உலகளவில் உள்ள சுற்றுலாத் தளங்கள் குறித்த தகவல்களை வெளியிடும் டிரிப் அட்வைசர் என்ற இணையதளம் வருடந்தோறும் மேற்கொள்ளும் சிறந்த நகரங்கள் குறித்த சர்வேயின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. மொத்தம் 37 நகரங்களை ஐந்து பிரிவுகளின் அடிப்படையில் 54,000 சுற்றுலாப் பயணிகளின் வாக்கெடுப்பில் இந்த நிறுவனம் தர வரிசைப்படுத்தியது.
இதில் ஜப்பானின் தலைநகரான டோக்கியோ ஒட்டு மொத்த பிரிவுகளிலும் சிறந்த சுற்றுலாத் தளமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் ஒட்டுமொத்த தர மதிப்பில் 11-வது இடத்தைப் பெற்றபோதிலும் இரவு வாழ்க்கை என்ற தலைப்பில் இரண்டாவது இடத்தையும், ஷாப்பிங் பிரிவில் மூன்றாவது இடத்தையும் பெற்றது. வசதியான பயணம் என்ற தலைப்பில் சிங்கப்பூர் முதலிடத்தையும், டாக்சி சேவை, சுத்தம், எளிதாக இடங்களை அடைவது, குடும்பத்தினருக்கான நட்புச் சூழல் போன்றவற்றில் இரண்டாவது இடத்தையும் பிடித்தது. கலாச்சார விஷயங்கள் பட்டியலில் ரோம் முதல் இடத்தையும், ஹோட்டல்கள் மற்றும் ஷாப்பிங் பட்டியலில் துபாய் முதல் இடத்தையும் பிடித்திருந்தது.
பயணிகளின் ஒட்டுமொத்த அனுபவத்தில் சுத்தமான தெருக்கள், எளிதாக இடங்களை அடைதல் போன்ற பிரிவில் இந்தியாவின் மும்பை மோசமான நகரம் என்ற கருத்தைப் பெற்றுள்ளது. இதில் கடைசி இரண்டாவது இடத்தைப் பிடித்தது டொமினிகன் குடியரசின் புண்டா கனா நகரமாகும். ஏனெனில் இயற்கைக் காட்சிகளைத் தவிர இங்கு வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை என்ற கருத்து பயணிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்துக் கணிப்பின் குறிப்பிடத்தக்க விஷயமாகக் கருதப்படுவது ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ பற்றிய பயணிகளின் மதிப்பீடு ஆகும். சிறந்த ஒட்டு மொத்த அனுபவம் என்ற தலைப்பில் கடைசி மூன்றாமிடத்தையும், உணவகங்கள், ஷாப்பிங், குடும்பத்திற்கான நட்பு சூழல் பிரிவுகளில் கடைசி இரண்டாமிடத்தையும், உள்ளூர் உதவிகள், டாக்சி சேவைகள் மற்றும் ஓட்டுனர் உதவி, ஹோட்டல் மற்றும் பணத்தின் மதிப்பு போன்ற பிரிவுகளில் கடைசி இடத்தையுமே மாஸ்கோ பிடித்திருந்தது என்பது இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment