மத்திய கணக்கு தணிக்கை துறை ஒவ்வொரு மாநில அரசின் திட்ட செலவுகளை
தணிக்கை செய்து அறிக்கையாக சமர்ப்பிக்கிறது. தமிழகத்தில் கடந்த தி.மு.க.
ஆட்சியின் போது செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கான வரவு -செலவு கணக்குகளை
மத்திய கணக்கு தணிக்கை துறை ஆய்வு செய்தது. அதன் அறிக்கை தமிழக
சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில்
புதிய தலைமை செயலகத்துக்கான கூம்பு அமைப்பது, இலவச கலர் டி.வி., மின்சார
விநியோகம் உள்பட பல திட்டங்களில் பல கோடி வீணடிக்கப்பட்டதாக பரபரப்பு
குற்றச்சாட்டுகளை கூறியுள்ளது. தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய
விவரங்கள் வருமாறு:-
அரசு செய்த முதலீட்டில் இருந்து
கடந்த 3 ஆண்டுகளில் சராசரியாக 0.43 சதவிகிதம் வருமானமே கிடைத்துள்ளது.
ஆனால் அதே காலக் கட்டத்தில் அரசு வாங்கிய கடன்கள் மீது சராசரியாக 7.97
சதவிகிதம் வட்டி செலுத்தப்பட்டு இருக்கிறது.
மாநிலத்தில்
பாசன திட்டங்களை முடிப்பதில் அளவு கடந்த தாமதம் செய்யப்பட்டதால் மூலதனம்
முடங்கியது. கடந்த 2009-10-ம் ஆண்டில் பல நேர்வுகளில் ஒப்படைக்கப்பட்ட
நிதியானது மீதத்தை விட அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. இது வரவு-செலவு
திட்டக்கட்டுப்பாடு அறவே இல்லாத நிலையை காட்டுகிறது.
நிதிநிலை
மேலாண்மையில் இது போன்ற குறைபாடுகளை தவிர்க்க வரவு- செலவு
திட்டக்கட்டுப்பாடுகளை வலுப்படுத்த வேண்டும். புதிய தலைமை செயலக கட்டிட
விவகாரத்தில் பல கோடி ரூபாய் வீணாடிக்கப்பட்டுள்ளது. தலைமை செயலக கட்டிட
பணியை மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டதில் வெளிப்படையான தன்மை
கடைப்பிடிக்கப்படவில்லை. டெண்டர்கள் விட்டதில் விதிகள் மீறப்பட்டுள்ளது.
புதிய
தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை கட்டுமானப் பணிகளுக்கு ஆலோசனை வழங்க
விண்ணப்பித்தவர்களில் 7 நிறுவனங்களின் மதிப்பீட்டு குழுவால் தேர்வு
செய்யப்பட்டது. பின்னர் ஜெர்மனி நிறுவனத்தை இந்த குழு தேர்வு செய்தது.
ஆலோசனை வழங்குவதற்காக இந்த நிறுவனத்துக்கு மொத்த செலவில் 5 சதவீதம்
கட்டணமாக வழங்க ஒப்பந்தம் முடியானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை தாண்டி
அதிகமாக தொகை வழங்கப்பட்டுள்ளது.
புதிய தலைமை செயலக
கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்படும் முன்பே திறப்பு விழா நடத்த முடிவு
செய்யப்பட்டது. இதற்காக தற்காலிக கூம்பு அமைத்ததில் தேவை இல்லாத வீண்
செலவு செய்யப்பட்டுள்ளது. தற்காலிக கூம்பு அமைக்கப்பட்டதில் ரூ.3.28 கோடி
வீணடிக்கப்பட்டு உள்ளது.
இந்த கூம்பு வடிவ கூரை
அமைத்து முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஒப்பந்தப்படி
குறிப்பிட்ட காலத்தில் கூம்பு அமைக்கப்படவில்லை. இதற்கு எந்தவித டெண்டரும்
கோராமல் திறப்பு விழாவுக்காக அவசர அவசரமாக கூம்பு அமைக்கப்பட்டது. இதனால்
உண்மையில் அதற்கு ஆகும் செலவை விட கூடுதலாக ரூ.2.46 கோடி கொடுக்க வேண்டிய
நிலை ஏற்பட்டுள்ளது.
