போர்ச்சுகல் பிரதமர் ஜோஸ் சாக்ரெட்டீஸ் தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்துள்ளார். இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.போர்ச்சுகல் பொருளாதாரத்தை சீர்படுத்த, நாடாளுமன்றத்தில் பிரதமர் கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்தது. 230 எம்.பி.,க்களில் 97 பேர் மட்டுமே அத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து, பிரதமர் ராஜிநாமா செய்துள்ளார்.இந்நிலையில், நாளை அனைத்து அரசியல் கட்சிகளுடன் அதிபர் அனிபால் கவாகோ சில்வா ஆலோசனை நடத்துகிறார். அடுத்த ஆட்சி அமையும் வரை தற்போதைய அரசு பதவியில் இருக்கும் என்று அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.பிரதமரின் ராஜிநாமா காரணமாக, போர்ச்சுகலில் இன்னும் 2 மாதங்களில் பொதுத்தேர்தல் நடத்த அதிபர் திட்டமிட்டுள்ளார்.நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்தால், ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச நிதியமைப்பின் உதவியை நாட வேண்டிய சூழல் ஏற்படலாம் என்று ஓரிரு நாட்களுக்கு முன்னர் நிதியமைச்சர் பெர்னாண்டோ சான்டோஸ் கூறியிருந்தார். இந்நிலையில், பிரதமர் திடீரென ராஜிநாமா செய்துள்ளதால் அந்நாட்டில் அரசியல் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதுடன் பொருளாதாரமும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment