சாலையோரம் கடை விரித்த ஒருவர், "ரெண்டு வாங்கினா ஒண்ணு இலவசம்' என்று கூவி நுகர்வோரைக் கவர முயன்றால், எதிரே அதே பொருள்களைக் கடை விரித்திருக்கும் மற்றொருவர் "ஒண்ணு வாங்கினா ஒண்ணு இலவசம்' என்று கூவினால் எப்படி இருக்கும்? அதுபோலத்தான் இருக்கிறது அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை! அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையைப் பற்றிச் சொல்வதென்றால், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் முதல்வர் கருணாநிதி சொல்லியிருப்பதைவிட அதிகமாக நான் இலவசங்களை அள்ளித் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார் என்று ஒரே வரியில் முடித்துவிடலாம். தி.மு.க. மிக்சி அல்லது கிரைண்டர் வழங்குவதாகச் சொன்னதா? இந்தா பிடி, கூடுதலாக ஒரு மின்விசிறி. கர்ப்பிணிப் பெண்களுக்கு தி.மு.க. ரூ.10,000 தருவதாகச் சொல்லியிருக்கிறதா? இந்தா பிடி, ரூ.12,000. அத்துடன் கர்ப்பிணிப் பெண்களுக்கு சம்பளத்துடன் 6 மாத விடுமுறையும் தரப்படும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினியா? நான் பள்ளி மாணவர்களுக்கே மடிக்கணினி கொடுப்பேன். ஒரு ரூபாய் அரிசி 20 கிலோ திட்டமா, நான் இலவசமாக 20 கிலோ அரிசி தருகிறேன்....இப்படியாகப் போட்டி போட்டுக்கொண்டு இலவசங்களை அறிவித்திருக்கிறார். 2006 தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இலவச டி.வி., சமையல் எரிவாயு பற்றிக் குறிப்பிட்டபோது, இத்தகைய இலவசங்களை முழுமையாக எதிர்த்தவர் அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா. ஆனால், அந்தத் தேர்தலில் அவர் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. அதனால், இந்த இலவச டி.வி. வாக்குறுதிதான் தனக்குத் தோல்வியை அளித்தது என்ற எண்ணம் ஜெயலலிதாவின் மனதில் மிகவும் ஆழமாகப் பதிந்துவிட்டிருக்கக்கூடும். இலவசப் போதையை இப்போதைய தேர்தலில் கருணாநிதி மேலும் கூட்டுவார் என்றால், அதற்கு நானும் விதிவிலக்கல்ல என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. இந்த இலவசங்கள் இல்லாமலேயே மக்களைக் கவரும் அம்சங்கள் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இருக்கின்றன. உதாரணமாக, அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் கேபிள் டி.வி. அரசுடைமையாக்கப்படும் என்கிறார். ஒரு தனியார் கேபிள் நிறுவனத்தின் மொத்தக் குத்தகையை ஒழிப்பது என்கிற வகையில் பார்த்தால் வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்பு இது. குடும்பப் பிரச்னை ஏற்பட்டபோது அரசுப்பணம் பல கோடியை வாரி இறைத்து அரசு கேபிள் டி.வி.யை உருவாக்கி,சமரசம் ஏற்பட்டவுடன் அதைக் குப்பைத் தொட்டியில் வீசியெறிந்த தி.மு.க. அரசின் பொறுப்பற்றதனத்துக்குத் தரப்படும் சரியான பதில் இது. கேபிள் டி.வி.யை இலவசம் என்று அறிவித்துவிடலாமே! ஒரு மாதத்துக்கு ரூ.150 என்றால் 5 ஆண்டுகளுக்கு ஒரு குடும்பத்துக்கு இலவச கேபிளால் மிச்சமாகும் பணம் ரூ. 9,000. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இலவச மிக்சி அல்லது கிரைண்டர் இவற்றின் விலை அதிகபட்சம் ரூ. 2,000 மட்டுமே. அதிலும் இவற்றை மொத்தமாகக் கொள்முதல் செய்யும்போது இதன் விலையும் (தரமும்கூட) குறையும். ஆனால், சட்டப்படியாக இலவச கேபிள் சாத்தியமானால், ஒரு குடும்பத்துக்கு மிச்சமாகும் தொகை இந்த இலவச மிக்சியைவிட நாலரை மடங்கு அதிகம். இதைச் சொல்லி வாக்குக் கேட்க ஏன் ஜெயலலிதாவால் முடியவில்லை. