சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் பணம் 11 ஆயிரத்து 500 கோடி
ரூபாய் உள்ளது' என, அந்நாட்டு மத்திய வங்கி தெரிவித்துள்ளது.சுவிட்சர்லாந்து உட்பட அன்னிய நாட்டு வங்கிகளில்,
இந்தியர்கள் ஏராளமான அளவில் பணத்தை டிபாசிட் செய்துள்ளதாகவும், அந்த
கறுப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
எதிர்க்கட்சிகளும், சமூக அமைப்புகளும் மன்மோகன் சிங் அரசை வலியுறுத்தி
வருகின்றன. குறிப்பாக, சுவிஸ் வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ள
இந்தியர்களின் பணம், 50 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என, இந்திய
அரசியல்வாதிகளும், அரசு சார்பற்ற அமைப்புகளும் குறை கூறி வருகின்றன.
இந்நிலையில்,
சுவிஸ் நாட்டின் மத்திய வங்கி கூறியுள்ளதாவது:கடந்த 2010ம் ஆண்டில்
எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, சுவிஸ் வங்கிகளில் டிபாசிட்
செய்யப்பட்டுள்ள இந்தியர்களின் பணம் 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மட்டுமே.
2009ம் ஆண்டில் இந்தியர்களின் கணக்கில் இருந்த பணம் 12 ஆயிரத்து 480 கோடி
ரூபாய். 2008ம் ஆண்டில் டிபாசிட் செய்யப்பட்டிருந்த பணம் 11 ஆயிரத்து 40
கோடி ரூபாய்.உலக நாடுகளை பொருளாதார மந்தநிலை ஆட்கொண்ட பின், 2008ல்
அமெரிக்காவின் லேமேன் வங்கி திவாலான பின், சுவிஸ் நாட்டின் பெரிய வங்கியான,
"யுபிஎஸ்' உட்பட பல தனியார் வங்கிகள் பெரிய அளவில் நஷ்டத்தைச் சந்தித்தன.
இதைத்
தொடர்ந்து, சுவிஸ் வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டிருந்த பணத்தில்
கணிசமான அளவு வாபஸ் பெறப்பட்டது.அமெரிக்காவைச் சேர்ந்த பலர், வரி ஏய்ப்பு
செய்து சுவிஸ் வங்கிகளில் அந்தப் பணத்தை டிபாசிட் செய்ததாக புகார்
எழுந்ததால், சுவிஸ் வங்கிகளுக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டன. மேலும்,
பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணத்தை டிபாசிட்
செய்துள்ளதாக புகார்கள் கூறப்பட்டதால், சர்வதேச நாடுகளில் நெருக்கடியும்
உருவானது.இந்த நெருக்கடி காரணமாக, வங்கி விதிமுறைகளில் சில
திருத்தங்களையும் சுவிஸ் அரசு கொண்டு வந்தது. குறிப்பாக, ஜி-20 நாடுகளைச்
சேர்ந்த தலைவர்களின் நிர்பந்தம் காரணமாக, வங்கி ரகசிய சட்டங்களில்
தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. இவ்வாறு மத்திய வங்கி கூறியுள்ளது.
அதே
நேரத்தில், 2008ல் உலக நாடுகள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்தபோது,
சுவிஸ் வங்கிகளில் டிபாசிட் செய்திருந்த பணத்தை, இந்திய கம்பெனிகளும்,
இந்தியர்கள் பலரும் சிங்கப்பூர் வங்கிகளுக்கு மாற்றி விட்டதாக உறுதி
செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.இருந்தாலும், "தற்போது சுவிஸ்
வங்கிகளின் நிலைமை மாறிவிட்டது. அவற்றின் நிதி நிலைமை நன்றாக உள்ளது.
தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளை விட, சுவிஸ் வங்கிகளின் நிதி நிலைமை
சிறப்பாக உள்ளது. சுவிஸ் வங்கிகளுக்கு மற்ற நாடுகளில் இருந்து பணம்
வருவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது' என, ஜெனிவாவில் வசிக்கும் இந்திய
வங்கியாளர் ஒருவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment