இந்திய அணு உலைகள் பத்திரம்?
அவசர ஆய்வுக்கு உத்தரவிட்ட
பிரதமர்!
உலகைக் குலுக்கிய பெரும் அணு
விபத்தான செர்னோபிலுக்குக்
காரணம், பூகம்பமோ சுனாமியோ
அல்ல. ஊழியர்களின்
கவனக்குறைவுதான். அந்த அணு
உலையின் ஆபரேட்டர் செய்த
தவறுதான் பல்லாயிரம் மக்களின்
உயிரைக் குடித்தது. ஒரு
மாகாணத்தையே மலடாக்கியது,
ஜெர்மனி, ஸ்வீடன் போன்ற தூர
தேசங்களிலும் பாதிப்பை
உண்டாக்கியது.
இன்று உலகின் எந்தப் பகுதியில் இயற்கை பேரிடர் வரும் என்று கணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இன்னொரு பக்கம் இந்திய பணியாளர்களின் 'கடமை உணர்வு' உலகம் அறிந்தது. ஜப்பானின் அணு உலைகளுக்கு நேர்ந்துள்ள கதியைப் பார்த்து அணு உலைகளின் காதலர்களாக மாறிய நாடுகளெல்லாம் கதிகலங்கி நிற்கின்றன. அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் பல அணு உலைகளை சத்தமின்றி மூடும் 'மூடு'க்கு வந்துள்ளன.
அணுசக்தி நிலையங்களை ஏராளமாகத் திறந்துள்ள இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. இயற்கையாலோ, மனிதத் தவறுகளாலோ இந்திய அணு உலைகள் வெடிக்காத வகையில் பத்திரமாக உள்ளனவா என்று உறுதிப்படுத்துமாறு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார். இதனை மக்களவையில் நேற்று அவரே தெரிவித்தார்.
நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவுகளைத் தாங்கும் வகையில் நமது அணுஉலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்யுமாறு அணுசக்தித்துறை, அதன் கீழ் இயங்கும் இந்திய அணுமின் நிறுவனம் (என்பிசிஐஎல்) ஆகியவை அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன என்று அவர் கூறினார். மனிதத் தவறுகளால் வெடிக்காத அளவுக்கு முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment