|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 March, 2013

எங்கே செல்லும் இந்த போதை?


விலையில்லா அரிசி, "டிவி', மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மடிக்கணினி... வேலை உறுதித் திட்டத்திலே வேலை செய்யாமலே சம்பளம். இத்தனையும் இலவசமாய்க் கிடைக்கும்போது, எதற்காக வேலைக்குப் போக வேண்டும்? கிடைப்பதை வைத்துக் குடிப்பது, குற்றம் செய்த காசிலாவது குடிப்பது, எதுவுமே இல்லாவிட்டால் எவரிடமாவது பிச்சை எடுத்தாவது குடிப்பது... எத்தனையோ ஏழைத்தமிழர்களின் பொழுதுகள் இப்படித்தான் கழிகின்றன. கல்யாண கொண்டாட்டமா... குடி; கருமாதி துக்கமா...குடி; கொள்ளையடிக்கும் முன், கொலை செய்யும் முன், அதிகாலையிலும், அர்த்த ராத்தியிலும்...குடி குடி குடி.

வார்டுக்கு ஒரு நூலகமில்லை; ஊருக்கு ஒரு மருத்துவமனையில்லை; பேருக்கு ஒரு தொழிற்சாலையுமில்லை; ஆனால், கடைக்கண் நோக்கினாலே மதுக்கடைதான் தெரிகிறது எங்கேயும். இதில் பெரிய வேதனை என்னவென்றால், வாழ்வைத் துவங்க வேண்டிய வாலிபப் பருவத்திலேயே, இளைஞர்கள் பலரும் இப்படி போதையின் வாசலில் வீழ்ந்து கிடப்பதுதான். மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன; குடும்ப உறவுகள் குலைந்து போகின்றன; "அம்மா'வின் கருணைப் பார்வையின்றி, அப்பாக்கள் இல்லாத குழந்தைகள் அதிகமாகிக் கொண்டே போகிறார்கள்; குடியால் விளையும் குற்றம் கூடிக்கொண்டே போகிறது; உழைப்பதற்குத் தேவையில்லாத, திராணியில்லாத தமிழர் தலைமுறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது டாஸ்மாக். மதுக்கடைகளை மூடச்சொல்லி, உண்ணாவிரதம் இருக்கிறார்கள்; ஊர் ஊருக்கு ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்; உச்சி வெயிலில் நடைப்பயணம் போகிறார்கள்; எதற்குமே அசைந்து கொடுப்பதாக இல்லை அரசு.

மற்ற மாவட்டங்களை விடுங்கள்... உழைப்புக்கும், வளர்ச் சிக்கும் பெயர் பெற்ற கோவை மாவட்டத்தில், கடந்த நிதியாண்டில் மட்டும் 1,559 கோடியே 97 லட்சத்து 12 ஆயிரத்து 980 ரூபாய்க்கு "சரக்கு' விற்றுள்ளது. மாதத்துக்கு, மூன்றரை லட்சம் மது பாட்டில்களும், ஒன்றரை லட்சம் பீர் பாட்டில்களும் விற்கின்றன; இதன் மதிப்பு, சராசரியாக 140 கோடி ரூபாய். முன் வாசலில் பெட்டியில் கொடுப்பதை, பின் வாசலில் வட்டியும் முதலுமாய் வாங்கி விடும் வித்தையாகத்தான் இது தெரிகிறது. இதுவும் போதாது என்று 25 ஆயிரம் கோடி ரூபாய் என்று இந்த நிதியாண்டுக்கு இலக்கு வைக்கப்பட்டிருக்கிறதாம். எங்கே செல்லும் இந்த (போ)பாதை...?

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...