|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 March, 2011

ஓர் அரசியல் முதலீடு!

கூட்டணிக் கட்சிகளுடன் பேரம் இருட்டில் முடிந்தது; இனி மக்களுடனான பேரம் வெளிச்சத்தில் நடைபெறும், தேர்தல் அறிக்கைகள் என்ற பெயரில்! மக்களுக்கு உதவி செய்வது போல் தோன்றும் ஒன்றிரண்டு விஷயங்கள், அறிக்கைகளில் தட்டுப்படும்.

தேர்தல் அறிக்கைகள் வெளி வந்தவுடன், அறிவு ஜீவிகள் என்று சொல்லிக்கொள்பவர்களிடமிருந்து விமர்சனங்கள் கிளம்பும். சக கட்சிகள், பிற கட்சிகளின் அறிக்கைகளை பட்டும்படாமல் விமர்சனம் செய்யும்; எதையும் கண்டு கொள்ளாமல் இருக்கக் கூடாது என்பதற்காக. மற்றபடி எல்லாக் கட்சிகளுமே குச்சி மிட்டாய்கள் கொடுக்க விரும்புகின்றன; வண்ணங்கள் தான் வேறு. "இலவச திட்டங்களால் மக்களின் பணம் பாழாகிறது' என்பது, பொது விமர்சனம். "இந்தப் பணத்தை லாபகரமான திட்டங்களில் முதலீடு செய்யலாமே' என்ற யோசனையும் வெளிப்படும். கேட்டுக் கேட்டு புளித்துப்போன இந்த வாசகத்தை அரசியல்வாதிகள் சட்டை செய்வதில்லை. அவர்களுக்குத் தெரியும், எங்கே, எப்படி முதலீடு செய்வது என்று. எந்தத் தட்டு மக்கள் பெரும்பான்மையோ, அவர்களைத் திருப்திபடுத்தும் திட்டங்களே தேர்தல் அறிக்கைகளில் இடம்பெறுகின்றன; அது ஒரு அரசியல் முதலீடு.

இதில் ஒரு கட்சி மற்றொரு கட்சியைக் குறை சொல்ல முடியாது. "எல்லாருக்கும் இலவச உணவு' என்று ஒரு கட்சி சொன்னால், மற்றொரு கட்சி, "தினமும் அதை வாழை இலையில் தருவோம்; இதனால் வாழை விவசாயிகளும் பயன் பெறுவர்' என்று சொல்லும். ஒரு கட்சி, எல்லாருக்கும் இலவச உடை தருவதாகச் சொன்னால், மற்றொன்று அவற்றைச் சலவை செய்தும் தருவோம் என்று சொல்லும். சொல்வதை எல்லாம் செய்ய வேண்டுமென்பதில்லை; சில மாதங்களுக்குச் செய்தால் போதும். அப்புறம், புதிய இலவசங்கள் பற்றிய வாக்குறுதிகள் மட்டும் போதும். "தினமும் தெருவில் நான்கு மணி நேரம் நின்றால் போதும்; உணவுக்கு வேலை திட்டத்தின் கீழ் 100 ரூபாய் கிடைக்கும்' என, அறிவிக்கப்பட்டதால் கிராமப்புறங்களில் வயல் வேலை களுக்கு ஆட்கள் இல்லை. அதனால், அரசியல்வாதிகளுக்கு என்ன கவலை? அவர்களது வயலில் தினமும் அமோக அறுவடை; அதற்காகவே இலவச திட்டங்கள். இவை எல்லா மாநிலங்களிலும் உண்டு; அதில் தேசிய ஒருமைப்பாடு இருக்கிறது. மக்களும் ஒற்றுமையாக இருந்தபடி, கொடுப்பதை வாங்கிக் கொள்ளாமல், ஏன் குறை சொல்ல வேண்டும் என்று அரசியல்வாதிகள் நினைப்பது, நியாயம் தானே.

என்னுடன் படித்தவர், தொழிற்கூடம் நடத்தும் ஒரு ஜவுளி நகருக்குச் சென்றிருந்தேன். அவரது அலுவல கத்தில், தமிழக அரசின் இலவச கலர் "டிவி' இருந்தது. வசதியான நபரின் அலுவலகத்தில் அதைப் பார்த்ததும் ஆச்சரியப் பட்டேன். அவர் அலட்டி கொள்ளாமல் சொன்னார்: "ஏம்ப்பா! ரேஷன் கார்டுக்கு ஒரு "டிவி' தர்றான். எனக்கும் ரேஷன் கார்டு இருக்கு...' எனக்கு அந்த பதிலைக் கேட்டதும் அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. ஓய்வு பெற்ற, மனசாட்சிக்குக் கட்டுப்படும், ஒரு பேராசிரியரை தென்மாவட்ட கோவில் நகரில் பார்த்தேன். வாக்காளர்களுக்கு, "கவர்' கொடுப்பது பற்றி பேச்சு வந்தது; தானும் வாங்கிக்கொண்டதாகச் சொன்னார். "ஏன் வாங்கினீர்கள்?' என்று கேட்டேன். "விவரம் புரியாமல் பேசாதீர்கள்... கவர் கொடுப்பவர்கள், வாங்கியவர்கள் பற்றி கவலைப் படுவதில்லை. வாங்காதவர்களின் பெயர்களைக் குறித்து வைத்து, கட்சி மேலிடத்தில் சொல்வர். ஏதாவது சொல்லித் திருப்பி அனுப்பினாலும் வம்பு. அரசியல்வாதிகளின் எடுபிடிகள் குறிவைத்தால் இந்த ஊரில் என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா?' என்று கேட்டார். "பணம் வாங்கியது தவறு. என்ன செய்தீர்கள்' என்று கேட்டேன். தன் பங்கைக் கோவில் உண்டியலில் போட்டதாகவும், மனைவி ஒரு சேலை வாங்கியதாகவும், அது சாயம் போய்விட்டதாகவும் சொன்னார். "பணம் கொடுப்பது தவறு என்றால் அதை வாங்காமல் இருப்பது ஆபத்து' என்ற நடைமுறை ஞானத்தை அந்தப் பேராசிரியர் போதித்தார்.

ஆக, தேர்தல்கள் நடைபெறும் புதிய முறைகளில் விவரமறிந்தவர்கள், அறியாதவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், வசதியானவர்கள், வசதியில்லாதவர்கள் என்ற பேதங்கள் அழிந்து போய்விடுவதால் இனி இலவசத் திட்டங்களுக்கும் தேர்தல் நேர, பண, பொருள் வினியோகத்திற்கும் எதிர்ப்புகளே இல்லாமல் போய்விடும். இப்படி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அரசியல்வாதிகள் அயலார் பணத்தை தர்மம் செய்வதனால், இடையில் மரித்துப் போயிருந்து சர்வ சாதக சமதர்ம ஜனநாயக சோஷலிசம் மறுபிறப்பு எடுத்துவிட்டது. எதையும் எதிர்ப்பது ஆபத்து, எதிர்பார்ப்பது நல்லது என்ற நிலை உருவாவாது ஜனநாயகத்திற்குக் கேடு; அது எப்போது எல்லாருக்கும் புரியப் போகிறது?

ஆர்.நடராஜன், அமெரிக்கத் தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்


 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...