திண்டுக்கல் : மதுரையில் இருந்து பெங்களூருக்கு அதிவேகமாகச் சென்ற கார், திண்டுக்கலில் நான்கு வழிச்சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். மதுரை கே.புதூரைச் சேர்ந்தவர் ஆண்டவர்(58); ஜவுளி வியாபாரி. இவரது மனைவி ஜெயந்தி(42), மகன் செல்வகுமார்(29) ஆகியோர் டாடா இண்டிகா (எண்: கேஏ:02, எம்.பி.1313 )காரில், பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு புறப்பட்டனர். காரை ஆண்டவரின் தம்பி மகன் ஜெயக்குமார்(28) ஓட்டி வந்தார். இவர்கள் வந்த கார், திண்டுக்கல் நான்கு வழிச்சாலை கொட்டப்பட்டி பிரிவு அருகே வரும் போது, அதிவேகம் காரணமாக அங்கிருந்த தடுப்புச் சுவரில் நேற்று மதியம் 2 மணிக்கு மோதியது. இதில் ஆண்டவர், ஜெயந்தி, ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பலியாயினர். செல்வகுமார் மட்டும் காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்கு காரணம்: காரின் அதிக வேகம் காரணமாக, திண்டுக்கல் அருகே நான்கு வழிச்சாலை தடுப்புச் சுவரில் மோதியுள்ளது. பின்னர் மூன்று முறை கவிழ்ந்து, அருகில் இருந்த பள்ளத்தில் கார் விழுந்துள்ளது. இறந்தவர்களின் உடல்கள் 50 மீட்டருக்கு ஒருவர் வீதம் விழுந்து கிடந்தனர். ரோடு அகலமாக இருந்தும் அதிவேகம் காரணமாக தடுப்புச் சுவரில் மோதியவுடன், காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. காரில் வந்தவர்கள் பேசிக் கொண்டே வந்ததால், தடுப்புச் சுவரை கவனிக்க தவறியுள்ளது என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
No comments:
Post a Comment