|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 September, 2011

உதடுகளால் ஓவியம்...!


கேன்வாஸ் துணியில் முத்தம் கொடுத்தே ஓவியம் வரைய முடியுமா? முடியும் என நிரூபித்துள்ளார் பிரபல பெண் ஓவியர், நாதலி ஐரிஷ் என்ற பெண்.
அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரைச் சேர்ந்த இந்த பெண், தன் உதடுகளில் சிவப்பு சாயத்தை (லிப்ஸ்டிக்) பூசி, பின்னர் அதை கேன்வாசில் பதித்தே அழகான ஓவியங்களை உருவாக்கி விடுகிறார். ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றவாறு முத்ததின் அழுத்தத்தை வேறு படுத்துகிறார். அதன் மூலம் கேன்வாசில் தேவையான வர்ணம் வந்து விடுகிறது.
இந்த ஓவியம் வரைய அவர் எந்த பிரஷ்ஷையும் பயன்படுத்துவது கிடையாது. இவ்வாறு முத்தம் மூலமே, உலக பேரழகி மர்லின் மன்றோ ஓவியத்தை வரைந்து, சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து நாதலி ஐரிஷ் கூறியதாவது:
நான் பள்ளிக்கூட நாட்களிலேயே விரல்களில் மை தடவி, அதன் மூலம் படங்களை வரையும் கலையை கற்க ஆரம்பித்தேன். அதற்கு, நல்ல வரவேற்பு கிடைத்தது. எனினும், இதற்கு முன்பும், பலர் இதே வகையில் ஓவியங்களை வரைந்துள்ளனர். எனவே, என் சொந்த படைப்பு என்ற பெருமை எனக்கு கிடைக்கவில்லை. ஏதாவது வித்தியாசமான முறையில் ஓவியம் வரைய வேண்டும் என முடிவு செய்தேன். அப்போதுதான், லிப்ஸ்டிக் மூலம் முத்தம் கொடுத்து, ஓவியம் வரைய வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதற்கு முதலில் தேர்வு செய்த ஓவியம் மர்லின் மன்றோ.
மர்லின் மன்றோ ஓவியத்தை லிப்ஸ்டிக் மூலம் வரைவதற்கு மிகவும் சிரமப்பட்டேன். என் உதடுகளும், கண்களும் சோர்ந்து விட்டன. பல லிப்ஸ்டிக், "ஸ்டிக்'குகளை பயன்படுத்த வேண்டியிருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
இப்போது, தன் முத்தம் மூலம் வேகமாக ஓவியங்களை வரையும் பயிற்சியைப் பெற்று விட்டார். டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து வரும், இவர் விரைவில் பல நாடுகளில் நடக்கும் ஓவிய கண்காட்சிகளில் கலந்து கொண்டு, சாதனை நிகழ்த்த இருக்கிறார்.
சாதனை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டால், எப்படியும் சாதனை செய்யலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு நாதலி ஐரிஷ்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...