இந்தியாவில் நான்கு பெருநகரங்கள், ஏராளமான நகரங்கள், அடுக்குமாடிக் கட்டடங்கள், ஆடம்பரமான வாழ்க்கை என்று ஏகப்பட்ட டாம்பீகம் நிறையவே இருந்தாலும், பல விஷயங்களில் நாம் இன்னும் சர்வதேச தரத்திற்கு பக்கத்தில் கூட வர முடியாத நிலையே காணப்படுகிறது. எக்கானாமிக்ஸ் டைம்ஸ் - ஜனக்கிரஹா இணைந்து நடத்திய ஒரு சர்வேயில் இது தெரிய வந்துள்ளது. இந்தியாவின் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய பெருநகரங்கள் உள்பட 11 நகரங்களை ஆய்வுக்காக எடுத்துள்ளனர். மொத்தம் 4200 பேர் இதற்காக பேட்டி காணப்பட்டனர். நல்ல சாலைகள், போக்குவரத்து வசதிகள், காற்று மாசு அளவு, சுத்தமான குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த ஆய்வுக்காக கருத்தில் கொள்ளப்பட்டன. சிறந்த வாழ்க்கைத் தரம், மாசு பாதிப்பு, பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இந்திய நகரங்களில் நிறைய பிரச்சினைகள்.அடிப்படை வசதி குறைபாடு, மோசமான சாலைகள், போக்குவரத்து நெரிசல், காற்று மாசு, ஒலி மாசு, சுகாதாராக் கேடான குடிநீர், மின் பற்றாக்குறை என நிறைய அடுக்கலாம்.
சர்வதேச அளவுகோலுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் 11 முக்கியநகரங்களும் சற்றே குறைந்த தரத்தில்தான் உள்ளன. பல்வேறு தர அடிப்படைகளை வைத்துப் பார்த்தபோது இந்தியாவிலேயே சிறந்த நகரங்களின் வரிசையில் முதல் மூன்று இடங்களில் சூரத், புனே, அகமதாபாத் வருகின்றன. இந்தியாவின் மோசமான நகரங்கள் வரிசையில் தலைநகர் டெல்லி, கான்பூர் ஆகியவை வருகின்றன. இன்னும் 20ஆண்டுகளில் இந்தியாவின் கிராமப்புற மக்கள் தொகையில் கால் சதவீதம் பேர் நகரங்களுக்கு இடம் பெயரவுள்ளனர். அப்போது நகரங்களின் நிலை மேலும் மோசமடையும் என்று கருத்துரைக்கிறது இந்த சர்வே. சர்வதேச அளவில் சிறந்த நகரங்களாக கருதப்படும் நியூயார்க், லண்டனுடன் நமது இந்திய நகரங்களை ஒப்பிட்டபோது மொட்டைத் தலைக்கும், கொட்டப்பாக்குக்கும் இடையிலான வித்தியாசமாக இருக்கிறது.
இந்தியாவிலேயே கொல்கத்தாவில் மட்டும்தான் பெருநகர திட்டமிடல் கமிட்டி உள்ளது. வேறு எந்த நகரிலும் இந்த கமிட்டி இல்லை. இந்தியாவின் வேறு எந்த நகரத்துக்கும் கிடைக்காத அளவில் சூரத், அகமதாபாத் நகரங்களுக்கு 10 புள்ளிகளில் 6 புள்ளிகள் கிடைத்துள்ளன. இங்கு சிறந்த வாழ்க்கைத் தரம் மற்றும் அடிப்படை வசதிகளும் உள்ளனவாம். இரண்டு நகரங்களுமே குஜராத்தில் உள்ளன. இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான நகரமாக புனே உருவெடுத்துள்ளது. இந்த விஷயத்தில் சூரத் 2வது இடத்தில்.சிறந்த வாழ்க்கைத் தரத்தில் முதல் நான்கு இடங்களில் மேற்கு இந்திய நகரங்களே இடம் பிடித்துள்ளன. பெரியண்ணன் நகரங்களான கொல்கத்தா, டெல்லிக்குக் கூட கிடைக்கதா பெருமை சென்னை, மும்பைக்குக் கிடைத்துள்ளன. அதாவது வாழ்க்கைத் தரத்தில் சிறந்த இந்திய நகரங்கள் வரிசையில் டாப் 5 இடத்தில் இந்த இரண்டு பெருநகரங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.
வாழ்வதற்கு தகுதி இல்லாத நகரமாக கான்பூர் உருவெடுத்துள்ளது. இங்கு ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட 21 முக்கியக் காரணிகளில் எதுவுமே சரியில்லையாம். வாழ்க்கைத் தரத்தில் மோசமான நகரங்களாக டெல்லி, ஹைதராபாத், பெங்களூர் உள்ளன. ஒரு காலத்தில் பென்ஷனர் பேரடைஸ், பூங்கா நகரம் என்று போற்றப்பட்ட பெங்களூர் இன்று அழுக்கு நகரமாக உருவெடுத்துள்ளது. அடுத்து டெல்லி, கான்பூர். பாதுகாப்பில் மிகவும் மோசமான நகரங்களாக டெல்லியும், கான்பூரம் விளங்குகின்றன. அரசு அலுவலகங்களில் வேலைகள் சுலபமாக நடக்கும் நகரங்களாக புனே, அகமதாபாத், சூரத், சென்னை, மும்பை ஆகியவை!
No comments:
Post a Comment