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சம் என்று கூறுவதாக இருந்தால் "சோலார் எனர்ஜி' என்று அழைக்கப்படும் சூரியசக்தி மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்தும் திட்டம்தான். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் சிறப்புத் திட்டமாக மழைநீர் சேகரிப்புத் திட்டம் பேசப்படுவதுபோல, சூரியசக்தி மூலம் மின்சாரம் எல்லா வீடுகளுக்கும் கிடைக்க அரசு இலவசமாகவோ, மானியம் மூலமாகவோ உதவுமேயானால், ஓர் ஆக்கப்பூர்வ முன்னோடித் திட்டமாக அமையும். தினசரி மூன்று, நான்கு மணிநேரங்கள் மின்வெட்டால் அவதிப்படும் தமிழக மக்களின் வயிற்றில் பாலை வார்க்கும். ஏனைய மாநிலங்கள் இதைப்பின்பற்றி ஒரு முன்னோடித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் பெருமை ஜெயலலிதாவையே சாரும்! கிராமங்களுக்குச் சூரிய விளக்குகள் கொண்டுசேர்க்கும் திட்டம் போன்ற நல்ல சில வாக்குறுதிகள் இருந்தாலும், அவை அனைத்தும் ஜெயலலிதாவின் போட்டி இலவச அறிவிப்பால் தனித்துவத்தை இழந்துவிட்டன. அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தி.மு.க.வின் இலவசங்களால் இந்தத் தேர்தலிலும் வாய்ப்பை இழந்துவிடுவோமோ என்கிற அச்சத்தால் ஜெயலலிதா நிறையவே பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை வெளிக்காட்டுகிறது. ஒரு வெற்றிப் படத்தில் இடம்பெற்ற அதே ஆபாசம், அதே வன்முறைக்காட்சி இருந்தால்தான் படம் ஓடும், அதுதான் இப்போதைய "டிரென்ட்' என்று நியாயம் பேசும் திரையுலகத்தின் ஏற்க இயலாத அதே நியாயம்தான் தேர்தலிலும் இப்போது அரங்கேறியிருக்கிறது. இந்தத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. இருவரில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதைவிட, தமிழக அரசியலை ஒரு அங்காடித் தெரு தரத்துக்கு இறக்கிய பெருமையில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் அவர் காட்டிய வழியில் நடந்த அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கும் சமபங்கு உண்டு. பாவம் மக்கள். எந்த வாக்கு வியாபாரியை நம்புவது, எந்த இலவசம் தரமானது என்று குழம்பிக் கிடக்கிறார்கள். விலை சொல்ல முடியாத தங்கள் வாக்கு, வியாபாரிகளால் விலை பேசப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அரசு அறிவிக்கும் எந்தத் திட்டமானாலும், எந்த வருவாயை வைத்து, அரசு எப்படி இந்த இலவசத்தை அளிக்கப்போகிறது என்பதையும் தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டும் என்பதைத் தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கினால் மட்டுமே, இந்த மூன்றாம்தர அரசியலுக்கு முடிவு கட்ட முடியும். இப்படியே போனால், அடுத்த தேர்தலில் தினமும் ஒரு குவார்ட்டர் மதுபானம் இலவசம் என்று அறிவித்தாலும் அறிவிப்பார்கள் போலிருக்கிறது. என்ன கூத்து இது? ஒருகாலத்தில் உலகுக்கே வழிகாட்டியாகவும், முன்னுதாரணமாகவும் நல்ல பல காரணங்களுக்காக இருந்த தமிழகம் இப்போது வாக்காளர்களை அதிகாரப்பூர்வமாக விலைபேசுவதில் முன்னணியில் நிற்கிறதே இது தமிழனுக்கும், தமிழகத்துக்கும் ஏற்பட்டிருக்கும் தலைக்குனிவு!
No comments:
Post a Comment