இது தவிர பல்வேறு கட்டிட
பணியின் போதும் அரசின் நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. பணியை முடிப்பதில்
ஏற்பட்ட காலதாமதம், சிலவற்றின் வடிவமைப்பை மாற்றிய விவகாரத்திலும் செலவுகள்
அதிகரித்துள்ளன. ஒப்பந்தத்தை மீறி முன்தொகை வழங்கப்பட்ட விவகாரத்தில்
கட்டுமானப் பொருள்கள் சப்ளை செய்யும் காண்டிராக்டர் சட்ட விரோதமாக ரூ.10.85
லட்சம் நிதி ஆதாயம் அடைந்துள்ளார்.
இப்படி, தலைமை
செயலகம் கட்டிய விவகாரத்தில் விதிமீறல்கள் நிதி வீணடிப்புகள் செலவை
அதிகரிக்க தேவையற்ற காலதாமதம் போன்ற நேர்மையற்ற செயல்கள் நடைபெற்று
இருக்கிறது.
இலவச தொலைக்காட்சி வழங்கும் திட்டம்
கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் தி.மு.க. ஆட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டு
கடந்த 2006 முதல் 2009ம் ஆண்டு வரை ஈரோடு மற்றும் மதுரை மாவட்டங்களில்
மட்டும் 5 லட்சத்து 45 ஆயி ரத்து 847 டி.வி.க்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றில், 11 ஆயிரத்து 354 டி.வி.க்கள் மின்சார வசதி இல்லாத வீடுகளுக்கு
கொடுக்கப்பட்டுள்ளன. இந்த டி.வி.க்கள் கொள்முதல் செய்ய ஆன செலவு ரூ.2.71
கோடி. 2010-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட டி.வி.க்களின் விபரங்கள் இந்த அறிக்கை
தயாரிக்கப்படும் வரை இந்த மாவட்டங்களில் இருந்து கிடைக்கப் பெறவில்லை.
தி.மு.க.
ஆட்சியில் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தொடங்கப்பட்டது. இதற்காக
ரூ.28.28 கோடி செலவில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டன. இந்த திட்டம்
எதிர் பார்த்த பலனை அளிக்க வில்லை என்று கூறி அதன் நடவடிக்கையை
முடக்கியதால் 2010 நவம்பர் வரை அதாவது 3 ஆண்டுகளில் ரூ.8.11 கோடி நஷ்டம்
ஏற்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடங்கப்பட்ட போது
அரசு கொண்டிருந்த நோக்கம், பின்னர் செயல்படாமல் போனது. தீவிரமாக
செயல்படுத்தாததால் தான் இந்த நிதி இழப்பு ஏற்பட்டது. நவக்கிரக தலங்களில்
ஒன்றான தேவிபட்டிணம் முதல் ராமநாதபுரம் வரையிலான 11.05 கி.மீ. தூர சாலையை
தேசிய நெடுஞ்சாலையாக அறிவித்து, உலக வங்கி நிதி உதவியுடன் மேம்படுத்த தமிழக
அரசு (தி.மு.க. அரசு) முடிவு செய்தது. இந்த சாலை மேம்பாட்டு திட்டம்
ஏப்ரல் 2003-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், 2009-ல் தான்
முடிக்கப்பட்டது.
மத்திய சாலை போக்கு வரத்து
அமைச்சகம் ஏற்கனவே இந்த சாலை திட்டத்தை அறிவித்து இருந்தது. ஆனால் மாநில
அரசு முந்திக் கொண்டு இந்த பணியை தானே எடுத்துச் செய்ததால் ரூ.28.28 கோடி
தமிழக அரசு கொடுக்க வேண்டியதாயிற்று. இது தவிர்க்கப்பட வேண்டிய செலவு
ஆகும். மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தேவையற்ற காலதாமதம்
செய்யப்பட்டு இருக்கிறது.
இதே போல் தமிழக காவல்
துறையை நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.191.56
கோடி செலவழிக்கப்படவில்லை. தேவைக்கு ஏற்றவாறு, ஆண்டு செயலாக்க திட்டங்கள்
தயார்படுத்தப்படவில்லை. 2006-2009-ம் ஆண்டு காலக் கட்டத்தில் ரூ.2.52 கோடி
மதிப்பிலான கருவிகள் ஆண்டு செயலாக்க திட்டத்தில் இருந்து மாறுபட்டு
கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
ஒப்பளிக்காமை, பணிகள்
மற்றும் பணிகளை செயல் படுத்துவதில் தாமதம் ஆகியவை காரணமாக காவல் படையை
நவீனமயமாக்கல் திட்டத்தில் தேவைக்கு குறைவாகவே நிதி செலவழிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தனிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment