சபரிமலை : சபரிமலையில் 10 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவுக்காக ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று காலை கொடியேற்றப்படுகிறது. பங்குனி உத்திரம் நாளில் ஆராட்டு நடக்கும் வகையில் சபரிமலையில் 10 நாள்திருவிழா நடக்கிறது. இந்த ஆண்டு வரும் 19ம் தேதி பங்குனி உத்திரம் வருவதையொட்டி இன்று திருவிழா தொடங்குகிறது. இதற்காக சபரிமலை நடை நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. மேல்சாந்தி சசி நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். வேறு விசேஷ பூஜைகள் நடைபெறவில்லை. இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்ட பின்னர் நெய்யபிஷேகம் நடைபெறும். 7.30 மணிக்கு உஷபூஜை நடைபெறும். தொடர்ந்து கொடியேற்றத் துக்கான பூஜைகள் தொடங்கும். காலை 10.15 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு கொடியேற்றுகிறார். இரண்டாம் திருவிழா முதல் ஒன்பதாம் திருவிழா வரை தினமும் பகல் ஒரு மணிக்கு உற்சவபலி நடைபெறும். இன்று முதல் எட்டாம் நாள் விழா வரை தினமும் இரவு ஸ்ரீபூதபலி நிகழ்ச்சி நடைபெறும். 18ம் தேதி இரவு 10 மணிக்கு சுவாமி பள்ளிவேட்டைக்காக சரங்குத்திக்கு எழுந்தருளுவார். 19ம் தேதி காலை 7.30 மணிக்கு உஷபூஜை முடிந்ததும், சுவாமி பள்ளி வேட்டைக்காக பம்பைக்கு யானை மீது எழுந்தருளுவார். பகல் 12.30 மணிக்கு திருவேணி சங்கமத்தில் ஆறாட்டு நடைபெறும். பின் பிற்பகல் 3 மணிக்கு சன்னிதானத்துக்கு ஆறாட்டு பவனி புறப்படும். இரவு 10 மணிக்கு இந்த பவனி சன்னிதானம் வந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும். நடை திறக்கப்பட்டிருக்கும் எல்லா நாட்களிலும் காலை 5 மணி முதல் 11 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். 19ம் தேதி மட்டும் காலை 7 மணிக்கு நெய்யபிஷேகம் நிறைவு பெறும்.
No comments:
Post a Comment