|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 August, 2011

லஞ்சம் வாங்காத நாள் கடைப்பிடிக்க கோவா அமைச்சர்களுக்கு மக்கள் கோரிக்கை!

அன்னா ஹஸாரேவின் போராட்டத்தை மதித்து, லஞ்சம் வாங்காத நாளைக் கடைப்பிடிக்குமாறு கோவா அமைச்சர்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் குழு கோரிக்கை விடுத்தது. ஊழல் புகாரில் சிக்காத கோவா அமைச்சரே இல்லை என்ற நிலையில் அந்த குட்டி மாநிலம் தவித்து வருகிறது. இதனால் வெறுத்துப் போயிருந்த கோவா மக்களுக்கு அன்னா ஹஸாரேவின் போராட்டம் பெரும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.

இதையடுத்து கோவா கிராமக் குழுவினர் என்ற பல்வேறு சிவில் சொசைட்டி அமைப்புகள் இணைந்த ஒரு அமைப்பு கோவா அமைச்சர்களுக்கு வித்தியாசமான கோரிக்கையை வைத்தது. இதுகுறித்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜான் பெரைரா கூறுகையில், வியாழக்கிழமையை, லஞ்சம் வாங்காத நாளாக கோவா அமைச்சர்கள் அனுசரிக்க வேண்டும். ஹஸாரேவின் போராட்டத்தைப் பார்த்தாவது அவர்கள் திருந்த வேண்டும்.

உங்களால் லஞ்சம் வாங்காமல் வாழவே முடியாது என்று நீங்கள் நினைத்தால் குறைந்தது ஒரு நாளாவது லஞ்சம் வாங்காமல் இருக்க முயலுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். ஹஸாரேவை ஆதரியுங்கள் என்றும் அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.

கடந்த சில ஆண்டுகளாகவே கோவாவி்ல், ஊழல், லஞ்சம்,நிதி முறைகேடுகள் தலைவிரித்தாடுகின்றன. போதைப் பொருள் கடத்தல், போலி கரன்சி புழக்கம், வரி ஏய்ப்புகள், சட்டவிரோத சுரங்கம் என மோசடிகளும், முறைகேடுகளும் அதிகரித்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. கோவா சிவில் சொசைட்டியினரின் கோரிக்கையை ஏற்று கோவா அமைச்சர்கள் இன்று லஞ்சம் வாங்காமல் இருந்தார்களா என்பது தெரியவில்லை.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...