிகள்!!. அப்ப இந்துத்துவா பேசுகிற அதுவும் தங்கள் புனித தேசமான குஜராத்தின் முதல்வரான மோடியை ஆதரிக்காமலா போய்விடுவார்கள் சாதுக்கள்! சாதுக்களின் அகாடாக்கள் ஒன்று கூடி மோடியைத்தான் பிரதமர் ஆக்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டால் பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத் என அத்தனை இந்துத்துவா பேசும் சக்திகளும் வாய்மூடி ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்பது எழுதப்படாத நடைமுறை. இதனால்தான் சாதுக்களின் சங்கமமான கும்பமேளாவுக்கு பயணப்படுகிறார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி! அப்புறம் என்ன?  

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...