ரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றால் பெண்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில் இலவசமாக கிரைண்டர் அல்லது மிக்சி வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் இலவச கலர் டி.வி., இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த முறை இலவச கிரைண்டர் அல்லது மிக்சி, பரம ஏழைகளுக்கு மாதம் 35 கிலோ இலவச அரிசி, அரசுக் கல்லூரியில் தொழிற்கல்வி பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் (மடிக் கணினி) என ஏராளமான இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கையை முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை வெளியிட, நிதியமைச்சர் க.அன்பழகன் பெற்றுக்கொண்டார். இந்த த் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள்: வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஏழைகளான, "அந்தியோதயா' குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதை இனி இலவசமாகவே வழங்குவோம். இதன்மூலம் தமிழகத்திலே உள்ள 18.64 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள். குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு கிலோ அயோடின் கலந்த உப்பு மானிய விலையில் வழங்கப்படும். விடுபட்ட பயனாளிகள் அனைவருக்கும் இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகளும், இலவச கலர் டி.வி.க்களும் வழங்கப்படும். இலவச லேப்டாப்: அரசுக் கல்லூரிகளிலும், அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் தொழிற்கல்வி பயிலவரும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவியருக்கு முதலாம் ஆண்டிலேயே இலவசமாக மடிக்கணினி (லேப்டாப்) வழங்கப்படும். அரசு வேலைவாய்ப்புகளில் குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை தருவோம். தமிழகத்தில் பல்கலைக்கழகங்களே இல்லாத மாவட்டங்கள் இல்லை என்ற உயர்ந்த நோக்கத்தோடு எல்லா மாவட்டங்களிலும் புதிய பல்கலைக்கழகங்களை அமைப்போம். அனைத்து மாவட்டங்களிலும் அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கும் நோக்கத்துடன், புதிய அரசு பொறியியல் கல்லூரிகளை உருவாக்குவோம். அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வெளிநாடுகளில் வேலை தேடுவதற்கு வசதியாக ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், அரபி போன்ற மொழிகளைக் கற்றுத்தர ஏற்பாடு செய்வோம். மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ்: 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் அரசு உள்ளூர் பஸ்களில் இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவோம். நடக்க முடியாத முதியோருக்கு வீட்டுக்கே சென்று மருத்துவப் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்படும். முதியோர், ஆதரவற்ற பெண்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுவரும் உதவித்தொகை மாதம் ரூ.750 ஆக உயர்த்தப்படும். இலவச வீடு கட்ட நிதி ரூ.1 லட்சம்: கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் கட்ட வழங்க இப்போது ரூ.75 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இது ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே அடையாள அட்டைகள் வழங்கப்பட்ட அத்தனை குடும்பங்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். இந்த வீடுகளைப் பெற சிலருக்குத் தகுதியில்லை என்ற நிபந்தனையும் மறுபரிசீலனை செய்யப்படும். கோவை, மதுரை நகரங்களுக்கு மெட்ரோ ரயில்: சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் இப்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை, மதுரை போன்ற பெருநகரங்களிலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கு புல்லட் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்டும். சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தை மாமல்லபுரம் வரையில் நீட்டிக்க ஒரு பாதையும், ஸ்ரீபெரும்புதூர் வழியாக இருங்காட்டுக்கோட்டை வரை நீட்டிப்பதற்கான மற்றொரு பாதையையும் ஏற்படுத்துவோம். மினி பஸ்களின் எண்ணிக்கை அதிகமாக்க ஆவன செய்யப்படும். ஆன்-லைன் வர்த்தகத்துக்குத் தடை: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்தால் சிறு வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்தத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துவோம். அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையேற்றத்துக்கும், தட்டுப்பாட்டிற்கும் முன்பேர ஊக வணிகம் (ஆன்-லைன் வர்த்தகம்) காரணமாக உள்ளது. எனவே, இதைத் தடைசெய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம். வெள்ளம், தீ போன்ற சீற்றங்களாலும், கலவரங்களாலும் பாதிப்புக்கு உள்ளாகும் வணிகர்களுக்கு, வணிகர் நல வாரியத்தின் மூலம் நிவாரணம் அளித்திட தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்படும். மருத்துவ உதவிகளும் வழங்க ஆவன செய்வோம். சென்னையில் துணை நகரம்: சென்னை நகரின் நெரிசலைக் குறைக்க சென்னைக்கு அருகில் புதிய சென்னை துணை நகரம் உருவாக்குவோம். நகரங்களில் நடுத்தர, குறைந்த வருவாய்ப் பிரிவினைச் சேர்ந்தவர்கள் பயனடையத்தக்க விதத்தில் அரசால் அறிவிக்கப்படும் கட்டடங்களில் தனியார் நிறுவனங்களைக் கொண்டு குறைந்த செலவிலான வாடகைக் குடியிருப்பு திட்டம் செயல்படுத்துவோம். மாற்றுத் திறனாளிகள் எளிய முறையில் பயன்படுத்தும் வகையில் இனி கட்டப்படும் அனைத்துப் பொதுக்கட்டடங்கள், அரசு கட்டடங்கள் உரிய முறையில் வடிவமைக்கப்படுவதை கட்டாயமாக்கி சட்டம் இயற்றுவோம். இலவச டயாலிசிஸ்: சிறுநீரக பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு இலவச ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை (டயாலிசிஸ்) அனைத்து மாவட்ட மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வழங்க வசதிகளைச் செய்வோம். ஏழைகளுக்கு இலவசமாகவும், மற்ற வருவாய்ப் பிரிவினருக்கு குறைந்த செலவிலும் இந்தச் சிகிச்சையை அளிக்க வசதிகளைச் செய்வோம். தனியார் மருத்துவமனைகளில் நியாயமான கட்டணங்களை நிர்ணயம் செய்வதற்கு மருத்துவக் கட்டண ஒழுங்குமுறை ஆணையம் அமைப்போம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
No comments:
Post a Comment