|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 August, 2011

வாகனங்களில் கிறுக்கல் நம்பர் பிளேட் வரும் 31ந் தேதிக்குள் மாற்ற காலக்கெடு!

தமிழகத்தில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களில் எழுதப்பட்டிருக்கும் நம்பர் பிளேட்டுகளை மாற்றுவதற்கு வரும் 31ந் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஓடும் பெரும்பாலான வாகனங்களில் அதன் உரிமையாளர்கள் தங்களது இஷ்டத்திற்கு பதிவு எண்ணை எழுதியுள்ளனர். சிலர் இதற்கு ஒரு படி மேலே போய் குலதெய்வம், தங்களது அரசியல் தெய்வங்களின் படங்களை ஒட்டி அழகு பார்க்கின்றனர்.

வாகன நம்பர் பிளேட்டுகளில் குறிப்பிட்ட அளவுகளில் பதிவு எண்கள் எழுதப்பட வேண்டும்; பதிவு எண்களை தவிர பிற வாசகங்கள் இடம்பெறக்கூடாது. ஒவ்வொரு வாகன மாடலுக்கு தக்கவாறு குறிப்பிட்ட தடிமன் மற்றும் இடைவெளியில் எழுத்துக்கள் மற்றும் எண்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும் என 1989ம் ஆண்டு மோட்டார்வாகன சட்டம் 50 மற்றும் 51 வது பிரிவுகளில் விதிமுறைகள் உள்ளன.

இருப்பினும், பெரும்பாலானோர் இந்த விதிமுறைகளை மதிப்பதில்லை. மேலும், இதுபோன்று கிறுக்கல்களுடன் எழுதப்பட்ட நம்பர் பிளேட்டுகள் கொண்ட வாகனங்கள் பெரும்பாலும் குற்றச்செயல்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் போக்குவரத்து துறைக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து, வாகன நம்பர் பிளேட்டுகள் விதிமுறைகளின்படி உரிய அளவில் எழுத போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், வரும் 31ந் தேதிக்குள் கிறுக்கல் நம்பர் பிளேட்டுகளை மாற்றிவிட வேண்டும் என தமிழக போக்குவரத்து கமிஷனர் காலக்கெடு விதித்துள்ளார்.

மேலும், காலக்கெடுவை மீறி விதிமுறைகளை மீறி எழுதப்பட்டிருக்கும் நம்பர் பிளேட்டுடன் வரும் வாகனங்களின் ஆர்சி புக் 1988ம் ஆண்டு மோட்டார்வாகன சட்டம் 53வது பிரிவு விதியின் கீழ் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்களுக்கான நம்பர் பிளேட்டுகளில் எழுதப்படும் எழுத்துக்கள் மற்றும் எண்கள் 65 மிமீ உயரமும், 10மிமீ தடிமனும், 10 மிமீ இடைவெளியுடனும், இருசக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகன நம்பர் பிளேட்டுகள் 30 மிமீ உயரமும், 5மிமீ தடிமனும், 5 மிமீ இடைவெளியுடன் எழுதப்பட்டிருக்கும் என தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...