|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 August, 2011

லண்டன் கலவரம் பிர்மிங்ஹாமில் 3 ஆசியர்கள் கொலை!

லண்டன் கலவரம் இங்கிலாந்தின் பிற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. பிர்மிங்ஹாமில் 3 ஆசியர்கள் கலவரக்காரர்களால் கொல்லப்பட்டனர்.
கடந்த சனிக்கிழமை லண்டனின் வடக்கில் உள்ள டாட்டன்ஹாம் மாவட்டத்தில் கலவரம் மூண்டது. அப்போது அங்கு நடந்து வந்த அமைதியான ஊர்வலத்தின்போது போலீசார் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மார்க் டுக்கான் என்ற 29 வயது இளைஞர் உயிரிழந்தார். இவர் நான்கு குழந்தைகளுக்குத் தந்தை ஆவார். இதையடுத்து கலவரம் வெடித்து விட்டது.

லண்டன் கலவர பூமியாக காட்சியளிக்கிறது. தீவைப்பு, கல்வீச்சு, துப்பாக்கிச் சூடு, கடைகள், வர்த்தக நிறுவனங்கள் சூறையாடல், ஏடிஎம் இயந்திரங்களை சூறையாடுதல் என வன்முறைக் காடாக மாறியுள்ளது லண்டன். இங்கிலாந்தின் பிற பகுதிகளுக்கும் கலவரம் பரவி வருகிறது.

இங்கிலாந்து வாழ் ஆசியர்கள் சகேதரர்களான ஷாசாத், ஹாரி ஹுசைன். அவர்களது நண்பர் முசாவர் அலி. அவர்கள் பிர்மிங்ஹாமில் கார் கழுவும் கடை வைத்துள்ளனர். லண்டன் கலவரம் அங்கும் பரவியதால் அவர்கள் தங்கள் கடையை கலகக்காரர்கள் தாக்காமல் பாதுகாத்து வந்தனர்.

நேற்றிரவு அந்த 3 பேரும் மசூதியில் தொழுதுவிட்டு, கடையைப் பாதுகாக்கச் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீர் என்று 2 கார்கள் அசுர வேகத்தில் வந்து அந்த 3 பேர் மீதும் மோதின. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் அவர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

அந்த மூவரும் ரோட்டோரமாகத் தான் சென்றனர். வேண்டும் என்றே அவர்கள் மீது காரை ஏற்றிக் கொன்றுள்ளனர். ஆம், இதை கொலை என்று தான் சொல்ல வேண்டும் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இது தொடர்பாக போலீசார் ஒரு 32 வயது நபரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இங்கிலாந்தில் கலவரக்காரர்கள் பிளாக்பெர்ரி போனின் மூலம் செய்தி அனுப்பி நாட்டின் பிற பகுதிகளிலும் கலவரத்தை தூண்டச் சொல்கின்றனர். இதனால் கலவரத்தை தூண்டப் பயன்படுத்தும் கருவாகியாக மாறியுள்ளது பிளாக்பெர்ரி. கலவரக்காரர்கள் பிளாக்பெர்ரி மொபலை பயன்படுத்தி தகவல் அனுப்பி பிற பகுதிகளிலும் கலவரத்தை தூண்டிவிடுகின்றனர்.

நாங்கள் இங்கே கொள்ளையடித்துவிட்டோம், தற்போது கிழக்கு லண்டனுக்கு சென்று கொண்டிருக்கிறோம் என்று ஒரு கலவரக்காரர் பிளாக்பெர்ரியில் செய்தி அனுப்பியுள்ளார். விலை உயர்வான பொருட்கள், டிசைனர் உடைகள், மதுபானங்கள், சைக்கிள்கள் விற்பனை செய்யும் கடைகளின் முகவரிகளை குறுந்தகவலாக அனுப்பி அவற்றை சூரையாடச் சொல்லி வருகின்றனர்.

ஆங்காங்கே கடைகள் பற்றி எரிந்துகொண்டிருக்கையில் சிலர் முகமூடி அணிந்துகொண்டு செல்போன்களில் குறுந்தகவல் அனுப்புவதாகக் கூறப்படுகின்றது. உலகில் சுமார் 45 மில்லியன் மக்கள் பிளாக்பெர்ரி மூலம் தகவல்கள் மற்றும் படங்களை அனுப்புகின்றனர்.

கலவரத்தை பரப்ப பிளாக்பெர்ரி பேருதவியாக இருப்பதால் குறுந்தகவல் அனுப்பும் வசதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு பிளாக்பெர்ரி நிறுவனத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அவ்வாறு செய்தால் 45 மில்லியன் பேர் பாதிக்கபடுவார்கள் என்று கூறி அந்த கோரிக்கையை பிளாக்பெர்ரி நிராகரித்துவிட்டது. ஆனால் ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு உதவத் தயாராக இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குருத்வாராவை பாதுகாக்கும் ஆயுதம் ஏந்திய சீக்கியர்கள்:லண்டனில் கலவரம் மூண்டதையடுத்து ஆங்காங்கே தாக்குதல், தீவைப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றது. இந்நிலையில் அங்குள்ள சீக்கியர்களின் வழிபாட்டுத் தலமான குருத்வாராக்களை கையில் ஆயுதம் ஏந்திய சீக்கியர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

சவுதாலில் குரு சிங் சபா குருத்வாரா உள்ளது. கையில் ஹாக்கி ஸ்டிக் மற்றும் வாள் ஏந்திய சுமார் 700 சீக்கியர்கள் இந்த குருத்வாராவை பாதுகாத்து வருகின்றனர். சவுதாலில் இந்தியர்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர். கலவரக்காரர்களிடம் இருந்து தங்கள் வீடு, கடை ஆகியவற்றை பாதுக்காக்கத் தான் சீக்கியர்கள் ஆயுதம் எடுத்துள்ளனர். அவர்கள் போலீஸ் உதவியுடன் தான் காவல் காத்து வருகின்றனர்.

லண்டன் கலவர பூமியாக மாறியதை அடுத்து இங்கிலாந்து பிரதமர் தனது விடுமுறையை ரத்து செய்துவிட்டு நாடு திரும்பியுள்ளார். 4 நாட்கள் ஆகியும் கலவரம் அடங்கும்பாடில்லை. இனியும் கலவரம் தொடர்ந்தால் பிளாஸ்டிக் புல்லட்டுகளைப் பயன்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

நேற்றிரவு கான்னிங் சர்கஸ் காவல் நிலையத்தை ஒரு கும்பல் குண்டு வைத்து தகர்த்தது. லெஸ்டரில் சுமார் 100 இளைஞர்கள் கடைகளைக் கொள்ளையடுத்து அந்தப் பொருட்களை போலீசார் மீது வீசினர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...