|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 September, 2011

உற்சாகத்தை போக்கும் ‘கொர் கொர்’!


நாள் முழுவதும் உழைத்துக் களைத்தபின் உடல் எடுக்கும் ஓய்வே உறக்கம். ஒருசிலர் உடலை கீழே சாய்த்த உடன் உறங்கிவிடுவார்கள். ஒரு சிலருக்கு எளிதில் தூக்கம் வராது. அப்படியே தூங்கினாலும் அவர்களை அவ்வளவு எளிதில் எழுப்ப முடியாது. சிலர் அடித்து போட்டது போல் உறங்குவர். சிலர் மலர்களை போல் உறங்குவர். சிலர் கும்பகர்ணன் போல் தூங்குவர். குறட்டை விட்டு தூங்குவோர் இதில் ஒரு ரகம்.

பொதுவாக குறட்டை விடுவோர் பார்ப்பதற்கு நிம்மதியாக உலகை மறந்து உறங்குவது போல் காணப்படுவார்கள். ஆனால் உண்மையில் குறட்டை அவர்களை ஒரு வழி செய்துவிடும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அருகில் படுத்திருப்பவர்களுக்கு தொல்லை தரும். இதனால் வெளிநாடுகளில் பல தம்பதியர்கள் விவாகரத்து வரை கூட சென்ற சம்பவங்களும் நடந்ததுண்டு. இந்த குறட்டையை தவிர்ப்பது எவ்வாறு என பார்ப்போம்.

அதிக எடையால் வரும் குறட்டை: குறட்டை என்பது நாம் தூங்கும் போது, நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்று ஓய்வுக்கு உள்ளாகும் வகையில் தளர்ந்து விடும். மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. மூச்சு வெளியேறும் போது இந்த அடைப்பை மீறி காற்று வெளியேறுவதால், விதவிதமான ஒலிகளை எழுப்புகிறது. இது தான் குறட்டைச் சத்தமாக நமக்கு கேட்கிறது. உடல் பருமன், அலர்ஜியால் சுவாச குழாயில் ஏற்படும் சளி இவற்றால் குறட்டை வரும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் அதிக உடல் எடை கொண்டவர் என்றால் அதற்கும் குறட்டைக்கும் தொடர்பு உள்ளது. எனவே உங்கள் உடல் எடையை சிறிது குறைத்தால் அது குறட்டையை தவிர்ப்பதற்கு வழிவகுக்கும்.
குறட்டை தவிர்க்கும் வழிமுறைகள்: குறட்டையினை தவிர்ப்பதற்கு உகந்ததாக தற்போது பல சுவாச தைலங்கள் (வேப்பரப்) சந்தையில் வந்துள்ளன. இவற்றை பாதிக்கப்பட்டோர் தங்களது மார்பு பகுதியில் நன்றாக தடவி கொள்ளவும். இவ்வாறு செய்வதால் சுவாசம் மேற்கொள்ளும்போது காற்றானது எளிதில் மூக்கினுள் சென்று வரும். மேலும் இது மூக்கில் தடையேற்படுத்தும் கோழை போன்றவற்றை இளகச்செய்து விடும். இதனால் சுவாசம் அமைதியாகவும், எளிதாகவும் நடைபெறும்.

சிலர் தூங்கும் போது வாய் திறந்த நிலையில் இருக்கும். இது ஏனெனில் அவர்கள் காற்றினை வாய் வழியாகவும் சுவாசத்திற்கு எடுத்து கொள்வதால் நடைபெறும் ஒன்று. இதற்கென கவசம் போன்ற கருவி ஒன்று உள்ளது. இதனை பொருத்தி கொள்வதால் தூங்கும் போதும் வாயானது திறந்த நிலையில் இருக்கும். இதனால் சுவாசம் நன்கு நடைபெறும்.

குறட்டையை தவிர்ப்பதற்கு தற்போது சி.பி.ஏ.பி எனப்படும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கருவி தொடர்ச்சியாக காற்றினை சுவாசத்தில் பங்கு பெற செய்கிறது. காற்று எளிதாகவும், தொடர்ந்தும் உட்செல்வதற்கு ஏற்ற வகையில் செயல்படுகிறது. அதனால் தூக்கம் தடைபடுவதில்லை. எனினும் இத்தகைய கருவிகள் சற்று விலை அதிகம் கொண்டவை. சிலர் மூக்கின் வழியாக குறட்டை விடுவதும் உண்டு. இவர்கள் தூங்கும்போது வாய் வழியாக காற்றை சுவாசிக்க கற்றுகொண்டால் குறட்டையானது தவிர்க்கப்படும். அதற்கு உதவியாக மூக்கை கெட்டியாக பிடித்து கொள்ளும் கிளிப் போன்றவற்றை உபயோகிப்பதால் எளிதாக தூங்க இயலும்.

அறுவை சிகிச்சை: குறட்டை விடுவதில் மூக்கின் உட்புறம் அமைந்துள்ள எலும்பு பகுதியும், சதை பகுதியும் ஒழுங்காக அது அமைய வேண்டிய இடத்தில் இல்லாமல் சிலருக்கு இடம் மாறி அமைந்திருக்கும். இதனை சிறிய அறுவை சிகிச்சையின் உதவியால் எளிதில் சரி செய்து விடலாம். குறட்டையையும் தவிர்த்து விடலாம். உங்களது கழுத்தின் தசைகள் பலப்படுத்தப்பட்டு இருந்தால் பெரும்பாலும் மூச்சு விடுவதில் உள்ள சிரமம் குறையும். காற்று மூச்சு குழல் வழியே சிரமம் இன்றி பயணிக்கும். எனவே தூங்கும்போது கைகளை முகத்திற்கு எதிராக வைத்து கொள்ளவும். பின்னர் தலையினை கையின் உதவியால் எதிர்புறம் திருப்பவும். இந்த முறையை தலையின் இருபுறமும் செய்யவும். சிறிது நேர இடைவெளி விட்டு இதனை தொடரவும். இதேபோல் தலையை மேல் மற்றும் கீழ் திசைகளில் திருப்பவும். இதற்கும் சற்று இடைவெளி விடுதல் அவசியம். இவ்வாறு தூங்கும் முன் படுக்கையறையில் சிறிது நேரம் தொடர்ந்து செய்து வரவும்.

இவ்வாறு குறட்டையை தடுப்பதற்கு பல வழிகள் உள்ள போதிலும் அவரவர்களுக்கு எது சரியாக அமையும் என்பதை மருத்துவர்களிடம் தகுந்த ஆலோசனை செய்து அதன்படி கடைபிடித்தால் நன்மை பயக்கும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...