சாதிப்பதற்கு உடலின் ஊனம் தடையில்லை என மன தெம்புடன் தன்னை நிரூபித்து முன்மாதிரியாக திகழ்கிறார் ஒரு ஏழை மாணவர். சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.75 மீட்டர் உயரம் தாண்டி உலக சாதனை படைத்துள்ளார். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பெரிய வடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் - சரோஜா தம்பதியினரின் மகன் மாரியப்பன் (18). மாற்றுத்திறனாளி. அப்பா தங்கவேல் சிறுவயதிலேயே காலமாகிவிட்டார். தாயார் சரோஜா, செங்கல் சூளை வேலைக்குச் சென்று மாரியப்பன், அவரது இரு தம்பிகள், அக்கா ஆகியோரை காப்பாற்றி வருகிறார்.
மாரியப்பன், பெரிய வடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 கணினிஅறிவியல் பிரிவு எடுத்து பயின்று வருகிறார். வலது கால் பாதிக்கப்பட்ட இவர், 6-ம் வகுப்பு முதல் உயரம் தாண்டுதல் போட்டியில் ஆர்வம் கொண்டு விளையாடத் தொடங்கினார். வறுமை வயிற்றுக்கு பிரச்சனை தரலாம் தனது கால்களுக்கு இல்லை என ஆர்வமாக விளையாட தொடங்கியவர் மாரியப்பன். சிறப்பு விசயம் என்னவென்றால் மாவட்ட அளவில் பொதுப்பிரிவு(கால்கள் நன்றாக உள்ளவர்கள் உட்பட்ட) மாணவர்களுக்கான போட்டியில் பங்கேற்று 4 முறை முதல் பரிசை வென்றுள்ளார். இதையடுத்து, கடந்த 2012-ம் ஆண்டு பெங்களூரில் இந்திய பாரலிம்பிக் கமிட்டியின் மூலம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போட்டியில் கலந்து கொண்ட மாரியப்பன், 1.72 மீட்டர் உயரம் தாண்டி முதல் பரிசை வென்றார்.
இதையடுத்து, கடந்த 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு மாரியப்பனுக்கு கிடைத்தது. ஆனால், குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக வெளிநாடு செல்வதற்கு பாஸ்ப்போர்ட் எடுக்கக் கூட பணம் இல்லாததால் அவரால் செல்ல முடியவில்லை. இதனால், பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நாகராஜ் என்ற மாற்றுத்திறனாளி மாணவர் லண்டன் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். அந்த லண்டன் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.74 மீட்டர் தாண்டியவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மார்ச் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை பெங்களூரில் இந்திய பாரலிம்பிக் கமிட்டி நடத்திய தேசிய அளவிலான பாரலிம்பிக் போட்டியில் சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் மாரியப்பன் மீண்டும் கலந்து கொண்டார். இப்போட்டியில், 1.75 மீட்டர் உயரம் தாண்டி முதல் பரிசை வென்றார்.இது இந்த பிரிவில் உலக சாதனை. சாதிக்க வறுமையும்,ஊனமும் தடையில்லை என போராடி நிருபித்துள்ளார்.
No comments:
Post a Comment