திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு மருத்துவமனை வாசலில்,
கடந்த ஐந்து நாட்களாக முதியவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு சிகிச்சை அளிக்க மறந்து போனது மனிதநேயம். திருவாடானை- தொண்டி
ரோட்டில் 70 வயதுடைய முதியவர் ஒருவர் நடக்க முடியாத நிலையில்,
நிழற்குடையில் படுத்திருந்தார். சிலர் அவரை திருவாடானை அரசு
மருத்துவமனையில் சேர்த்தனர். நாட்கள் கடந்த நிலையில், அவரை பார்க்க யாருமே
வரவில்லை.
படுக்கையில் காலைக்கடன்களை கழிப்பதால் ஊழியர்கள்,
டாக்டர்களிடம் புகார் தெரிவித்தனர். உடனடியாக ராமநாதபுரம் மருத்துவ உயர்
அதிகாரிகளுக்கும், திருவாடானை தாசில்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவரை அப்புறப்படுத்தும்படி உயர் அதிகாரிகளிடமிருந்து உத்தரவு வந்துள்ளது.
இதனால், அந்த முதியவரை ஊழியர்கள், மருத்துவமனை வாசலில் கொண்டு வந்து
போட்டனர். கடந்த 10 நாட்களாக அவர் உயிருக்கு போராடி வருகிறார்.மருத்துவமனை
டாக்டர் ராஜபிரபு கூறியதாவது: மூன்று நாட்கள் முதியவருக்கு சிகிச்சை
அளித்தேன். தெம்பாக இருந்த அவர், ஊர்ந்து எங்கோ சென்று விட்டார். தேடியும்
காணவில்லை. நீங்கள் சொல்லி தான், அவர் வாசலில் கிடப்பது தெரியும். அவருக்கு
சிகிச்சை அளிப்போம்,'' என்றார்.
அவ்வழியாக செல்பவர்கள் தண்ணீர்
பாட்டில் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளை கொடுத்து விட்டு செல்கின்றனர்.
ஆஸ்பத்திரிக்கு எதிரில் தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேசன் உள்ளது.
அதிகாரிகள் அந்த வழியாக அடிக்கடி சென்று, வந்த போதும் யாருமே முதியவரை
கண்டு கொள்ளவில்லை. மரத்துப்போன இதயங்களில், மருந்துக்கு கூட மனிதநேயம்
இல்லாமல் போனது மக்களை வருத்தமடையச் செய்துள்ளது. முதியவருக்கு உயிர்பிச்சை
அளிக்க மருத்துவத்துறை முன்வர வேண்டும்.
No comments:
Post a Comment