|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 March, 2013

வண்டலூரில் கோயம்பேடு!

 
தென் மாவட்ட மக்களின் நலனுக்காக தென் சென்னைப் பகுதியிலேயே பிரமாண்டமான ஒரு பஸ் நிலையத்தை உருவாக்க தீர்மானித்துள்ளது சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமமான சிஎம்டிஏ. வண்டலூரில் இந்தப் பிரமாண்ட பேருந்து நிலையம் உருவாகவுள்ளது. சென்னை மாநகரின் ஒரே ஒரு புறநகர்ப் பேருந்து நிலையம் தற்போது கோயம்பேட்டில் இயங்கி வருகிறது. இங்கிருந்துதான் அனைத்து வெளியூர்ப் பேருந்துகளும் இயங்கி வருகின்றன. ஆனால் மாநகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கோயம்பேடு வருவதற்கு மக்கள் பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் கூட்டநெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து புதிய புறநகர்ப் பேருந்து நிலையம் குறித்து சிஎம்டிஏ சிந்திக்க ஆரம்பித்துள்ளது.

தற்போது கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்கள் உள்பட பல்வேறு ஊர்களுக்கும் தினசரி 2000க்கும் மேற்பட்ட பஸ்கள் புறப்பட்டுச் செல்கின்றன, வருகின்றன.கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து தாம்பரத்தைத் தாண்டிச் செல்வதற்குள் இந்த பஸ்களுக்கு போதும் போதுமென்றாகி விடுகிறது. மாலை நேரங்களில் நகரைக் கடந்து செல்லவே 2 மணிநேரம் ஆகிறதாம்.இந்த நெரிசல், பயண நேர விரயம், மக்கள் படும் பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வேளச்சேரி, மாதவரம் ஆகிய இடங்களில் புதிய புறநகர் பஸ் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.வேளச்சேரியில் 12 ஏக்கர் நிலத்தில் பேருந்து நிலையம் அமைக்க ரூ.48 கோடியும், மாதவரத்தில் 8 ஏக்கர் நிலப்பரப்பில் பஸ் நிலையம் அமைக்க ரூ.32 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் மோனோ ரயில் திட்டப்பணியால் இந்த இரண்டு பஸ் நிலையங்களும் அமைக்கப்படுவது தாமதமாகி வருகிறது.இதையடுத்து கோயம்பேடு பஸ் நிலையத்தைப் போலவே ஒரு பிரமாண்ட பஸ் நிலையத்தை உருவாக்க தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது வண்டலூர் பகுதியில், இந்த பிரமாண்ட பஸ் நிலையத்தை உருவாக்கப் போகின்றனர்.

தாம்பரத்திற்கு அடுத்து உள்ள பகுதிதான் வண்டலூர். இங்குதான் இந்தியாவின் மிகப் பழமையான விலங்கியல் பூங்கா உள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் கோயம்பேடு செல்லாமல் அதனை இங்கே நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வசதியாக வண்டலூரில் ஒரு புதிய பஸ் நிலையம் 65 ஏக்கரில் அமைய உள்ளது.ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வெளிவட்ட சாலையும், வண்டலூர்- வாலாஜாபாத் சாலை சந்திக்கும் இடத்தில் இருந்து 250 மீட்டர் தொலைவிலும் அதற்கான நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.பஸ் நிலையம், பணிமனை, வாகன நிறுத்துமிடம் என பல்வேறு வசதிகள் கொண்டதாக வரைவு திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. நிலங்களை கையகப்படுத்துவதற்கான திட்டம் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக சி.எம்.டி.ஏ. வட்டாரம் தெரிவித்துள்ளது.ஏற்கனவே தாம்பரத்தை ஒரு ரயில்வே முனையமாக மாற்ற ரயில்வே துறை திட்டமிட்டு வருகிறது. தென் மாவட்ட ரயில்கள் அனைத்தையும் தாம்பரத்திலிருந்து இயக்க ரயி்ல்வே திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது தென் மாவட்ட பஸ்களை வண்டலூரிலிருந்து இயக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதால் இது தென் மாவட்ட மக்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...