|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 September, 2011

தளபதி ரமேஷ் மனைவி வழக்கு-இலங்கை ராணுவ தளபதிக்கு அமெரிக்க கோர்ட் சம்மன்!


நியூயார்க் கோர்ட்டில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்குப் பகுதி கமாண்டர் கர்னல் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில், இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே 18-ந்தேதி விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே இறுதி கட்ட போர் நடந்தது. அப்போது 58-வது டிவிஷன் கமாண்டராக பணியாற்றியவர் ஜெனரல் சவேந்திரா சில்வா.

இவரது தலைமையிலான படையினர்தான் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் தஞ்சம் புகுந்திருந்த அப்பாவி தமிழர்களை கொத்துக் குண்டுகளை வீசி கொடூரமாகக் கொன்றனர். போரின் இறுதியில் ரமேஷ் தலைமையிலான கிழக்குப் படையினர், சில்வா தலைமையிலான சிங்களப் படையிடம் சரணடைந்தனர். ஆனால் அவர்களை மிகக் கொடூரமாக சித்திரவதை செய்த சிங்களப் படையினர் பின்னர் அனைவரையும் படுகொலை செய்து விட்டது. இந்த நிலையில் நியூயார்க் தெற்கு மன்ஹாட்டன் கோர்ட்டில் ரமேஷின் மனைவி வத்சலா தேவி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ராஜபக்சே நியூயார்க் வந்த சமயத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது. அதில், ராஜபக்சே, சவேந்திர சில்வா உள்ளிட்டோர் மீது போர்க்குற்றச்சாட்டு சுமத்ப்பட்டிருந்தது. தனது கணவரின் மரணத்திற்குக் காரணமான இவர்களைத் தண்டிக்க வேண்டும். தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார் வத்சலா தேவி.

இந்த மனுவுடன் இலங்கைப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயல்கள் உள்ளிட்டவற்றுக்கான பல்வேறு புகைப்பட, வீடியோ ஆதாரங்களையும், ஐநா. நிபுணர் குழுவின் அறிக்கையையும் இணைத்திருந்தார் வத்சலா தேவி. இந்த மனுவைப் பரிசீலித்த கோர்ட் தற்போது இதை விசாரணைக்கு ஏற்றுள்ளது. இதையடுத்து சவேந்திர சில்வாவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. இந்த சில்வா ஈழப் போர் முடிந்ததும்,ஐநா.வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு தற்போது நியூயார்க்கில் பணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...