நமது குடும்பத்தினரோ, உறவினரோ, நண்பரோ நம்மிடம் ஒரு விஷயத்தைக் கூறும் போது அதனை காது கொடுத்துக் கேட்க வேண்டியது மிகவும் அவசியம். அதுவும் அவரது பிரச்னை பற்றி கூறும் போது அதனை உதாசீனப்படுத்தக் கூடாது. குடும்பத்தில் தினமும் ஒரு வேளையாவது அனைவரும் அமர்ந்து ஒன்றாக பேசி சிரித்து உண்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்று பல மருத்துவக் கட்டுரைகளும், மன நல நிபுணர்களும் அறிவுறுத்துகின்றனர். இதற்குக் காரணம் இருக்கிறது. அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேச நமக்கெல்லாம் இப்போது நேரம் கிடைப்பதில்லை. ஒரு வேளை உணவையாவது சேர்ந்து உண்ணும் போது, ஒருவரிடம் ஏற்பாடும் மாற்றங்களை மற்றவர்கள் உணர்ந்து கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தும்.எதிர்மறைச் சிந்தனைகள் எப்போதுமே உற்சாகத்தை அளிப்பதில்லை. அதுபோலத்தான் மனச்சோர்வு அடைந்தவர்களுக்கு எதிர்மறைச் சிந்தனைகள் அதிகமாக இருக்கும். சிலர் எப்போதும் எதிர்மறையாகவே பேசுவார்கள். அது இயல்பாக இருக்கலாம். ஆனால், சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தவர்கள் திடீரென எதிர்மறையாக பேச ஆரம்பித்தால் எங்கேயோ பிரச்னை இருக்கிறது என்பதை குடும்பத்தார் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு விஷயத்தை சகோதரியோ, சகோதரனோ நம்மிடம் கூறி, இவ்வாறு எனக்கு ஒரு பிரச்னை உள்ளது. அதனை பெற்றோரிடம் கூறி விடாதே என்று சொன்னால்.. அங்கு ரகசியத்தைக் காப்பதா அல்லது சகோதரி அல்லது சகோதரனைக் காப்பதா என்ற கேள்வி எழும். இதற்கு பதில் சகோதரி அல்லது சகோதரனைக் காப்பதே முக்கியம் என்பதாகும். எனவே, உடனடியாக இதனை பெற்றோரிடம் தெரியப்படுத்தி, நமது சகோதரி அல்லது சகோதரியை பிரச்னையில் இருந்து விடுபட வைக்க வேண்டும். இதே விஷயம் நண்பர்களுக்கும் பொருந்தும், நமது நண்பனைப் பற்றி அவர்களது பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டியது அவர்களது உரிமை. எனவே அதனை தாராளமாக பெற்றோரிடம் கூறி பிரச்னையில் இருந்து விடுபட பெற்றோரின் உதவியை நாடலாம்.
எதுவாக இருப்பினும், ஒரு பிரச்னை உங்களிடம் வரும் போது அதனை காது கொடுத்துக் கேளுங்கள். ஒருவர் சாதாரணமாகக் கூறும் செயலுக்குப் பின் மிகப் பெரிய விஷயம் நடந்திருக்கலாம். அவர்கள் கூறும் விதத்தை நீங்கள் கவனமாகக் கேட்டால் தான் அதன் ஆழத்தை புரிந்து கொள்ள முடியும்.எனவே குழந்தையாக இருந்தாலும், பெரியவராக இருந்தாலும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்னையை கவனமாகக் கேட்டு அதற்கேற்ற தீர்வினை உடனடியாகக் காண முயலுங்கள். பெரும்பாலும், ஒருவர் தனது பிரச்னைகளை கவனித்துக் கேட்கிறார் என்பதே, பிரச்னைக்குள்ளானவர்களுக்கு பலம் சேர்க்கிறது. மேலும், அதற்கான தீர்வினைக் காண நீங்கள் முயலுவது அவர்களை மேலும் நம்பிக்கைக் கொள்ள வைக்கும். எனவே, நம்முடன் இருப்பவர்களில் மனச்சோர்வடைந்தோருக்கு உதவுவோம்.. மனநலத்தைக் காப்போம்..
No comments:
Post a Comment