உலகம் இயங்குவதற்கு, தண்ணீர் என்ற சக்கரம் அவசியமானது. இது ஐம்பூதங்களில் ஒன்று. இயற்கையுடன் தொடர்புடையது. நேரடியாகவும், மறைமுகமாகவும் அன்றாட வாழ்வின் பெரும்பாலான பணிகளுக்கு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும், சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தியும்ற மார்ச் 22ம் தேதி, உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பும் வறட்சி ஏற்பட்டது. அப்போதெல்லாம் தண்ணீரின் தேவை குறைவாக இருந்தது. இப்போது நிலைமையே வேறு. மக்கள்தொகை பெருக்கம், தொழில் வளர்ச்சியால் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் ஆண்டுக்கு ஆண்டு, உலகுக்கு கிடைக்கும் நல்ல நீரின் அளவு குறைகிறது. மூன்றாம் உலகப்போர் வருமானால் அது தண்ணீருக்காகதான் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். குடிநீர், சுகாதாரம், விவசாயம், கால்நடைகளுக்கு என பல வழிகளில் தண்ணீரின் பயன்பாடு அவசியம்.
வறட்சி ஏன்: பெருகும் மக்கள் தொகை, காடுகளை அழித்தல், மழை நீரை தேக்கி வைக்காதது, நதிகள் இணைக்கப்படாமல் இருப்பது, சுற்றுச்சூழல் மாசுபாடு, தொழில் மயம், பூமி சூடாவது ஆகியவை தண்ணீர் பஞ்சத்துக்கு காரணம். சரியான நேரத்தில், மழை பெய்வது சமீப காலமாக நடப்பதில்லை. அப்படி இருக்கும் போது, உலகின் தண்ணீர் தேவையை எப்படி ஈடு கட்ட முடியும். இதையும் செயற்கையாக தயாரிக்கலாம் என்றால், செலவு பன்மடங்கு அதிகம். எனவே, இயற்கையாக கிடைக்கும் நீருக்கு போட்டி ஏற்பட்டுள்ளது.
என்ன செய்யலாம்: தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டியது, காலத்தின் கட்டாயம். ஏனெனில், இந்தியாவில் மூன்றில் ஒரு தெருக்குழாய் பழுதடைந்ததாகவே உள்ளது என ஆய்வு தெரிவிக்கிறது. சிலரே பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் உற்பத்தியை குறைத்துக் கொள்ளலாம். அவசியமில்லாத பணிகளுக்கு, தண்ணீரை பயன்படுத்துவதை நிறுத்தலாம். உணவுப் பொருள் வீணாவதை தடுக்க வேண்டும். மழை நீரை ஏரிகளில் சேமித்து வைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மரம் வளர்ப்பது, மழைப்பொழிவை அதிகரிக்கும் என்பதால், அதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். அதிர்ச்சியளிக்கும் ஆய்வு: தண்ணீர் தொடர்பான ஐ.நா., ஆய்வில், தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்.
* உலகில் 85 சதவீத மக்கள் வறட்சியான பகுதியில் வாழ்கின்றனர். 78 கோடி பேருக்கு குடி தண்ணீர் வசதி இல்லை. 250 கோடி பேருக்கு, அடிப்படை தேவைகளுக்கான தண்ணீர், போதுமானதாக இல்லை. ஆண்டுதோறும் 60 - 80 லட்சம் பேர், தண்ணீர் தொடர்பான நோயினால் இறக்கின்றனர்.
* தற்போதிருக்கும் தண்ணீர் தேவைக்கான அளவு, 2050ம் ஆண்டுக்குள், 19 சதவீதம் அதிகரிக்கும்.
* உலகிலுள்ள ஆறுகளில் 276 ஆறுகள் (ஆப்ரிக்காவில் 64, ஆசியா 60, ஐரோப்பியா 68, வட அமெரிக்கா 46, தென் அமெரிக்கா 38), ஒரு நாட்டின் எல்லைக்கு அப்பாலும் செல்கிறது. இதில் 185 ஆறுகளை இரண்டு நாடுகளும், 20 ஆறுகளை 5 நாடுகளும் பங்கிடுகின்றன. அதிகபட்சமாக மத்திய ஐரோப்பாவில் "தன்யூப்' என்ற ஆறு, 18 நாடுகளால் பங்கிடப்படுகிறது. உலகில் 46 சதவீத நிலப்பரப்பு, எல்லை கடந்த ஆறுகளால் சூழப்பட்டுள்ளது.
* அரேபிய நாடுகளில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. கடல்நீரைத் தான் சுத்திகரித்து பயன்படுத்துகின்றனர். அரேபிய நாடுகளில் 66 சதவீதம், வேறு நாடுகளில் இருந்து தண்ணீரை பெறுகின்றன.
* வளர்ந்த நாடுகள், அதிகளவில் தண்ணீரை மறுசுழற்சி செய்கின்றன. ஆனால் வளரும் நாடுகளில் பயன்படுத்திய தண்ணீர், 90 சதவீதம் அப்படியே வீணாக ஏரி, கடலில் கலக்கிறது. இதனாலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
No comments:
Post a Comment